விஜய நகரத்தை சிறப்பாக அரசாண்ட கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தில் ஒரு நாள் இராயர் தமக்கு அடங்கிய குறுநில மன்னர்களெல்லாம் தம் கொலு மண்டபத்திற்கு வந்து தம்மை சந்திக்கும்படி கட்டளை பிறப்பித்தார். ஆனால் சிற்றரசர்களில் ஒருவன் மட்டும் தனக்குப் பதிலாகத் தன்னுடைய மதி மந்திரியை அனுப்பியிருந்தான், சிற்றரசர்கள் வரிசையாக சக்கர வர்த்தியை வணங்கி வரும்போது கடைசியாக ஒரு சிற்றரசரின் மந்திரி வந்து மன்னரை வணங்கினார். ” நீர் யார் ! சிற்றரசன் போல் தெரியவில்லையே ” என்று இராயர் கேட்டார். அதற்கு அவர் ” அரசர்க்கரசே மன்னிக்க வேண்டும். என் எஜமானரான குறுநில மன்னவர் வர இயலாத நிலையிலிருப்பதால் என்னைத் தங்களை காண அனுப்பினார். நான் அவருடைய அமைச்சர், என் பெயர் அப்பாஜி ” என்று பணிவுடன் கூறினார்.
அரசன் வராமல் அமைச்சரை அனுப்பினானே என்று ராயர் கோபம் கொண்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ‘ அப்பாஜி உம் அரசனை பார்க்க வேண்டும். உடனே வரவழையும் ‘ ‘ என்று கட்டளையிட்டார்.
அதன்படி அப்பாஜி தம் அரசனுக்கு ரகசியமாக ஓலையனுப்பி உடனே அவனை புறப்பட்டு வரச் செய்து தலைநகரத்திற்கு நாலு மைல் தூரத்திற்கு அப்பால் ஓர் ஊரில் மறைந்து தங்கிக் காத்திருக்கும் படி ஏற்பாடு செய்து விட்டு அமைதியாயிருந்தார். ஒரு சில தினங்களுக்குப்பின் கிருஷ்ணதேவராயர் குதிரை மீதேறி அப்பாஜியையும் அழைத்துச் கொண்டு நகர்வலம் சென்றார். வழியில் ஒரு கசாப்புச் கடைக்காரன் ஓர் ஆட்டைத் தலைகீழாகக் கட்டி தோலை உரிக்கும் காட்சி தென்பட்டது. அதைக் கண்ட இராயர் கோபத்துடன் அப்பாஜியின் பக்கம் திரும்பி ” உம்முடைய சிற்றரசனை சீக்கிரம் வரவழை ‘ என்று கடுமையாகக் கட்டளையிட்டார்.
ஆனால் அப்பாஜியோ தன் அரசனைக் காப்பாற்ற எண்ணி சீக்கிரம் சொந்த ஊர் போய்ச் சேரும்படி தகவல் அனுப்பினார். சில நாட்கள் சென்றதும் இராயர் மகிழ்ச்சியுடன் அப்பாஜியிடம் உரையாடிக் கொண்டி ருக்கும் பொழுது, ” அப்பாஜி உன் அரசன் எம்மை காண இன்னும் வரவில்லையே. என்ன காரணம் ? ” என்று கேட்டார். அதற்கு அப்பாஜி ” சக்கரவர்த்திகளே தாங்கள் கோபிக்காமல் என் மன்னரை மன்னிப்பதாக வாக்குறுதி கொடுத்தால் உண்மையான காரணத்தைச் சொல்லுகிறேன் ! ” என்று ராயரிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டார். ” மன்னர்பிரானே ! தங்களை தரிசிப்பதற்காக எங்கள் அரசர் உடனே புறப்பட்டு வந்தார். ஆனால் தாங்கள் கோபம் தீரட்டுமென்று நான்தான் நான்கு மைல் தூரத்திற்கு அப்பால் அவரை சத்திரத்தில் தங்க வைத்தேன். பிறகு தாங்கள் நகர்வலம் வரும் போது கசாப்புக் கடைக்காரன் ஆட்டைத் தலைகீழாகக் கட்டி தோலை உரிப்பதைக் கண்டு அதுபோல என் அரசனையும் கட்டிவைத்து உரிக்க வேண்டுமென்று தாங்கள் கொதித்தீர்கள். அரசனை காக்க வேண்டியது மந்திரியின் கடமை அல்லவா ? அதனால் என் அரசனை சீக்கிரம் ஊருக்குத் திரும்பிப் போய் விடும்படிச் செய்தேன். ” இப்போது தாங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதை கண்டு இதைக் கூறுகிறேன் ! ‘ என்றார். அரசனின் முகக் குறிப்புணர்ந்து நடக்கும் அப்பாஜியின் அறிவாற்றலைக் கண்டு உன் எஜமானை மன்னிக்கிறேன் ! உம்முடைய மதிநுட்பத்திற்காக உம்மை இன்று முதல் என்னுடைய மந்திரியாகவே நியமிக்கிறேன் ! என்னிடம் அமைச்சராக இருக்க உனக்கு சம்மதமா ? ” என்றார்.
அப்பாஜி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முகம் மலர இராயரை வணங்கினார். அறிவு கூர்மை வாய்ந்த அப்பாஜி கிருஷ்ணதேவராயன் அந்தரங்க அமைச்சராகவும் அரசியல் ஆலோசக ராகவும் விளங்கி வந்தார். ராயரின் சிக்கலான பிரச்சினைகளை அப்பாஜி தன் மதிநுட்பத்தால் அனைவரும் வியக்கும்படி தீர்த்து வைத்தார்.