கிருஷ்ண தேவராயரும், அப்பாஜியும், நாட்டு நடப்புகளை அறிய மாறுவேடத்தில் நகர்வலம் வருவார்கள்.
அன்று, இரவு முழுவதும் மழை பெய்தது. மறுநாள் பொழுது விடிந்து மழையும் ஓய்ந்தது. ராயரும் அப்பாஜியும் வெள்ளத்தின் விளைவைக் காண சென்றனர். அங்கே ஓர் ஆடு மேய்க்கும் இளைஞன் தன் ஆட்டு மந்தையை ஒருபுறம் மேயவிட்டு ஓடும் மழை நீரிலே தன் தலைக்குக் கீழே தனது கையை தலையனைபோல் வைத்துக் கொண்டு வெள்ளத்திலே தலை ரோமம் நனைந்து அலைபுரள மெய்மறந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
அதைக்கண்டு ராயர் வியந்து, “அப்பாஜி இந்த நிலையிலே ஒருவன் சுகமாகத் தூங்க முடியுமா ? நமக்கு ஜன்னல் கதவு திறந்திருந்தால் குளிரும் காய்ச்சலும் வந்து விடுகிறது. இந்த ஆடுமேய்க்கும் இளைஞனோ, ஓடும் மழை வெள்ளத்தின் மேல் பஞ்சனையில் தூங்குவதுபோல் சுகமாகத் தூங்குகிறானே! எப்படி இது சாத்தியம்” என்றார்.
அதற்கு அப்பாஜி “அரசே ! உத்தியோகத்திற்கு ஏற்ற சுகம் ! உடல் அமைப்புக்கு ஏற்ற குணம் ! உணவிற்கு ஏற்ற உடல். இதுதான் உலக நடப்பு ! இந்த ஆடு மேய்ப்பவனும் அரண்மனையிலே பெரிய பதவி பெற்று பாலும், சோறும் உண்டு மிருதுவான பஞ்சனையில் உறங்கி ஆனந்தமாக வாழ்ந்து உடம்பில் காற்றும் மழையும் பனியும் படாமல் சில காலம் இருந்து வருவானேயாகில் இவனுக்கும் காய்ச்சலும் ஜலதோஷமும் பிடிக்கத்தான் செய்யும் !” என்றார்.
அப்பாஜியின் பதில் ராயருக்கு விநோதமாக இருந்தது என்றாலும் அதைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பினார். அதுபோல ஆடுமேய்ப்பவனுக்கு அரண்மனையிலே பெரிய பதவி கொடுத்து அரச போகங்களில் சிலகாலம் வைத்திருந்து விட்டு, அவன் குடிசைக்குத் திருப்பி அனுப்பினார். ஆடு மேய்க்கும் இளைஞன் அவனது குடிசையினுள்ளே நுழையும் போது வாசலில் ஈரவாழை மரப்பட்டைகள் அப்பாஜியின் உத்தரவுப்படி போடப்பட்டிருந்தது. அவற்றை மிதித்துக் கொண்டு நடந்து போனான் அந்தப்பட்டைகளிலுள்ள குளிச்சியை அவனுடைய பாதங்கள் தாங்க முடியாமல் அவனுக்கு ஜலதோஷமும், காய்ச்சலும் பிடித்துக் கொண்டு விட்டது. மிகவும் அவதிப்பட்ட அவனுக்கு இராஜவைத்தியம் பார்த்துக் குணப்படுத்தினார் ராயர்.
தம்முடைய மதி மந்திரி அப்பாஜி கூறிய நடைமுறை அனுபவம் உண்மைதான் என்பதை உணர்ந்து அப்பாஜியைப் பாராட்டினார் ராய்.