உலகம் நம்மைப் போல் | அப்பாஜி கதைகள் | Tamil story

கிருஷ்ண தேவராயர் நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கரை கொண்டிருந்தார். 

ஒரு நாள் ராயர் தமக்கு முகசவரம் செய்து கொண்டிருந்த சவரத் தொழிலாளியிடம் நாட்டு மக்களின் நலனைப் பற்றி விசாரித்தார். 

அதற்கு அவன் “அரசே ! தங்கள் ஆட்சியில் யாருக்கும் குறை ஒன்றும் இல்லை. ஏழைகள் கூட எலுமிச்சங்காயளவு பொன் வைத்திருக்கிறார்கள்” என்றான். 

அதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பாஜி அந்த சவரத் தொழிலாளி அரண்மனைப் பொக்கிஷதாரியிடம் தனது கூலியை வாங்கச் சென்ற பொழுது அவனுடைய சவரப் பெட்டியைச் சோதித்து அதிலிருந்து எலுமிச்சங்காயளவு பொன்னை இரகசியமாக எடுத்து மறைத்து விட்டார். 

அதன் பின்னர் அப்பாஜி அதை ராயருக்கு அந்தரங்கமாகச் சொல்லிவிட்டு, “அரசே ! அடுத்த முறை அத்தொழிலாளி வரும் பொழுது நாட்டு மக்களின் நலன் குறித்து கேளுங்கள் எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்லுவான். மனிதனின் உள்ளம் எப்படியோ அப்படித்தான் உலகமும். தனக்குள்ளது உலகத்திற்கும் உண்டு! தனக்கு இல்லாதது உலகத்திற்கும் இல்லை என்று எண்ணுவது அவனது இயல்பு. 

சவரத் தொழிலாளியான இந்த மனிதனும் அதற்கு விதி விலக்கல்ல, தன்னைப் போலவே பிறரும் இருப்பார்கள் என்று நினைக்கிறான்! இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறான் !” என்று அரசரிடம் கூறினார் அப்பாஜி. 

அடுத்த முறை அந்தத் தொழிலாளி சவரம் செய்ய அரண்மனைக்கு வந்த போது ராயர் அவனிடம் தம் நாட்டு மக்களின் நலனைப் பற்றி வழக்கம் போல் விசாரித்தார். அதற்கு அவன் மிகவும் வருத்தத்துடன் “மகாராஜா ! அதையேன் கேட்கிறீர்கள் பெரிய செல்வச் சீமானாயிருந்தாலும் எல்லாம் வெளிவேஷமாகத் தான் இருக்கிறது ஒருவரிடமும் கூட சிறு எலுமிச்சங்காயளவு பொன் இல்லை” என்று சலித்துக் கொண்டான். 

உடனே அப்பாஜி அவனுடைய  எலுமிச்சங்காயளவு பொன்னைத் திருப்பிக் கொடுத்தார். ராயர், அப்பாஜியின் அறிவைப் புகழ்ந்து பாராட்டினார்.

Leave a Comment