நாவிதனின் பேராசை | நீதிக் கதைகள் | Tamil moral story

ஒரு சிறிய நகரத்தில் மணிபத்திரன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தான். அவனும் அவன் மனைவியும் அன்பும் உதவும் குணமும் கொண்டவர்கள். அந்த நகரத்திலுள்ள அனைவரும் அந்தத் தம்பதியைப் பற்றி அறிவார்கள். அவர்களுடைய விருந்தோம்பும் பண்பால் அனைவரும் மகிழ்வடைந்தனர்.

 ஒரு முறை கடலில் சென்று கொண்டிருந்த மணிபத்திரனின் எல்லாக் கப்பல்களும் புயலால் சேதமடைந்தன. அவற்றில் விலை மதிப்பற்ற சரக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. அவை எல்லாம் அழிந்து போயின. வியாபாரத்திற்காக அவனுக்குக் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் உடனே பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு அவனை வற்புறுத்தினார்கள். தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் கடனை விற்று அவன் அடைக்க வேண்டியதாயிற்று. முடிவில் அவன் எல்லாவற்றையும் இழந்து பரம ஏழையானான். செல்வம் அவனை விட்டுச் சென்றதும் அவனுடைய நண்பர்களும் அவனை விட்டுச் சென்றனர். 

மணிபத்திரன் அதை நினைத்து மிகவும் மனம் வருந்தினான். ‘ என்னுடைய நண்பர்களும் என்னை விட்டுச் சென்று விட்டனரே ! அவர்கள் என்னுடைய செல்வத்தைத் தான் விரும்பி இருக்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறது, ‘ என்று எண்ணி வருத்தமடைந்தான். வறுமையையும் துக்கத்தையும் தவிர என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்க என்னிடம் எதுவுமில்லையே. அவர்கள் துன்பப்படுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வது ஒன்றுதான் சிறந்த வழி. இப்படிப்பலவாறு எண்ணிக் கவலைப்பட்டவாறே மணி பத்திரன் உறங்கிப் போனான்.  அன்று இரவு அவனுக்கு ஒரு விசித்திரமான கனவு தோன்றியது. ஒரு துறவி அவன் கனவில் தோன்றி, ” என் தலையை நீ ஒரு குச்சியால் தொட்டால் உடனே பிறவிகளுக்குத் தேவையான அளவு தங்கக்காசுகளாக நான் மாறுவேன், ” என்று கூறினார். அதே கனவில் மணிபத்திரன் அந்தத் துறவியைக் குச்சியால் தொடுவது போலவும் துறவி உடனே தங்க நாணயக் குவியலாக மாறுவதாகவும் காட்சிகளைக் கண்டான்.  காலையில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு மணிபத்திரன் கண் விழித்தான். ‘ என்னுடைய கனவு ஈடேறுமா ? நான் மறுபடியும் செல்வனாவேனா ? ‘ என்று மணிபத்திரன் தனக்குள் எண்ணிக் கொண்டான். ” நாவிதன் உங்களைக்காண வந்திருக்கிறான், என்று அவன் மனைவி கூறினாள். ‘ கனவு உண்மையாகும் என்று நான் நினைத்தது முட்டாள்தனமல்லவோ ? அது ஒரு நாளும் உண்மையாகாது, என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

 முடிதிருத்திக்கொள்வதற்காக நாவிதனின் முன்பு மணிபத்திரன் அமர்ந்து கொண்டான். மறுபடியும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. மணிபத்திரன் எழுந்து கதவைத் திறந்தான். என்ன ஆச்சரியம் ! ஒரு துறவி மௌனமாகப் பொருள் பொதிந்த பார்வையோடு அங்கு நின்றிருந்தார். மணிபத்ரன் திக்பிரமை பிடித்தவனாக , ஒரு குச்சியைக் கையிலெடுத்து அந்தத் துறவியின் தலையில் தொட்டான். உடனே அவன் எதிரில் தங்க நாணயங்கள் குவியலாகத் தோன்றின. இதைக் கண்டு மணிபத்திரன் மிகவும் மகிழ்ச்சி யடைந்தான். நிறைய அளவு தங்க நாணயங்களை நாவிதனுக்கும் கொடுத்தான். 

பின்னர், நடந்தவற்றை யாரிடமும் கூற வேண்டாம் என்று அறிவுரை கூறி நாவிதனை அனுப்பி வைத்தான் மணிபத்திரன். அந்த நாவிதன் ஒரு பேராசை பிடித்தவன் மட்டுமல்லன் ; முட்டாளும் கூட அப்படியானால், துறவிகளின் தலையில் குச்சியால் அடித்தால் அவர்கள் தங்க நாணயங்களாக மாறிவிடுவார்கள், இல்லையா ? பணக்காரனாவது எப்படி என்று இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது. தினம் தினம் சவரம், முடி திருத்துவது போன்றவற்றைச் செய்து ஒன்றிரண்டு காசுளைப் பெறுவது எனக்கும் அலுத்துவிட்டது. விரைவில் நானும் செல்வனாக வேண்டும், என்று தனக்குள் எண்ணிக் கொண்டான். மணிபத்திரன் கொடுத்த காசுகளைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து முகச் அகன்றான்.

ஒரு மடாலயத்திற்குச் சென்று அங்குள்ள சில துறவிகளைத் தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தான். அந்தத் துறவிகள் அவனுடைய வீட்டிற்குள் வந்தவுடன் நாவிதன் ஒரு குச்சியை எடுத்து அவர்கள் தலையில் அடிக்க ஆரம்பித்தான். பரிதாபமான அந்தத் துறவிகள் திகைத்துப் போய் விட்டனர் அவர்களுள் ஒரு துறவி, நாவிதனின் வீட்டிலிருந்து தப்பித்து வெளியே வந்தார். சிப்பாய்களை உதவிக்கு அழைத்தார். சிப்பாய்கள் நாவிதனைக் கைது செய்து நீதிபதி முன் அழைத்துச் சென்றனர். ஏன் அந்தத் துறவிகளை நீ குச்சியால் அடித்தாய் ? என்று நீதிபதி நாவிதனைக் கேட்டார். ” மணிபத்திரன் ஒரு துறவியை அடித்ததும் அவர் பொற்குவியலாக மாறினாரே ? ” என்று நாவிதன் விடையளித்தான்.

நீதிபதி மணிபத்திரனை அங்கு வர வழைத்தார். நாவிதன் சொல்வது உண்மையா என்று கேட்டார். மணிபத்திரன் முழுக்கதையையும் நீதிபதிக்கு விவரமாகக் கூறினான். முழுக் கதையையும் கேட்ட நீதிபதி, நாவிதன் பேராசையோடு, நேர்மையற்ற முறையிலும் நடந்து கொண்டதைப் புரிந்து கொண்டார். முட்டாள் நாவிதனுக்குத் தகுந்த தண்டனையை வழங்கினார். 

நீதி : பேராசையும் நேர்மையற்ற குணமும் பெருந்துன்பத்தை விளைவிக்கும்.

Leave a Comment