நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவன்…. நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டான்…. என்ற படப்பாடல் வரிகளுக்கேற்ப விளங்கி வந்தவன் கும்பகர்ணன். அவனுக்கு தூக்கம் என்றால் ‘ சுகமோ சுகம்’ நல்ல வசதி வாய்ப்புகள் அவனுக்கு இருந்ததினால் வேலைக்குச் சென்று சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற நிலையுமில்லை.
நாளைக்கு என்ன செய்வது என்ற கவலையுமில்லை. அவனுக்கு தூக்கம் ஒன்று தான் பிரதானம். உட்கார்ந்தால் தூங்குவான், நடந்தால் தூங்குவான், படுத்தால் தூங்குவான், எழுந்தால் தூங்குவான், சாப்பிட உட்கார்ந்தால் தூங்குவான், பேசினால் தூங்குவான்.
தூங்குவதைத்தவிர வேறு வேலை அவனுக் கில்லை.
அவனது மனைவி, இப்படி தூங்கு மூஞ்சிக் காரனைக் கட்டிக் கொண்டோமே என்று கவலைப்பட்டாள். கும்பகர்ணனை எப்படியாவது நல்வழிப் படுத்திட வேண்டும் என்று எண்ணினாள்.
அவள் எண்ணிய சமயத்தில் அவர்களது ஊரில் இராமாயணக் கதா காலட்சேபம் ஆரம்பமானது. தூங்கு மூஞ்சி கணவனான கும்பகர்ணனை எழுப்பி “நம்ம ஊரிலுள்ள ராமர் கோயில்லே, ராமாயணக் கதை சொல்றாங்களாம் கேட்டுட்டு வாங்களேன் உங்க தூக்கத்திற்கு ஒரு முடிவாவது ஏற்படட்டும்” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
கும்பகர்ணன் கதை சொல்லும் ராமர் கோயில் பக்கம் போய் உட்கார்ந்தான் . அடுத்த நிமிடத்திலே தூங்க ஆரம்பித்து விட்டான். கதை தொடங்கியவுடனேயே குறட்டை விடத் தொடங்கினான்.
கதை முடியும் நேரத்தில் கும்பகர்ணனை எழுப்பி, அன்றைய பிரசாதமாக சர்க்கரை கொடுத்தனர்.
அதை வாங்கி வாயில் போட்டுச் சுவைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்தான்.
“கதை எப்படி இருந்தது ?” என்று மனைவி ஆவலோடு கேட்டாள்.
“கதை இனிப்பாயிருந்தது !” என்று வாயைச் சப்பிக் கொண்டே கூறினான் கும்பகர்ணன்.
கதை மிகவும் சுவையாக இருந்திருக்கும் போலிருக்கிறது என்ற கருத்தில் சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டு மனைவி மகிழ்ந்து போனாள்.
மறுநாளும் இராமாயணக் கதையினைக் கேட்டு வரத் தூங்குமூஞ்சி கணவனான கும்பகர்ணனை அனுப்பிவைத்தாள். ராமர் கோயிலின் முன்புபோய் உட்கார்ந்தான் . முதலில் கூட்டம் இல்லாமலிருந்தது, நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்ததினால், நடுக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டான்.
கொஞ்ச நேரத்தில் இவன் மீது , அவன் சாய்ந்து தூங்கினான். அவன் கொஞ்சம் பருமனாக இருந்ததினால் கனமாக இருந்தான். கனத்தை சுமந்தவாறே படுத்திருந்தான் கும்பகர்ணன். கதை முடிந்து எழுந்து வீட்டுக்கு வந்த கும்பகர்ணனிடம், ” இன்று கதை எப்படியிருந்தது ?’ என்று கும்பகர்ணனின் மனைவி கேட்டாள்.
“அதை ஏன் கேட்கிறே , கதை ஒரே கனம், அது என் மேலேயே படுத்து விட்டது. முதுகெல்லாம் ஒரே வலி ” என்று முதுகைத் தடவி விட்டுக் கொண்டே சொன்னான் கும்பகர்ணன். கதையின் கனத்தக் கருத்துக்களைப் பற்றிக் கணவன் குறிப்பிடுகிறான் போலும் என்று பெருமையாக எண்ணிப் பூரிப்படைந்தாள்.
மறுநாள், கதை கேட்கப் போன கும்பகர்ணன் ராமர் கோயில் படிக்கட்டுகள் ஓரமாயிருந்த மதில் மீது சாய்ந்து உட்கார்ந்தான்.
வழக்கம் போல் கதை ஆரம்பித்தவுடன் தூங்க ஆரம்பித்தான். அப்பொழுது திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. கும்பகர்ணன் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு மேலே உள்ள தகரத்தின் ஓட்டை வழியே வழிந்த மழைநீர் கும்பகர்ணனது சட்டை – வேட்டியை நனைத்து விட்டது. மழையின் காரணமாக கதை முடிந்தது.
ஈரத்துணிகளோடு வீட்டிற்கு வந்த கணவனிடம் , ” இன்று கதை எப்படி இருந்தது ? ” என்று மனைவி கேட்டாள். “கதையா ! என்னைப் பார்த்தாலே தெரியலயா , சொட்டுச் சொட்டாக விழுந்த நீர் சட்டை யெல்லாம் நனைத்து விட்டது ” என்று கூறினான் கும்பகர்ணன்.
சீதையை பிரிந்த இராமபிரான் படும் வேதனையைக் கதையில் கேட்டு கணவன் கண்ணீர் வடித்திருக்கிறான் போலிருக்கிறது ‘ என்று எண்ணிய மனைவி, கணவன் கும்பகர்ணனை வாயார மனதாரப் பாராட்டியதோடு, இனி கணவன் தூக்கத்திலிருந்து விடுபட்டு விடுவான் என்று நம்பினாள். தூங்கு மூஞ்சி கும்பகர்ணனிடம் , இதைவிட வேறு ரசனையை எப்படி எதிர்பார்க்க முடியும்?