அரண்மனை பல்லி – அறிவுக் கதைகள் – Tamil story

ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சீனாவில் புதிய மன்னர் பதவியேற்க போவதை ஒட்டி அரண்மனையில் அலங்கார வேலைப்பாடுகள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 அந்த அரண்மனையில் ஒரு பல்லியின் குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் பல்லி அரசனின் படுக்கை அறையில் மாட்டப்பட்டிருந்த ஒவியத்தின் பின்னால் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தது.

 அரண்மனையை சுத்தம் செய்கின்றவர்கள் வந்தவுடனே எங்கே போவது என்று தெரியாமல் பல்லிகள் அங்குமிங்கும் ஒடின. அதைக்கண்ட சிப்பாய்கள் பல்லிகளை விரட்டி அடித்துக் கொன்றார்கள். பெண் பல்லி மட்டும் உயிர்தப்பி எங்கே போய் ஒளிவது என்று தெரியாமல் அரசனின் கட்டிலின் அடியில் போய் ஒட்டிக் கொண்டது.

 அரண்மனை முழுவதும் அலங்காரம் செய்யத் துவங்கினார்கள். கட்டிலின் மேல் பட்டுத்துணிகள் கொண்ட அலங்காரம் செய்ய வந்தவன் பல்லி கட்டிலின் அடியில் ஒளிந்து இருப்பதை அறியாமல் கவனக்குறைவாக பல்லியோடு சேர்த்து ஒரு அணியை அடித்துவிட்டான்.

பல்லி வலி தாங்க முடியாமல் கத்தியது . ஆனால் அவனுக்கு அந்த சப்தம் கேட்கவேயில்லை. அதனால் பல்லி தன் இருப்பிடத்தில் இருந்து அசையவே முடியவில்லை. அது எப்படியாவது அங்கிருந்து தப்பிவிட முயற்சி செய்தது . ஆனால் உடலை அசைக்கவே முடியவில்லை. புதிய மன்னர் பதவி ஏற்றார். தனது ராணியோடு படுக்கை அறைக்கு வந்து தங்கத் துவங்கினார். பல்லி ஆணியில் சிக்கிக் கொண்டு தவித்தது. ஆனால் யாரும் அதை கவனிக்கவேயில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் இரவு அரசர் பல்லியொன்று சுவரில் இருந்து ஒளிந்து ஒளிந்து இறங்கி கட்டிலின் அடியில் போவதைக் கண்டார் .

உடனே சிப்பாய்களை அழைத்து தன் கட்டிலின் அடியில் ஒளிந்து கொண்ட பல்லியை விரட்டும் படியாக ஆணையிட்டார்.

சிப்பாய்கள் உடனே கட்டிலின் அடியில் தேடிய போது பல்லியைக் காணவில்லை. அது வேகமாக ஓடி கேடயம் ஒன்றின் பின்னால் பதுங்கிக் கொண்டது . ஆனால் கட்டிலின் அடியில் ஆணி அடிக்கப்பட்டு ஒரு பல்லி மெலிந்து போய் ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு மன்னரிடம் சொன்னார்கள்.

அதைக் கண்ட மன்னர் அய்யோ பாவம் என்றபடியே எப்படி இந்த பல்லி இத்தனை நாட்களாக உயிரோடு இருந்தது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது கட்டிலை பழையபடி போடுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் அறையை விட்டு வெளியே போவது போல சப்தம் ஏற்படுத்திவிட்டு ஒளிந்து கொண்டார்.

அப்போது கேடயத்தில் இருந்த பல்லியொன்று இறங்கி வந்து தன் வாயில் கவ்விக் கொண்டுவந்திருந்த உணவை ஆணியில் மாட்டிக் கொண்டிருந்த பல்லியின் வாயில் புகட்டிவிட்டுப் போவதைக் கண்டார்.

அவரால் நம்பவே முடியவில்லை. ஆணியில் மாட்டிக் கொண்டு பலநாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பல்லியை இன்னொரு பல்லி உணவளித்து காப்பாற்றியிருக்கிறது.

என்ன ஒரு அன்பு என்ன ஒரு அக்கறை என்று வியந்து நான் பல்லாயிரம் மனிதர்களைப் போரில் கொன்று அரசனாகியிருக்கிறேன். இந்த பல்லியோ மற்றொரு பல்லி சாகக்கூடாது என்று உணவு தந்து காப்பாற்றிவருகிறது. நான் இந்த பல்லியை விடவும் கேவலமானவன் என்று சொல்லி தன் தவறிற்கு வருந்தியதோடு இனிமேல் அரண்மனையில் யாரும் பல்லிகளைக் கொல்லக்கூடாது என்று உத்தரவும் போட்டார்.

இயற்கையில் ஒரு உயிரைக் காப்பாற்ற பல்லி கூட தன்னால் ஆனதை செய்கிறது. மனிதராகிய நாமோ அடுத்தவர் உணவைப் பறித்தும் அதிகாரம் செய்தும் வருகிறோமே என்று மனமாற்றம் கொண்ட மாமன்னர் பல்லியின் தியாகத்தைப் போற்றும் வகையில் தன் அரண்மனை வாசலில் தங்கத்தில் பல்லியின் உருவம் செய்து வைத்தாராம்.

இது ஒரு உண்மைச்சம்பவம்.

ஆகவே நாம் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை அவசியம் செய்ய வேண்டும் . நல்லநட்பு என்பது கஷ்டத்தின் போது உதவி செய்து காப்பாற்றுவது தான்.


1 thought on “அரண்மனை பல்லி – அறிவுக் கதைகள் – Tamil story”

  1. அருமையான கதை. நல்ல எண்ணங்களை கூர்மையாக்கும் ஆயுதம் இக்கதை.

    Reply

Leave a Comment