யார் சிறந்தவன்? | அப்பாஜி கதைகள் | Tamil story

டில்லி பாதுஷா திரும்பவும் ஒருமுறை அப்பாஜியின் அறிவைப் பரிசோதிக்க விரும்பினார்.

அதன்படி ஒரே மாதிரியாக உள்ள மூன்று வெண்கலச்சிலைகளை ராயரது சபைக்கு அனுப்பி “இம்மூன்று சிலைகளிலுள்ள மனிதரின் உருவங்களில் யார் உத்தமன், யார் மத்திமன், யார் அதமன் என்பதைக் கண்டுபிடித்து அந்த சிலைகளில் எழுதி திருப்பி அனுப்ப வேண்டும். அப்போதுதான் விஜயநகர அரசின் அறிவை நாங்கள் மதிப்போம் !” என்று தனது தூதர்களிடம் சொல்லி அனுப்பினார். 

ஒரேமாதிரியான மூன்று சிலைகளையும் கவனித்து ராயர் வியப்படைந்து அச்சிலைகளை தம் சபையில் வைத்து அவற்றின் குணாதிசயங்களை சோதித்துக் கூறும்படி கட்டளையிட்டார். 

மூன்று சிலைகளும் ஒரு சிறிதும் உருவ வேறுபாடின்றி ஒன்று போலவே இருந்தமையால் முடிவு சொல்ல முடியாமல் சபையினர் திண்டாடினர். 

கடைசியில் அப்பாஜி அம்மூன்று சிலைகளையும் கூர்ந்து கவனித்த போது மூன்று சிலைகளின் காதுகளிலும் துவாரமிருப்பது அவருக்கு தெரிந்தது. உடனே மெல்லிய ஈர்க்குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு முதல் சிலையில் உள்ள காது துவாரத்தில் நுழைந்தார். அந்தக் குச்சி வாய்வழியாக வந்து வெளிப்பட்டது. திருப்தி அடைந்த அப்பாஜி, அடுத்த சிலையில் அதே குச்சியை ஒரு காதுக்குள் நுழைத்த போது அது மற்றொரு காது வழியாக வந்து வெளிப்பட்டது. கடைசியாக மூன்றாவது சிலையின் காதுக்குள் விடப்பட்ட குச்சி வெளியே வரவில்லை உள்ளுக் குள்ளே தங்கி விட்டது. உடனே அப்பாஜி புன்னகையுடன் விவரித்தார்.

 ஒரு காதில் தான் இரகசியங்களை வாயால் வெளிப்படுத்துபவன் அதமன் ! அந்த இரகசியத்தை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதின் வழியாக விட்டு விடுபவன் மத்திமன் ! மற்றவர் சொன்ன இரகசியத்தை வெளியே விடாமல் உள்ளுக் குள்ளேயே அடங்கி வைப்பவன் தான் உத்தமன் !”  அவனே சிறந்தவன் என்று மூன்று சிலைகளின் கீழ் முறையே ” அதமன், மத்திமன், உத்தமன் ! ” என்று எழுதி அனுப்பினார். 

அதைக் கண்ட டில்லி பாதுஷா அப்பாஜியினது அறிவாற்றலை எண்ணி அசந்து போனார்.

Leave a Comment