கழுதை அறியுமா கற்பூர வாசனை | பழமொழிக் கதைகள் | tamil short story

 

‘பிள்ளையை பெத்திருந்தா தெரியும் பிள்ளையோட அருமை… பிள்ளை பேண்டு விட்டது என்பதற்காக தொடையை அறுக்க முடியுமா?’ என்று கிராமப் புறங்களிலிருப்போர் சொல்வதுண்டு. 

குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், மற்றவர்கள்’ மலடி ‘என்று இழிவாகப் பேசுவதனை பெரிதும் கவலையாக கொள்வார்கள்.

அவர்களில் ஒருத்தியாக இருந்தவள் மேனகா. கோயில் – குளம் என்று சென்று வந்தாள். ஐம்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ‘அய்யம் பாளையம்’ என்ற ஊரில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று விரதமிருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று அங்கு புறப்பட்டாள். 

பஸ்சைவிட்டு இறங்கியவள் ஆற்றோரத்தில் இருந்த அம்மனை தரிசிக்க நடந்தாள். போகும் போது, கைக் குழந்தையுடன் வந்த பெண் ஒருத்தியும் சேர்த்து கொண்டாள்.

 ஒரு சமயம்,

இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர். இடையில் தாயின் புடவையில் குழந்தை மலம் கழித்து விட்டது. மேனகாவிடம் குழந்தையினை கொடுத்து’ கொஞ்சம் பிடியுங்க… ஆற்றில் இறங்கி என் புடவையைச் சுத்தம் செய்து வந்து வாங்கிக் கொள்கிறேன்’ என்றாள்.

மேனகாவுக்கு குழந்தையின், கால்கள், தொடைகளிலிருந்த மலம், அவளுக்குக் கொஞ்சம் அருவருப்பைத் தந்தது. “ஐயய்யோ! குழந்தை அசிங்கம் பண்ணி வச்சிருக்கு. நான் இதை எப்படி பிடித்துக் கொள்ள முடியும்?” என்று முகத்தைச் சுளித்தவாறு கூறினாள்.

வேறு வழியில்லாமல் குழந்தையின் தாய், குழந்தையைத் தரையில் படுக்க வைத்து விட்டு, ஆற்றில் இறங்கிப் புடவையைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள்…. ஒரு துணியினைக் கொண்டு குழந்தையின் கால்களிலிருந்த மலத்தைத் துடைத்து சுத்தப்படுத்திக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தவள், அங்கிருந்த குழாயில் நன்கு சுத்தப்படுத்தினாள்.

 பின்பு, குழந்தையினைத் தூக்கிக் கொண்டு அம்மனைத் தரிசித்து விட்டு, ஊருக்கு கிளம்பி விட்டாள். மேனகா, கோயிலிலே ஒரு வாரம் தங்கி விரதமிருந்தாள்… ஏழாவது நாள் மேனகாவின் கனவில் வந்த அம்மன், “எதற்காக நீ இங்கு வந்திருக்கிறாய்?” என்று கேட்டாள். 

“குழந்தை வரம் வேண்டி வந்திருக்கிறேன் தாயே” என்றாள். 

“பெண்ணே! நீ என் சந்நிதானத்திற்கு வருவதற்கு முன்னே உனக்கொரு சோதனை வைத்தேன். அதாவது மலம் கழித்த குழந்தையினை உனது கையிலே கொடுக்கச் செய்தேன். நீ வாங்க மறுத்து விட்டாய். ‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை’ என்ற பழமொழிக்கேற்ப ஒரு குழந்தையின் அருமை உனக்குத் தெரியவில்லை. அதனால் நீ குழந்தைப் பேறு அடைவது உனக்கு நல்லதல்ல, அந்தக் குழந்தைக்கும் நல்லதல்ல.

 அதனால் என்றைக்கு குழந்தையின் அருமை தெரியும், விதத்தில் உன் மனம் பக்குவப்படுதோ, அன்றைக்கு உனக்கு குழந்தை பாக்கியம் தர்றேன்” என்று கூறிவிட்டு அம்மன் மேனகாவின் கனவிலிருந்து மறைந்து விட்டாள்.

 மிகவும் மனவேதனைப் பட்டவளாக, குழந்தையை அசிங்கமாக நினைத்ததினால் இந்த நிலை ஏற்பட்டு விட்டதே என்று மனம் வருந்தியவாறு மேனகா…. வீட்டிற்குப் புறப்பட்டாள்.

Leave a Comment