ஒரு சிறிய கிராமத்தில் கருணை மனம் கொண்ட ஓர் அந்தணன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஒரு நாள் தன் வேலையை முடித்துக்கொண்டு அருகிலிருந்த கிராமத்திலிருந்து அவன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.
வழியில் ஒரு சிறு கீரிப்பிள்ளை தன் தாயின் உயிரற்ற உடலருகில் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தான்.
“ஐயோ பாவம் ! நான் இப்போது இங்கேயே இந்த கீரிப் பிள்ளையை விட்டுச்சென்றால் இது இறந்து விடும்,” என்று எண்ணிய அந்தணன் அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.
“கௌரி, இந்தச் சிறிய பிராணியை நான் வரும் வழியில் கண்டேன். நாம் அதை வளர்க்கலாம். என்று தன் மனைவியிடம் கூறினான்.”
அப்படியே செய்யலாம். நம்முடைய குழந்தையுடன் சேர்த்து நான் கீரியையும் கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன்,” என்று உறுதி அளித்தாள் அவன் மனைவி.
அந்தணனும் அவன் மனைவியும் கீரியின் மீது அன்பும், அக்கறையும் காட்டி வளர்த்தனர். அவர்களுடைய குழந்தையோடு கீரியும் தொட்டிலில் ஒன்றாகத் தூங்கியது; பால் குடித்தது ; தவிர தினமும் குழந்தையுடன் விளையாடியது.
பிள்ளை அந்தணன் வீட்டில் நாள்களை மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்தது. கீரியும் அக்குழந்தையும் வளர, வளர, நட்பு சகோதரப் பாசமாக உருவெடுத்தது. அந்தக் கீரிப் குறிப்பாகக் அவர்களுடைய பராமரிப்பில் வேகமாக வளர்ந்தது.
திடீரென்று அந்தணனின் மனைவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. என்ன இருந்தாலும் இது ஒரு முரட்டுப் பிராணி.விரைவிலேயே தன்னுடைய சுய உருவத்தைக் காட்டுமோ ? என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள்.
இப்போதெல்லாம் கீரியின் படுக்கையைச் சற்றுத் தொலைவில் விரித்தாள். தன் குழந்தையோடு அது விளையாடும் போதெல்லாம் அதிக எச்சரிக்கையோடு அதைக் கவனித்தாள். அந்தணன் ஒரு நாள் வெளியில் சென்றிருந்தான். கௌரி ஆற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரத் தீர்மானித்தாள். தன் குழந்தை தொட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டாள். தொட்டிலுக்கு அருகில் தரையில் கீரியும் உறங்கிக் கொண்டிருந்தது.
“நான் ஆற்றுக்குச் சென்று வர அதிக நேரமாகாது. அதற்குள் இந்தக்கீரி என் குழந்தைக்கு ஒரு தீங்கையும் ஏற்படுத்தாது.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவளாக மறு முறையும் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு ஆற்றுக்கு விரைந்தாள்.
திடீரென்று ஒரு மெல்லிய சத்தம் கேட்டுக் கீரி விழித்துக் கொண்டது ; மேலே பார்த்தது ; சுவரின் ஓட்டை வழியாக ஒரு பெரிய கருமையான பாம்பு ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.
“என் தம்பிக்கு இந்தப் பாம்பு தீங்கு விளைவிக்கும். தாயும் தந்தையும் வெளியே சென்றிருக்கிறார்கள். என் தம்பியை நான் பாதுகாக்க வேண்டும்” என்று எண்ணியது கீரி.
பாம்பு தொட்டிலை நோக்கி வர ஆரம்பித்தது. தைரியமாக அந்தச் சிறிய கீரி பெரிய பாம்பின் மீது பாய்ந்து தாக்கியது. நீண்ட நேரம் கடுமையாக நடந்த சண்டையின் இறுதியில் அந்தச் சிறு பிராணி பெரிய பாம்பைக் கொன்றது. அதே நேரம் அந்தணனின் மனைவி வரும் சத்தம் கேட்டது. மகிழ்ச்சியுடன் கீரி தன் தாயிடம் ஓடிச் சென்றது.
தன்னால் முடிந்த அளவு சைகைகளின் மூலம், தன் தம்பியைப் பயங்கரமான பாம்பிடமிருந்து காப்பாற்றியதைக் கீரி அவளிடம் சொல்ல முயன்றது. ஆனால், கௌரி கீரியின் வாயிலும் கால்களிலும் முதலில் இரத்தத்தைக் கண்டாள். அது என்ன சொல்ல வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.
“என்னுடைய குழந்தையை இந்த மோசமான பிராணி கொன்று விட்டது,” என்று எண்ணிக் கோபமடைந்தாள். ஆத்திரத்துடன் தண்ணீர் நிரம்பிய குடத்தை அதன் மீது போட்டாள் ; கீரிப்பிள்ளை துடிதுடித்து இறந்தது.
பதைபதைப்போடு வீட்டினுள் நுழைந்தாள். அவளுடைய குழந்தை தொட்டிலில் இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு வியப்புற்றாள். தரையில் துண்டிக்கப்பட்ட தலையுடன் ஒரு பாம்பின் உடல் கிடப்பதையும் கண்டாள்.
“ஐயோ , அறிவில்லாமல் என்ன காரியம் செய்துவிட்டேன் ! என் அருமைக் குழந்தையின் விலை மதிப்பற்ற உயிரைக் காப்பாற்றிய நன்றியுள்ள அந்தச் சிறிய கீரியை நானே கொன்றுவிட்டேனே !” என்று கதறியழுதாள்.
நீதி : ஆத்திரம் அறிவை மயக்கும்.