ஏட்டுக்கல்வி | அப்பாஜி கதைகள் | Appaji story

ஒரு சமயம் வட நாட்டில் ஐந்து நிபுனர்கள் சேர்ந்து இருந்தார்கள். ஒருவர் சாஸ்திரம் ஒன்றையே கற்றுத் தேர்ந்த தர்க்கவாதி! மற்றொருவர் வியாகரணம் ஒன்றையே கற்றுத் தேர்ந்த மொழி பண்டிதர். வேறொருவர் பரத நாட்டில் சாஸ்திரத்திலும், சங்கீதத்திலும் மகா பாண்டித்தியம் உள்ளவர். மற்றொருவர் சோதிட சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். மற்றொருவர் வைத்திய மாமேதை. 

இந்த ஐந்து நிபுணர்களும் தேச சஞ்சாரம் சென்று தங்கள் திறமை வைத்து பொருளீட்ட வேண்டுமென்று எண்ணி தென்னகம் வந்து இராயரைக் கண்டு அவரவர் கற்ற வித்தைகளின் திறமையையெல்லாம் சிறப்பாக செய்து காட்டினர். 

இராயர் பெரிதும் மகிழ்ந்து அப்பாஜியிடம் அந்தரங்கமாக “இவர்கள் உண்மையிலேயே மிகவும் கெட்டிக்காரர்கள்!” என்று புகழ்ந்துரைத்தார். 

அதற்கு அப்பாஜி “அரசே ! பொறுங்கள், ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது இல்லையா, இவர்களின் அறிவு வெறும் ஏட்டின் வழிப்பட்ட தாயிருக்கலாம். அவை நடைமுறைக்கு ஒத்து வரும் என்று சொல்லமுடியாது. அவரவர் கற்ற வித்தைகளில் அதிபுத்திசாலிகளாக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் முட்டாள்களாகயிருக்கலாம் !” என்று கூறி விட்டு, “அரசே ! இதைச் சோதிக்க வேண்டு மென்றால் இவர்கள் ஐவரையும் தாங்களாகவே சமைத்துச் சாப்பிட்டுவிட்டு வரும்படி அனுப்புங்கள் !” என்றார். 

அதன்படி ராயரும் நிபுணர்கள் ஐவரையும் நன்றாக சமைத்துச் சாப்பிட்டுவிட்டு வரும்படி அனுப்பினார். அவர்களும் ஊரில் ஒதுக்குப்புறமாகவுள்ள ஓர் வீட்டில் சமைத்துண்ணத் தீர்மானித்தார்கள்.

அப்பாஜியால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் அந்த நிபுணர்கள் அறியாதபடி அவர்களின் நடவடிக்கைகளை சார்ந்து பார்க்கலாயினர். 

சங்கீதப் மாமேதை அடுப்பில் பானையை வைத்து உலை வைத்து விட்டுப் பாட உட்கார்ந்து விட்டார். 

அடுத்து தர்க்க சாஸ்திரி தொன்னையில் நெய் வாங்கிக் கொண்டு வரும் போது ” தொன்னைக்கு நெய் ஆதாரமா, நெய்க்குத் தொன்னை ஆதாரமா ?” என்று பெரியதொரு தர்க்க ஆராய்ச்சியில் இறங்கி அதைப் பரீட்சித்துப் பார்க்க தொன்னையையே தலைகீழாக கவிழ்த்துப் பார்த்தார். நெய்யெல்லாம் மண்ணில் கொட்டி விட்டது. உடனே தர்க்க சாஸ்திரி ” நெய்க்குத்தான் தொன்னை ஆதாரம் ! “என்ற பெரிய உண்மையைக் கண்டு பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் வெறுங்கையை வீசிக் கொண்டு திரும்பி வந்தார். 

தயிர் வாங்கப் போன இலக்கண இலக்கிய பண்டிதரோ தயிர்க்காரி “தயிரோ தயிரு” என்று கூவும் பொழுது இரண்டு மாத்திரையளவுள்ள கடைசி ஓகாரத்திற்கு ஏறத்தாழப் பத்து மாத்திரையளவு கொடுத்து உச்சரித்துக் கூறுவதைக் கண்டு “இலக்கணப் பிழை செய்கிறாயே பைத்தியக்காரி !” என்று அவளுடன் வெகுநேரம் வாதாடி சண்டை பிடித்துக்கோபத்துடன் தயிர் வாங்காமல் வெறுங்கையாகத் திரும்பி வந்தார். 

சாப்பிட இலை பறிக்கச் சென்ற சோதிட நிபுணர் பாதி மரத்தில் ஏறிக் கொண்டிருக்கும் போது பல்லி சொல்லியதைக் கேட்டு சாஸ்திரப்படி அதற்குப் பலன் கணித்துப் பாதி மரத்தில் ஏறுவதற்கும் இறங்கு வதற்கும் அது தடையாக இருப்பதை உணர்ந்து பாதி மரத்திலே தொங்கியப்படி இருந்து வெகு நேரம் கழித்து மரத்தை விட்டிறங்கி வெறுங்கையாகத் திரும்பி வந்தார்.

 காய்கறி வாங்கச் சென்ற வைத்தியரோ, வாழைக்காய், உருளைக்கிழங்கு வாய்வு, பயிறு தின்பது தப்பு ; என்று ஒவ்வொரு காய்கறியிலுள்ள குறைகளை ஆராய்ந்து எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளி விட்டு வெறுங்கையுடன் திரும்பி வந்தார். உலையில் அரிசியைக் கழுவிப் போட்டு விட்டு பாட உட்கார்ந்த சங்கீத விற்பன்னரோ உலை தளதளவென்று கொதிக்கிற ஓசையைக் கேட்டு அதற்குச் சரியாகத் தாளம் போட ஆரம்பித்து தாளக் கட்டுக்கு உலை கொதிக்கும் ஓசை ஒத்துவராததால் ஆத்திரத்தில் சோற்றுப்பானையைத் தூக்கிப்போட்டு பொத்தென்று உடைத்து விட்டார்.

இவ்வாறு சமைத்துச் சாப்பிட வேண்டிய ஐந்து சாஸ்திர நிபுணர்களும் சாப்பிடாமல் கடும் பசியோடு அரண்மனைக்குத் திரும்பினர். நிபுணர்களில் அங்கு நடத்திய முட்டாள் தனத்தை ஒற்றர் மூலம் இராயருக்கு எடுத்துரைத்த அப்பாஜி அந்த நிபுனர்களும் கற்றறிந்த மூடர்கள் தாம் என்று நிரூபித்துக் காட்டினார். 

அப்பாஜியின் அறிவைப் புகழ்ந்த இராயர் ஐந்து நிபுனர்களிடம் “நீங்கள் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்? ஏட்டுக் கல்வியுடன் நடைமுறைக் கல்வியும் கற்று உலகத்துடன் ஒன்றி வாழுங்கள்” என்று எடுத்துரைத்தார். பின்பு பசியோடிருந்த ஐந்து பண்டிதர்களுக்கும் அறுசுவை உணவிட்டு பொன்னும் பொருளும் வழங்கினார்.

Leave a Comment