இன்பமும் துன்பமும் அவரவர் எண்ணம் போலவே | பழமொழிக் கதைகள் | Tamil story

மனமது செம்மையானால் எல்லாம் செம்மை யாகும். 

அதுபோல,

இன்பமும் துன்பமும் அவரவர் எண்ணப் படியே தான் நடக்கும். சுப்புராஜ் என்னும் ஒரு வியாபாரி இருந்தார். அவருக்கு லதா-மாலா என்று இரு பெண்கள் இருந்தனர். இருவருக்கும் தக்க பருவத்தில் மணமுடித்துக் கொடுத்திருந்தார். 

சில ஆண்டுகள் கழித்து இரு பெண்களும் எவ்விதம் வாழ்கின்றனர் என்று பார்த்து விட்டு வர புறப்பட்டார். 

முதலில் மூத்த மகள் லதாவின் வீட்டிற்குச் சென்றார். அவளது வீட்டுக்காரர் ஒரு விவசாயி எவ்விதம் இருக்கிறாள் என்பதனை அறிய விரும்பி, லதா உங்களது வாழ்க்கை எப்படியம்மா இருக்கிறது ? என்று கேட்டார். 

அப்பா எங்களுக்கு ஒரு குறையுமில்லை. வயலில் நெல் பயிரிட்டிருக்கிறோம். விளையும் பருவத்தில் இருக்கிறது. ஒரு மழை பெய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும், ஒரு வாரத்திற்குள்ளே நல்ல மழை பெய்யணுமின்னு கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறோம் என்றாள்.  அதனைக் கேட்ட சுப்புராஜ் தனது வீட்டிற்கு வந்தார்.

சில நாட்கள் கழித்து, இரண்டாவது மகள் மாலா வீட்டிற்குச் சென்றார். மாலாவின் கணவர் செங்கல் சூளை வைத்திருந்தார்.. மாலா ! உங்களது வாழ்க்கை எப்படியம்மா இருக்கிறது என்று கேட்டார். 

அப்பா ! பெரும் அளவிற்குச் செங்கற்களைத் தயார் செய்து காயவைத்திருக்கிறோம். இரண்டொரு நாட்களில் சூளை போட்டாக வேண்டும். சூளை போட்டு எடுப்பதற்குள் மழைவராமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறோம். மழை வந்து விட்டால் பெரிய நஷ்டத்தை உண்டாக்கிவிடும்” என்று மாலா கூறினாள். இருமகள்களின் எண்ணங்களை நினைத்தார்.

 கடவுள் தான் இதற்கு விடை கூற வேண்டும் என்று தமது வீட்டிற்கு திரும்பினார் சுப்புராஜ், உலகத்தில் மக்களுக்கு ஒரே மாதிரியான எண்ணமும் விருப்பமும் இருக்காது.

 ஒருவர் நன்மை எனக் கருதும் ஒரு விஷயம் மற்றவருக்குத் தீமையாக இருக்கும். ஒருவர் கசப்பு என்று முகம் சுளிக்கும் ஒன்று மற்றவருக்கு இனிப்பாக இருக்கும்.

 அதனால் உலகத்தில் ஒவ்வொருவரும் எந்த விஷயத்திலும் பொது சுயநலத்தோடு செயற்படக் கூடாது. நலத்தோடு பார்த்து செயல்பட வேண்டும்.

Leave a Comment