சாம்பலும், ரோமமும் | அப்பாஜி கதைகள் | Tamil story

பட்டத்து ராணி தனது தம்பியை பிரதம மந்திரியாக்க விரும்பினாள். அதற்காக ராயரிடம் தொடர்ந்து நச்சரித்து வந்தாள். அரசியின் தொல்லை பொறுக்காத ராயர் ஒரு நாள் அந்தப்புரத்தில் தம் ராணி அருகில் இருக்கும்போது சிறிது சாம்பலும் ரோமமும் எடுத்து இரண்டு பொட்டலங்கள் தயாரித்தார்.

அதன் பின்னர் அப்பாஜியையும் தம் ராணியால் மந்திரி பதவிக்குச் சிபாரிசு செய்யப்பட்ட மைத்துனனையும் வரவழைத்து ஒரு பொட்டலத்தை தனது மைத்துனனிடம் கொடுத்து “இதைக் கொண்டுபோய் கன்னட தேசத்து ராஜனிடம் கொடுத்து அவன் பதிலை பெற்றுவா” என்று அனுப்பினார். 

மைத்துனன் கன்னட தேசத்திற்குச் சென்று அரசனைப் பேட்டிக் கண்டு “எங்கள் கிருஷ்ண தேவராய மன்னர் இதை தங்களிடம் கொடுக்கச் சொன்னார் !” எனப் பொட்டலத்தைக் கொடுத்தார். 

அதைப் பிரித்துப் பார்த்த கன்னட மன்னன் கடும் கோபம் கொண்டு “கேசமும் சாம்பலும் இருக்கிறதே! இதன் உட்பொருள் என்ன ?” என்று கர்ஜித்தான். 

அதற்கு மைத்துனன் “எங்கள் விஜயநகர வேந்தருக்கு முன்னால் நீயும் ஒரு அரசனென்று பெயர் வைத்துக் கொண்டு நாடாளும் நீ சாம்பலுக்கும், ரோமத்திற்கும் ஒப்பானவர் என்பதை குறிப்பதற்காக அனுப்பியது. இது கூடவா உனக்கு புரியவில்லை” என்றார். 

அந்த பதிலை கேட்டதும் ஆத்திரமடைந்த கன்னட மன்னனின் கண்கள் சிவந்து கனல்கக்க “என்னை அவமானப்படுத்திய உன் ராயரைச் சும்மாவிட மாட்டேன். விஜயநகரத்தைச் சாம்பலாக்கி அந்நாட்டு அரசனின் தலையை மொட்டையடிக்கச் செய்வேன்!” என்று கொதித்தெழுந்து தனது மாபெரும், சேனைகளையும் திரட்டிக் கொண்டு விஜய நகரத்தின் மீது போரிடக்கிளம்பி விட்டான். 

தென் தெலுங்கு நாட்டிற்குச் சென்ற அப்பாஜியோ, ராயர் பொட்டலத்தை ஒரு நவரத்தினப் பேழையில் வைத்து சுற்றிலும் மங்கையர் சாமரம் வீச, மங்கள வாத்தியம் முழங்க நடனப் பெண்கள் ஆடிப்பாட ஆடம்பரத்துடன் அதை ஊர்வலமாக எடுத்து வந்து அதைத் தென் தெலுங்கு மன்னனிடம் கொடுத்தார். பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்த மன்னர் “இது என்ன ? சாம்பலும் கேசக்கற்றையும் இருக்கிறதே ? இதை உங்கள் மன்னர் கொடுக்கச் சொன்னதன் கருத்து என்ன ?” எனக் கேட்டார். 

அதற்கு அப்பாஜி “அரசே! எங்கள் மன்னர் செய்யும் எந்தக் காரியத்திலும் உயர்ந்த நோக்கம் இருக்கும்! எங்கள் மன்னவர் சுபக்ஷேமத்தைக் குறித்து ஓர் யாகம் செய்தார். அதன் பலனை அவர் மட்டும் அடையக் கூடாது என்பதற்காக இந்த விபூதியையும் யாகத்தின் இந்த பிரசாதத்தையும் தங்களுடைய நாட்டின் நன்மைக்காக அனுப்பினார்” என்றார்.

அதைக் கேட்டு மனங்குளிர்ந்த அந்நாட்டு மன்னன் பலவித சன்மானங்களையும் அப்பாஜிக்கும் ராயருக்கும் தந்து “ராயருக்கு எனது நன்றியைகளைத் தெரிவியுங்கள்” எனக் கூறி தனது சதுர்முக சேனை திரட்டி “இந்த மதியமைச்சரை விஜயநகரத்தில் கொண்டு போய் விட்டு வாருங்கள் !” எனக் கட்டளையிட்டு ஆடம்பரமாக அப்பாஜியை அனுப்பினான். 

அப்பாஜி வந்து சேர்வதற்குள் ராயரின் கோட்டையைக் கன்னட ராஜனனின் படைகள் வளைத்துக் கொண்டு முற்றுகைக்குத் தயாராகிவிட்டன. 

அதைக் கண்டு ராயர் “அப்பாஜி அருகில் இல்லையே !” என மனம் கலங்கினார் . அப்பாஜியோ தம்முடன் வந்த தென் தெலுங்கு மன்னரின் பெரிய சேனைகளைக் கொண்டே கன்னட ராஜனை முறியடித்து விரட்டி விட்டு, அரண்மனைக்குள் சென்று ராயரைக் கண்டு நடந்தவற்றைக் கூறினார். 

ராயர் உடனே ராணியை நோக்கி , “மகிஷியே ! ஒரே பொருள் அறிவாளியின் கண்ணில் பட்டு அனுகூலமாகவும் அறிவற்ற மூடன் கண்ணில் பட்டு ஆபத்தாகவும் மாறுகிறது பார்த்தாயா ? அறியாமையால் விளைந்த அனர்த்தத்தையும் அறிவால் வந்த ஆனந்தத்தையும் நீயே இப்போது கண்கூடாகக் கண்டாயல்லவா ? ஆகவே அறிவுள்ளவர்களே அமைச்சர் பதவிக்கு அருகதையானவர்கள் !” என்றார் . 

அவருடைய மனைவி உண்மையை உணர்ந்து அப்பாஜியின் அறிவை புகழ்ந்து விட்டு “இவருக்குப் பதிலாக கற்றறிந்த ஓர் மூடரை மந்திரியாக நியமிக்க வேண்டுமென நான் சிபாரிசு செய்ததைப் பொறுக்க வேண்டும் !” என ராயரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் .

Leave a Comment