அறம் செய விரும்பு | ஆத்திசூடி கதைகள் | Tamil kathaigal

டாண் … டாண் …. டாண் … என்று கோயிலில் மணி ஓசை கேட்டது. 

பிள்ளையாருக்கு பூஜை செய்து முடித்துவிட்டு, பிரசாத பாத்திரத்தை எடுத்துக் கொண்ட பூசாரி அருகில் இருக்கும் சத்திரத்தை நோக்கி நடந்தார். 

கோயில் பூசாரி பாத்திரத்துடன் சத்திரத்தின் உள்ளே நுழைவதைக் கண்டதும், சத்திரத்தில் படுத்திருந்த வயதான பெரியவர்கள் ஒரு சிலர் எழுந்து தள்ளாடியபடி பூசாரியை நோக்கி வந்தார்கள். 

பூசாரியும் தன் கையில் இருந்த பாத்திரத்திலிருந்து உணவையெடுத்து அவர்களின் தட்டில் போட்டார். 

அவர்களும் பூசாரியை வாழ்த்தியபடி அந்த உணவை சாப்பிடலானார்கள். பூசாரி தினமும் கோயில் பிரசர்தத்தை அந்த முதியோர்களுக்குக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

இதனை நெடு நாட்களாக கவனித்து வந்த சத்திரத்து காவலாளியானவர் ஒரு நாள் பூசாரியை நெருங்கி “ஐயா ! பூசாரியே ! சில கோயில்களில் பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை பக்தர்கள் யாரும் வாங்கவில்லை யென்றால் அதனை பூசாரிகளே தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் நீங்களோ இந்த சத்திரத்தில் இருக்கின்றவர்களுக்கு கொடுக்கின்றீர்களே! அதுவும் நாள் தவறாமல் கொடுக்கின்றீர்களே! அதன் காரணம் என்னவென்றுதான் எனக்குப் புரியவில்லை” என்று குழப்பத்துடன் கூறினான். 

அதனைக் கேட்ட பூசாரி “காவலாளியே ! இந்த பூமியில் மனிதர்களாகப் பிறந்தவர் ஒவ்வொருவரும் ஒருநாளைக்கு ஒரு தர்மமாவது செய்யவேண்டும். ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். எனக்கு வீட்டில் உணவு கிடைக்கும். ஆனால் இந்த சத்திரத்தின் அருகே இருக்கின்ற வறியவர்கள் இந்தக் கோயில் பிரசாதத்தை நம்பியே உயிர் வாழ்கிறார்கள். அதனால் நான் நாள் தவறாமல் அவர்களுக்கு பிரசாதம் கொடுக்கின்றேன். இந்த உலகத்தில் காற்று நம்மை சுவாசிக்கும்படி செய்து வாழவைக்கிறது. மழை நீரைக் கொடுக்கிறது. தாவரங்கள் உணவைக் கொடுக்கின்றன. சூரியன் வெப்பத்தைக் கொடுக்கிறது. இப்படி இயற்கைகள் எல்லாம் நமக்கு ஏதாவது ஒன்றைக் கொடுக்கின்றபோது, மனிதர்களாகிய நாம் நம் மனித இனத்தார் ஒருவருக்கு தினமும் நன்மைபயக்கும் வகையில் ஏதாவது ஒன்றைக்கொடுத்தால் தவறில்லையே !” என்று கூறினார் பூசாரி. 

அதனைக் கேட்ட காவலாளி “பூசாரி யாரே ! நான் தினமும் உணவு உண்ணும் முன்னர் காக்கைக்கு சோறு வைக்கின்றேன். அதுகூட நன்மைதரும் செயல்தானே !” என்று கேட்டார். 

உடனே பூசாரி “கண்டிப்பாக நன்மை தரும் செயல்தான். அதிலும் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பது, எல்லாவற்றையும் விட நன்மை தரும் செயலாகும். நாம் பிறருக்கு செய்கின்ற தர்மம்தான் நம்மை வாழவைக்கும். அதனால் நாம் எந்நாளும் மறவாமல், பிறருக்கு நன்மை செய்தே வாழ வேண்டும்” என்று கூறினார். 

சத்திரத்துக் காவலாளியும் பூசாரியின் கருத்தை உண்மைதான் என்று ஏற்றுக் கொண்டார். நன்மை என்ற அறம் செய்ய ஆசை கொள்ள வேண்டும்.

Leave a Comment