ஆறுவது சினம் | ஆத்திசூடி கதைகள் | tamil moral story

மருங்காபுரி என்ற நாட்டை மகேந்திர வர்மன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். மன்னர் மகேந்திரவர்மனுக்கு ஆதங்கன் என்பவர் முக்கிய மந்திரியாக இருந்தார்.

ஒருநாள் மன்னரும், மந்திரியாரும் அரண்மனை உப்பரிக்கையில் இரவு நேரத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். உப்பரிக்கையின் உள்ளேயிருக்கின்ற கண்ணாடிக் கதவின் வெளிச்சமானது எல்லா இடத்திலும் பிரகாசமாகத் தெரிந்தது. 

அதனைக் கவனித்த மன்னர் “மந்திரியாரே ! இந்தக் கண்ணாடிகள் எல்லாம் விசித்திரமாக ஒளியைப் பரப்புகின்றதை கவனித்தீர்களா ?” என்று கேட்டார்.. 

அதனைக் கேட்ட மந்திரி “அரசே! இந்தக் கண்ணாடிகள் ஒன்றும் விசித்திரமான ஒளியைப் பரப்பவில்லை. நிலவின் ஒளியானது, இந்தக் கண்ணாடிகளின் மீது படுவதால் தங்களின் பார்வைக்கு கண்ணாடியிலிருந்து ஒளி வீசுவது போன்று தெரிகிறது” என்றார். 

மந்திரியாரின் இந்த பதில் மன்னரை ஆத்திரமடையச் செய்தது. கோபத்துடன் மந்திரியைப் பார்த்த மன்னர் “மந்திரியாரே! என் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசிய உம்மை, என்ன செய்கின்றேன் பாரும் !” என்று கோபமாகக் கூறியவாறு தளபதியாரை அழைத்து மந்திரியின் தலையை வெட்டி எடுத்து கழுகுகளுக்கு இரையாகப் போடும்படி உத்தரவு இட்டார். 

தளபதியாரும் மன்னரின் கட்டளையை நிறைவேற்ற வேண்டி மந்திரியாரை அங்கிருந்து அழைத்துச் சென்றார். சிறிது நாட்கள் சென்றதும் பக்கத்து நாட்டு மன்னன் மருங்காபுரி நாட்டின் மீது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி படையெடுத்து சூழ்ந்து கொண்டான். பக்கத்து நாட்டு மன்னனின் படை பலத்தை நன்கு உணர்ந்த மன்னர், அவனை எப்படி எதிர்ப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

அந்த நேரம் மன்னரைத் தேடிவந்த தளபதியார் “அரசே ! நாம் நம் நாட்டில் மலை எல்லையை கடந்து பின்புறமாகச் சென்று எதிரி நாட்டு எதிரிகளின் மீது திடீர் தாக்குதல் நடத்தினால் போரில் வெற்றி பெற்று விடலாம்” என்று கூறினார். 

தளபதியாரின் ஆலோசனையைக் கேட்ட மன்னரும் அவ்வாறு சென்று, தனக்கு வெற்றி வாய்ப்பைத் தேடிக்கொண்டார். தனக்கு ஆலோசனை வழங்கிய தளபதியாருக்கு பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். 

சில நாட்களுக்குப் பின் நாட்டில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. குடிமக்கள் எல்லாம் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அந்த நேரம் மன்னர் குழப்பத்தில் ஆழ்ந்தார். 

நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை எப்படிப் போக்குவது என்று தவியாய் தவித்தார். அப்போது மன்னரைச் சந்தித்த தளபதியார் “அரசே ! நாம் நாட்டில் மேற்கு கரையோர நிலப்பரப்பில் அதிகமாக நீர் ஊற்று காணப்படுகிறது. அந்த நிலப்பரப்பில் பெரியகுளம் ஒன்றினை வெட்டினால் நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து விடலாம்” என்றார்.

தளபதியாரின் யோசனை மன்னருக்கு புத்துணர்ச்சியை அளித்தது. உடனே குளத்தை வெட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். தளபதியார் கூறியபடியே குளம் நிரம்ப தண்ணீர் பெருகியது. அங்கிருந்து பல கிராமங்களுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார் மன்னர். 

அடுத்தநாள் அரசவை கூடியதும் மன்னர் தளபதியாரை அழைத்தார். “தளபதியாரே ! நல்ல ஆலோசனை வழங்கும் நீர் தளபதியாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் உம்மை என்னுடைய முக்கிய மந்திரியாக நியமிக்கிறேன்” என்றார். 

அதனைக் கேட்ட தளபதியார் “அரசே ! மன்னிக்க வேண்டும். நான் கூறிய ஆலோசனைகள் எல்லாம் என் மூளையில் உதித்தவைகள் அல்ல. அவை எல்லாம் இன்னொருவரின் மூளையில் உதித்தவை” என்று அடக்கத்துடன் கூறினார். 

அதனைக்கேட்ட மன்னர் ஆச்சர்யத்துடன் தளபதியாரை நோக்கினார். “தளபதியாரே ! இந்த ஆலோசனைகளுக் கெல்லாம் சொந்தக்காரரை நான் உடனேயே பார்க்க வேண்டும். அவரையே எனது முக்கிய மந்திரியாக நியமிக்க விரும்புகிறேன்” என்று கூறினார். 

உடனே தளபதியார் “அரசே ! அவர்தான் தங்களிடம் முன்பு மந்திரியாக வேலை செய்தவர்” என்று கூறினார்.

அதனைக்கேட்ட மன்னர் திகைப்படைந்தார். “தளபதியாரே நீர் என்ன சொல்கிறீர் ? மந்திரியார் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றாரா ?” என்று ஆச்சர்யமாகக் கேட்டார். 

உடனே தளபதியும் “அரசே ! தாங்கள் ஆத்திரப்பட்டபடி நானும் ஆத்திரப்பட்டு கோபத்தில் மந்திரியாரின் தலையை வெட்டி எறிந்து இருந்தால் இன்று நம் நாடு தண்ணீர்ப் பஞ்சத்தில் சிக்கியிருக்கும். 

அதே நேரம் பக்கத்துநாட்டு மன்னனுக்கு அடிமையாகி நீங்களும் கைதாகி சிறையில் இருக்கின்ற சூழ்நிலை அமைந்திருக்கும். அதனால்தான், மந்திரியாரை கொல்லாமல் அவரை மறைவாக வைத்திருந்தேன்” என்று கூறினார்.

அதனைக்கேட்ட மன்னர் மந்திரியாரை அழைத்து வரும்படி கூறி, மந்திரியார் வந்ததும் அவரிடம் மன்னிப்புக்கேட்டு மீண்டும் தனது முக்கிய மந்திரியாக வைத்துக் கொண்டார். 

தனது ஆத்திரத்தையும் கோபத்தையும் அன்றோடு விட்டொழித்தார். கோபத்தை கட்டுப்படுத்தியபடி வாழ வேண்டும். அப்போது தான் மேல் நிலையை அடைய முடியும்.

Leave a Comment