நரியும் போர் முரசும் | நீதிக் கதைகள் | Tamil short story

 ஒரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் கோமயா. அது மிகவும் சோம்பேறி. தன் உணவைக்கூடத் தானே தேடிக் கொள்ளாது. மற்ற இளம் நரிகள் ஓடியாடித் தங்கள் இரையைப் பிடித்தவுடன் இந்தக் கிழட்டு நரி அவர்களைத் துரத்திவிட்டு இரையைத் தானே உண்ணும். மற்ற எல்லா நரிகளுக்கும் இதன் மீது அதிகக் கோபமுண்டாயிற்று. 

கோமயாவை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டுமென்று மற்ற நரிகள் கூடித் தீர்மானித்தன. எந்த நரியுமே கோமயாவைப் போல் அவ்வளவு பெரிதாக இல்லை. அதனால் தனியாக யாராலும் அதை எதிர்க்க முடியவில்லை. 

கோமயா நமக்கு மிகவும் தொல்லை கொடுக்கிறது, என்றது ஒரு நரி. “ஆம். நாம் முயற்சி எடுத்து இரையைப் பிடித்தால் கோமயா அங்கு வந்து அதைத் தூக்கிக் கொண்டு போகிறது.” என்றது மற்றொரு நரி.

“எனக்கு யோசனை தோன்றுகிறது. நாம் நமக்குள் முறை வைத்து இரையைப் பிடிக்க வேண்டும். ஒரு நரி இரையை உண்ணும் போது மற்ற நரிகள் கோமயாவை இரைக்கு அருகில் வரவிடாமல் தடுக்க வேண்டும். நாம் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்தால் கோமயாவால் நம்மை எதிர்க்க முடியாது.” என்று மூன்றாவதாக ஒரு நரி கூறியது. 

அதற்குப் பிறகு கோமயாவிற்கு இரை கிடைப்பது பெரிய பிரச்சினையாயிற்று. மற்ற நரிகளிடமிருந்து இப்போதெல்லாம் கோமயாவால் இரையைப் பிடுங்கிக் கொள்ள முடியவில்லை. அவை எல்லாம் ஒன்று சேர்ந்து கோமயாவைத் தாக்கி அந்த இடத்தை விட்டுத் துரத்தின. 

மேலும், காட்டின் அந்தப் பகுதியில் அந்தக் கிழட்டு நரியை வேட்டையாடக் கூட அவை அனுமதிக்கவில்லை.

 வருத்தமடைந்த கோமயா அந்த இடத்தை விட்டுச் சென்றது. மிகத் தொலைவிலுள்ள காட்டின் மற்றப் பகுதிகளில் அந்தக் கிழட்டு நரி சுற்றித் திரிந்தது. 

இறுதியில் காட்டின் எல்லைப் பகுதியை அது அடைந்தது. விரைவாக நான் உணவைத் தேடிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன், என்று எண்ணியது.

அங்குமிங்கும் அலைந்த போது போர் முடிந்து ஆளரவமற்ற ஒரு போர்க்களத்தை நரி பார்த்தது. திடீரென்று காதைப் பிளக்கும்படியாக ‘ டம் , டம் ‘ என்று ஓசை கேட்டது. கோமயாவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. மிக விரைவாகக் காட்டுக்குள் ஓடியது. சிறிது தூரம் சென்ற பிறகு நின்று சுற்று முற்றும் பார்த்தது. இப்போதும் அந்த ஓசை கேட்டது.

ஆனால், அது தொலைவில் இருந்து வந்தது. ” நான் தைரியமாக முன்னே சென்று எங்கிருந்து அந்தப் பயங்கரச் சத்தம் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும், ” என்று தீர்மானித்தது.

 கோமயா மெதுவாகப் போர்க்களத்திற்குச் சென்றது. அதன் நெஞ்சு முழுவதும் அச்சம் இருந்தாலும் முன்னேறிச் சென்றது. அங்குச் சென்றவுடன் கோமயாவிற்கு நிம்மதி ஏற்பட்டது. ஆளரவமற்ற அந்த இடத்தில் மரத்தினடியில் ஒரு போர் முரசு இருந்தது. காற்று அடிக்கும் போது, மரத்தின் கீழ்க்கிளை அந்த முரசில் மோதும் போது பெரிய ஓசை எழும்பியது என்பதைக் கோமயா புரிந்து கொண்டது. 

போர் முரசுக்கருகில் நிறைய உணவுப் பொருள்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அந்த நரி மிகவும் மகிழ்ச்சியடைந்தது ; வயிறு புடைக்க உணவை உண்டது.

“அந்தச் சத்தத்திற்குப் பயந்து நான் இங்கிருந்து ஓடியிருந்தால் இந்தச் சுவைமிக்க உணவு எனக்குக் கிடைத்திருக்காது, நான் பெரிய முட்டாளாக இருந்திருப்பேன்” என்று தனக்குள் எண்ணிக் கொண்டது நரி. 

நீதி : அச்சத்தை நீக்கு; துணிவைத் துணையாக்கு.

Leave a Comment