விறகு வெட்டியின் துணிச்சல் | நீதிக் கதைகள் | Tamil moral story

 ஒரு சமயம் ஒரு காட்டில் விலங்குகளுக்கு அரசனாக ஒரு சிங்கம் இருந்தது. அது எங்குச் சென்றாலும் ஒரு காகமும் நரியும் அதன் உடன் செல்லும்; வேட்டையாடி இரையைப் பிடித்துச் சிங்கம் உண்ட பிறகு மிச்சம் மீதி இருப்பதைக் காகமும் நரியும் உண்ணும். 

காட்டுக்கு அருகில் இருந்த கிராமத்தில் விறகு வெட்டும் தொழிலாளி ஒருவன் வசித்து வந்தான். தினமும் மரம் வெட்டுவதற்காகத் தன் கோடரியுடன் அவன் காட்டிற்குள் செல்வான். 

ஒரு நாள் அவன் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தபோது தன் பின்னால் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அருகில் ஒரு சிங்கம் நேராக இவனைப் பார்த்தவாறு பாய்வதற்குத் தயாராக நின்றிருந்தது. 

அவன் அறிவு நிறைந்தவன். உடனே “வணக்கம், காட்டுக்கு அரசனே ! உங்களைக் கண்டதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தைரியமாகக் கூறினான்.

வியப்படைந்த சிங்கம், “என்னைக் கண்டதில் மகிழ்ச்சி அடைகிறாயா ? என்னைக் கண்டு நீ அஞ்சவில்லையா ?” என்று கேட்டது. 

“உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. ஒரு நாள் உங்களை இங்குச் சந்திப்பேன் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம் என் மனைவி மிக நன்றாக உணவு சமைப்பாள். அவள் சமைக்கும் பருப்பு, காய்கறி பதார்த்தங்களை நீங்கள் சுவைத்து உண்ண வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றான். 

“பருப்பும், காய்கறியுமா ? நான் மாமிசம் மட்டும்தான் உண்பேன் என்பது உனக்குத் தெரியாதா ?” என்று அதிக வியப்புடன் வினவியது சிங்கம். 

“என் மனைவி சமைத்ததை உண்டால் பிறகு நீங்கள் மாமிசம் உண்பதை நிறுத்தி விடுவீர்கள்” என்று பெருமையுடன் கூறினான்.

சிங்கம் விறகுவெட்டி அளித்த உணவை ஏற்றுக் கொண்டது. ‘நல்ல வேளையாகக் காகமும் நரியும் என்னுடன் இப்போது இல்லை இருந்தால் என்னைப் பார்த்து அவை சிரித்துக் கேலி செய்யும்’ என்று சிங்கம் எண்ணியது. சுவையாக விறகுவெட்டியின் உணவு இருப்பதை அறிந்து அந்தச் சிங்கம் மிகவும் வியப்படைந்தது.

“இவ்வளவு சுவையான நல்ல உணவை இதுவரை நான் உண்டதேயில்லை” என்று அவனிடம் கூறியது. 

“அரசனே, தினமும் நான் கொண்டு வரும் உணவை நீங்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ள இங்கு வர வேண்டும். ஆனால் நமக்கிடையே உள்ள இந்த நட்பை வேறு யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது. நீங்கள் மட்டும் தனியாக வர வேண்டும்” என்று பணிவுடன் விறகுவெட்டி கேட்டுக் கொண்டான். 

தினமும் அவன் அளிக்கும் உணவை உண்பதாகச் சிங்கம் அவனுக்கு உறுதி அளித்தது. வழக்கத்திற்கு மாறான அவர்களுடைய நட்பு நாளாக நாளாக வலுவடைந்து வந்தது. 

சிங்கம் ஏன் வேட்டையாடுவதை நிறுத்திக் கொண்டது என்பதையறிய காகமும் நரியும் ஆவலாக இருந்தன. 

“அந்தச் சிங்கம் இனிமேல் வேட்டையாடவில்லை என்றால் நாம் இருவரும் பட்டினியால் இறந்து விடுவோம்” என்று நரி வருத்தத்துடன் கூறியது.

