வைவார்க்கு இன்பமில்லை – பொறுத்தார்க்கு துன்பமில்லை | பழமொழி கதைகள் | tamil story

தன்னைச் சிலுவையில் அறைந்தவர்க்கும் . தன்னைத் துப்பாக்கியால் சுட்டவர்க்கும் – தன்னைக் கத்தியால் குத்தியவர்க்கும் எவ்விதத் தீங்கும் நேர்ந்து விடக் கூடாது என இறைவனிடம் வேண்டிக் கொண்டவர்கள் இயேசு – காந்தி – மெய்ப்பொருள் நாயனார் போன்றோர் . அந்த வரிசையில் இடம் பெறுபவர் சுவாமி இராமதாசர்.

இவர் மராட்டிய மன்னன் வீரசிவாஜியின் குருவாக விளங்கியவர். இவர் தம்மிடம் வருவோர்க்கு அருளுரைகள் கூறுவதோடு – உணவு உடை போன்றவற்றை அளிக்க வீடுகள் தோறும் சென்று பிச்சையெடுப்பது வழக்கம்.

சோம்பேறி – ஊரை ஏமாற்றுபவன் – வஞ்சகன் போன்ற வாய்க்கு வந்த வார்த்தைகளையெல்லாம் பேசுவாள் ஒரு பெண்.

பெண்ணின் ஏளனமான வார்த்தைகளை யெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்த வீட்டிற்குச் செல்வார்.

தனது வீட்டை விட்டு இராமதாசர் நகர்ந்த பிறகு வீட்டுக்காரியின் மனசாட்சியே அவளைச் சித்திரவதை செய்யும்.

சிறிது நேரம் தான் கவலை கொள்வாள். பிறகு மறுபடியும் அதே மன நிலைக்கு வந்து விடுவாள்.

ஏசுகிறாளே – பேசுகிறாளே – இழிவு செய்கிறாளே என்று சற்றும் யோசிக்காத இராமதாசர் மீண்டும் அப்பெண்ணின் வீட்டிற்குச் செல்வார்.

வழக்கம் போல அப்பெண்ணும் ஏசுவாள். அப்படியிருந்தும் விடாது தினமும் பிச்சை கேட்டு வந்தார். பொறுமையிழந்த அப்பெண், வாய்க்கு வந்தபடி பேசியதோடு, வீட்டை மொழுகிக் கொண்டிருந்த சாணித் துணியைக் கையோடு கொண்டு வந்து இராமதாசரின் முகத்தின் மேல் வீசியவாறே, “இது தான் நான் உனக்கு போட்ட பிச்சை” என்று வேகமாகக் கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.

இராமதாசரோ… எவ்வித கோபதாபத்தையும் அப்பெண்ணிடம் காட்டிக் கொள்ளாமல் வெறுப்பில்லா விருப்புடன் சாணித் துணியினை எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்குச் சென்றார்.

சாணித்துணியை நன்றாக அழுக்குப் போக அலசி காய வைத்தார்.

பிறகு துணியிலிருந்த நூல்களை யெல்லாம் பிரித்து தனித்தனியாக எடுத்து விளக்குத் திரியாகத் திரித்தார். அத்திரியினைக் கொண்டு சந்நிதியில் ‘ தீபம் ஏற்றிக் கொண்டிருந்தார்.

இவற்றை யெல்லாம் கவனித்துக் கொண்டு வந்த அந்த பெண், “சுவாமி ! என்னை மன்னித்து விடுங்கள்” என்றாள். 

“உன்னை எதுக்கம்மா நான் மன்னிக்கணும்? ” 

” உங்களைத் திட்டியதற்காக.”

“என்னை நீங்கள் திட்டினீர்களா ! இல்லையே !”

” சுவாமி ! தாங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை . நான் திட்டியது தங்களது காதுகளில் விழுந்தபோது , மனத்தில் பாதிப்புகளை ஏற்படுத்த வில்லையா ! ” என்று அப்பெண் கேட்டாள்.

” தாயே ! நீர் எனக்கு ஒரு பசு மாட்டை தானம் செய்கிறீர் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாட்டை மனம் விரும்பி நாம் ஏற்றுக் கொண்டால் தானே அது நமக்குச் சொந்தமாகும். நீர் தானம் அளிக்கும் மாட்டை விரும்பவேயில்லை என்றால் அது எனக்குச் சொந்தமாகி விட முடியாதல்லவா. நீர் எனக்குத் தானமாகக் கொடுக்க நினைத்தாலும் அந்த மாடு உமக்குத்தானே சொந்தமாக இருக்கும். இதே போல நீர் என்னை நோக்கிச் சொல்லும் வசை மொழிகள் என் மனம் விரும்பி ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவை என்னை வந்து அடையும்.

 நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உன்னுடைய ஏச்சுக்களும் பேச்சுக்களும் உமக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். அதனால் உனது வசை சொற்களால் எனக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட வழியில்லை ” என்று இராமதாசர் விளக்கமளித்தார்.

 ” சுவாமி ! நான் திட்டியதற்கு விளக்க மளித்து விட்டீர். நான் கோபத்தில் தங்கள் முகத்தில் சாணித் துணியினை வீசி எறிந்து பாவத்தை தேடிக் கொண்டு விட்டேனே ! அதற்கு பிராயசித்தம் நான் எங்கே சென்று தேடுவேன் ! “

“தாயே ! இதோ நீங்கள் எம்மீது எறிந்த சாணித்துணி. இங்கே தீபத் திரிகளாக மாறி விட்டன.  நீங்கள் பாவத்திற்கான பிராயச்சித்தம் எங்கே சென்று தேட வேண்டும் என்று கேட்டீர் களல்லவா ? “

” ஆமாம் சுவாமி ! ” 

” நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். இதோ, தீபமாக எரியும் ஒளியின் மூலம் உங்களது பாவமெல்லாம் தீர்ந்து விட்டது ” என்று அன்புடன் கூறினார். 

இராமதாசரின் சொற்களைக் கேட்டு மனம் திருந்திய அப்பெண் அன்று முதல் இராமதாசருக்கு மரியாதையுடனும் பக்தியுடனும் அமுது படைத்து வந்தாள். 

Leave a Comment