அறிவில் சிறந்தவர் யார் ? | ஆப்பாஜி கதைகள் | tamil story

மகாராணிக்கு அப்பாஜியை மந்திரி பதவியிலிருந்து நீக்க விரும்பினார். திட்டபடி ஒரு சாஸ்திரம் அறிந்த பண்டிதனை வரவழைத்துத் தனது கணவரிடம் “அரசர்க்கரசே ! அப்பாஜிக்குப் பதிலாக இந்த அறிஞனைப் பிரதம மந்திரியாக நியமித்தால் அதிக நன்மை பிறக்கும். இவர் சகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டவராதலால் அரச சபைக்கு மிகச் சிறந்தவராக விளங்குவார்” என்றாள். 

அதற்கு ராயருக்கு அரசியின் நோக்கம் புரிந்தது என்றாலும் “ராணி இருவரில் யார் வல்லவர் என்பதை நாளை அரச சபையில் பரீட்சித்துப் பார்ப்போம் வெல்பவருக்கே பிரதம மந்திரி பதவி” என்றார்.

மறுநாள் அரசவையில் ராயரும் மகாராணியும் கொலு வீற்றிருக்கும் போது இராயர் சபையோரை பார்த்து “நான் நேற்றிரவு அந்தப்புரத்தின் நிலா மாடத்தில் இருக்கும்போது ஒருவன் எனது மார்பில் காலால் எட்டி உதைத்து எனது முகத்தில் எச்சிலை உமிழ்ந்து விட்டான். அவனை என்ன செய்யலாம் ?” எனக் கேட்டார். 

உடனே மகாராணியால் சிபாரிசு செய்யப்பட்ட சாஸ்திர பண்டிதர் எழுந்து “உலகத்தில் ராஜாதிராஜனாக விளங்கும் தங்களை அலட்சியம் செய்து தங்கள் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த அவன் வாயில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், தங்கள் மார்பில் எட்டி உதைத்த அவன் கால்களையும் வெட்டி எறிய வேண்டும் !” என்றார். 

இராயர் அப்பாஜியை பார்த்து நீ என்ன சொல்கிறாய் என்றார். அதற்கு அப்பாஜி “உங்களை எட்டி உதைத்த கால்களுக்குப் பொற்சலங்கையும், தண்டை கொலுசும் போட்டு உங்கள் முகத்தில் எச்சில் உமிழ்ந்த வாயை முத்தமிட்டுக் கொஞ்ச வேண்டும். ஏனெனில் தங்களுடைய அந்தப்புரத்தின் நிலா மாடத்துக்கு வந்து தங்கள் வீர மார்பில் எட்டி உதைத்துத் தங்கள் திருமுகத்தில் எச்சிலை உமிழக் கூடியவன் தங்களுடைய பச்சிளம் பாலகனான இளவரசனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ?” என்றார். 

ராயர் மனம் மகிழ்ந்து “அப்பாஜி நீ சொல்வது சரிதான்” என்றார். 

பின்பு இராணியின் பக்கம் திரும்பி “பார்த்தாயா ? யார் அறிவில் வல்லவர் என்பதை ?” எனக் கேட்பவர் போல் பார்த்தார். 

ராணி ராயரை பார்த்து மெல்லிய குரலில் “இது முதல் பரிட்சை தானே ? இதற்குள் அதை எப்படி முடிவு கட்ட முடியும் !” என்றாள். 

அப்பாஜிக்கு கடுமையான பரீட்சை வைத்து எப்படியாவது அவரை நீக்கி விட வேண்டும் என்று ராணி அன்று தன் மனதுக்குள் தீர்மானம் செய்து கொண்டாள்.

Leave a Comment