“நீ சொல்வது சரியே !” என்ற காகம் “சிங்கத்திற்கு என்னவாயிற்று என்பதை அறிய நாம் முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறியது. 

மறுநாள் அவை இரண்டும் சிங்கத்தைச் சற்று இடைவெளிவிட்டுப் பின் தொடர்ந்தன. விறகுவெட்டி கொண்டு வந்த உணவைச் சிங்கம் உண்பதைக் கண்டன. 

“ஓ, இந்தக் காரணத்தால்தான் சிங்கம் இப்போதெல்லாம் வேட்டையாடப் போவதில்லையா ?” என்று நரி கூறியது. 

தொடர்ந்து, “சிங்கம் அதனுடைய உணவை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்படியாக நாம் செய்ய வேண்டும். பிறகு, விறகுவெட்டியுடன் அதற்கு இருக்கும் நட்பை நாம் முறிக்க வேண்டும். அப்படிச் செய்தால், சிங்கம் மறுபடியும் இரையைத் தேடி வேட்டையாடத் துவங்கும்” என்று திட்டம் தீட்டியது, வஞ்சகத்துக்குப் பேர் போன நரி. 

அன்று மாலை சிங்கம் அதன் குகைக்குத் திரும்பியபோது காகமும் நரியும் அதை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தன. 

“தலைவரே, எங்களை ஏன் மறந்துவிட்டீர்கள் ? முன் போல நாமெல்லாரும் ஒன்றாக வேட்டையாடச் செல்வோமே” என்று காகமும் நரியும் சிங்கத்திடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டன.

“இல்லை. நான் ஒரு நண்பனைச் சந்தித்தேன். அதன் பிறகு என் பழைய வழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். இப்போது நான் மாமிசம் சாப்பிடுவதை அறவே ஒழித்து விட்டேன்” என்று அவர்களுக்குச் சிங்கம் பதிலளித்தது.

“அப்படியானால் உங்களுடைய நண்பனை நாங்களும் சந்திக்கலாமா ?” என்றது காகம். 

மறுநாள் விறகு வெட்டி சிங்கத்தின் வருகைக்காகக் காத்திருந்தான். திடீரென்று புதிய குரல்கள் கேட்டன. விறகு வெட்டி எந்நேரமும் கவனமாக இருப்பான், புத்திசாலியும் கூட. 

உடனே அவன் உயரமான ஒரு மரத்தின் மீது ஏறினான். தொலைவில் சிங்கம் வருவதைக் கண்டான். அதனுடன் ஒரு காகமும் நரியும் வந்து கொண்டிருந்ததையும் பார்த்தான். அவை இரண்டும் உடன் வருவதால் சிங்கத்தோடு எனக்கு ஏற்பட்டிருக்கும் நட்பு அதிக நாள்களுக்கு நீடிக்காது என்று தனக்குள் கூறிக்கொண்டான். 

சிங்கம் மரத்தின் அருகில் வந்து விறகு வெட்டியைக் கூப்பிட்டது. “கீழே இறங்கி வந்து எங்களுடன் சேர்ந்து கொள். உன்னுடைய நண்பனான நான் வந்திருக்கிறேன்” என்று சிங்கம் அவனை அழைத்தது.

“நீங்கள் என்னுடைய நண்பனாக இருக்கலாம். ஆனால், நீங்கள் எனக்கு அளித்த உறுதிமொழியை மீறிவிட்டீர்கள். நீங்கள் உறுதிமொழியை மீறும் படியாக அவர்கள் இருவரும் செய்துள்ளார்கள். அப்படியானால் நீங்கள் என்னைக் கொல்லும் படியாகவும் அவர்களால் செய்ய முடியும். அதனால் நம்முடைய நட்பை நீங்கள் மறந்து விடுவதே சிறந்தது” என்று தைரியத்துடன் விறகுவெட்டி சிங்கத்திடம் கூறினான். 

நீதி : துணிவும் விவேகமும் உயிரைக் காக்கும் !

Leave a Comment