எதிரியால் ஏற்பட்ட விளைவு | நீதிக் கதைகள் | Tamil story

ஒரு காட்டுக்கு நடுவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் ஒரு மரத்தில் ஒரு கொக்கு தன் மனைவியுடன் வசித்து வந்தது. ஒவ்வொரு முறையும் பெண் கொக்கு கூடுகட்டி முட்டைகளை இடும் போதெல்லாம் ஒரு பெரிய கருநாகம் அவற்றை உண்டு சென்றது. கொக்கும் அதன் மனைவியும் மிகவும் துயருற்று இருந்தன. கொக்குக்கு ஒரு நண்டு நண்பனாக இருந்தது. 

ஒரு நாள் கொக்கு நண்பனிடம் சென்று தன் பிரச்சினையைத் துயரத்துடன் கூறியது. 

“அந்தப் பொல்லாத திருடன் அடிக்கடி எங்கள் முட்டைகளைத் தின்று விடுகிறான். இதைத் தடுப்பதற்கு எனக்கு ஒரு வழியும் தெரியவில்லையே” என்று வருத்தத்துடன் நண்டிடம் முறையிட்டது. கவலைப்படாதே, என்று நண்டு அதைச் ஆறுதல்படுத்தி, பிறகு கூறியது: “என்னைப் போல் ஒரு நண்பன் இருக்கும்போது வருந்த வேண்டாம். யோசித்து நாம் ஒரு தீர்வைக் கண்டு பிடிப்போம்.” 

கொக்கின் அருகில் உட்கார்ந்து நண்டு யோசனை செய்தது. திடீரென்று துள்ளிக் குதித்து, “நண்பனே ! ஓர் அருமையான திட்டம் தோன்றி இருக்கிறது,” என்ற நண்டு கொக்கின் காதில் தன் திட்டத்தைக் கூறியது.

அதைக் கேட்டு மகிழ்ந்த கொக்கு உடனே தன் கூட்டிற்குப் பறந்து சென்றது. தன் மனைவியிடம் நண்டின் திட்டத்தை விவரித்தது. 

அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அது மிகவும் துடிப்பாக இருந்தது. “நீ கூறுவதைப் போல் இதை நிறைவேற்ற முடியுமா?” என்று அதன் மனைவி கேட்டது. 

“நாம் செய்வதில் ஏதாவது தவறாக நிகழ்ந்து விடுமோ ? மீண்டும் நன்றாக யோசித்துப் பிறகு திட்டத்தைச் செயல்படுத்து,” என்று எச்சரித்த மனைவியின் சொற்களை அலட்சியப்படுத்தியது அந்தக் கொக்கு. திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதில் அது ஆவலாக இருந்தது. 

கொக்கு ஆற்றங்கரைக்குச் சென்றது. மீன் பிடிக்கத் தொடங்கியது. நிறைய சிறிய மீன்களைப் பிடித்தது. ஒரு கீரி வசித்து வந்த ஒரு பொந்துக்கருகில் சென்று ஒரு மீனைப் போட்டது. சிறிது தொலைவு சென்று மற்றொரு மீனைக் கீழே போட்டது. இவ்வாறு வரிசையாக மீன்களைப் போட்டவாறு தான் கூடு கட்டியிருக்கும் மரத்தருகில் வந்து முடித்தது. 

மீன் வாசனையை முகர்ந்தவாறு பொந்திலிருந்து வெளியே வந்தது கீரி. “ஆ, இதோ ஒரு மீன் !” என்று கத்தியவாறே மகிழ்ச்சியுடன் உடனே அந்த மீனை எடுத்துத் தின்றது. 

அடுத்தது, அடுத்தது என்று வரிசையாகக் கீழே கிடந்த மீன்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தின்றவாறே கொக்குகளும் பாம்பும் இருந்த மரத்தினடியில் வந்து நின்றது. 

அதற்குப் பிறகு அங்கு மீன் இல்லாததால் அங்கே நின்று சுற்று முற்றும் பார்த்தது கீரி. மரத்தினடியில் இருந்த கருநாகம் திடீரென்று அதன் கண்களில் தென்பட்டது. கீரியைப் பார்த்த நாகமும் சண்டைக்குத் தயாரானது. இரண்டிற்கு மிடையே பயங்கர சண்டை நீண்ட நேரம் நடைபெற்றது. 

இறுதியில் கீரி பாம்பைக் கொன்றது. இந்தச் சண்டையைக் கூட்டிலிருந்து பார்த்த கொக்குகள் பாம்பு இறந்தவுடன் நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டன.

 மறுநாள் அந்தக் கீரி அதே போல் உண்ணுவதற்கு மீன்கள் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு அதே வழியாக வந்தது. உணவு ஏதும் கிடைக்காமல் மரத்தடியை அடைந்தது. மரத்தின் மீது ஏறி ஏதாவது தின்பதற்குக் கிடைக்குமா என்று பார்த்தது. ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றிருந்த இரு கொக்குகளும் அந்த நேரம் திரும்பி வந்து கொண்டிருந்தன. மரத்திலிருந்து கீழே இறங்கும் கீரியைப் பார்த்தன. 

பறந்து சென்று கூட்டை அடைந்தன. இந்த முறை கீரி கொக்கின் முட்டைகளைத் தின்றிருந்தது ! 

“ஐயோ ! ஓர் எதிரியைப் பெறுவதற்காகத் தான் முதல் எதிரியை ஒழித்தோமா ? பாம்பை ஒழித்தோம். இப்போது கீரி நம் முட்டைகளை அழிக்கிறதே ! ” என்று கொக்கு வருத்தத்துடன் தன் மனைவியிடம் கூறியது. 

நீதி : எண்ணித் துணிக கருமம்

Leave a Comment