தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் | பழமொழிக் கதைகள் | tamil story

லட்சுமிபுரம், பெயருக்கேற்றார் போல ‘செல்வவளம்’ கொழிக்கும் ஊராக விளங்கி வந்தது. 

 பத்து தெருக்கள் கொண்ட ஊரில் தெற்குத் தெருவில் உள்ள ஒவ்வொரு பங்களாவின் முன்பாகவும் விதம் விதமான கார்களும் இரு சக்கர வாகனங்களும் அணிவகுத்து நிற்பது அழகுக்கு அழகூட்டுவனவாக இருக்கும். அந்த அளவிற்கு, அத்தெருவைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் (தொழில்களில்) பணிகளில் சிறந்து விளங்கி வந்தனர். 

வெளியில் வேலை பார்க்கும் பிள்ளைகளைப் பார்த்துவர பெற்றோர்கள் செல்வதும் பெற்றோர்களைப் பார்க்க பிள்ளைகள் வருவதும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

சமீப காலமாக,, எந்த பங்களாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்கின்றனரோ அந்த பங்களாவிலிருக்கும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன. கொள்ளைக்காரர்களைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சிதனை மேற்கொண்டு வந்தனர். 

போலீசாருக்கே சவால் விடும் அளவுக்கு நூதன முறையில் திருட்டு நடைபெற்று வந்தது. இரவு இரண்டு மணிக்கு மேல் திடீரென்று மின்சாரம் தடைபடும். மீண்டும் மின்வினியோகம் வர குறைந்தது கால் மணி நேரமாகும். 

அந்த நேரத்தில் தான் அந்த திருட்டுத் தொழில் நடக்கிறது என்ற சூட்சுமத்தை அறிந்த போலீசார், கொள்ளையைக் கண்டு பிடிக்க போலீசார் புது உத்தியினைக் கடை பிடித்தனர்.

தெற்குத் தெருவை ஒட்டிய மின்டிரான்ஸ்பார்ம் அணைந்த வேளையில் ஒளிந்திருந்த போலீசார் இருவரில் ஒருவர் மின் துண்டிப்பு செய்து விட்டு ஓடியவனை பின் தொடர, மற்றொருவர் மின் டிரான்ஸ்பார்மை இயக்கிட மின்னொளி வந்தது. 

தெற்குத் தெருவில் மின் விளக்குகள் பளிச்சிட்டது. அந்த நேரத்தில் ஒருபங்களாவில் தங்களது கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. 

கொள்ளையடிப்பதனை நிறுத்தி தப்பிப்பதற்கு ஏதேனும் வழியிருக்கிறதா என்று  பார்த்தபோது, தெருவிலுள்ள அத்தனை பேரையும் விழித்தெழும் வண்ணம் போலீஸ் காரர்கள் ஊதிய விசில் சத்தம், கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க உதவியது. 

இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால்.. கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக விளங்கியவன் அத்தெருவைச் சேர்ந்த செல்வம், என்று அறிந்த போது தெருவினரே வியப்புடன் பார்த்தனர்.

செல்வம் சிறுவயதிலே தந்தையை இழந்து – தாயின் வளர்ப்பில் வளர்ந்து வந்தான். வசதி – வாய்ப்புகள் இல்லாததினால், தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள சிறு பொருள்களைத் திருடி வந்தவன், நாளடைவில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு தாயின் ஆசைகளைத் தீர்த்திட, அவள் விரும்பும் உணவுவகைகள் உண்டு உறங்க, வசதியான வீடு, போக்குவரத்திற்குச் சென்றுவர ஆட்டோ வசதி அனைத்தையும் செய்து வந்தான். 

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’என்ற நிலைதனை அவனது கொள்ளை காட்டிக் கொடுத்து விட்டது.  செல்வம், அவனது ஐந்து  கூட்டாளிகள், அனைவரது கைகளிலும் விலங்கு மாட்டி  தெருவழியே கொண்டுவந்தனர். 

இதனைக் கண்ட செல்வனின் தாய் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு

இந்த நிலையிலா  மகனே உன்னை பார்க்கணும் ? என்று கேட்டாள். 

இந்த நிலைக்கு ஆளாக்கினது நீதானே என்றான், செல்வம்’ நானா? ஆமா! பள்ளிகளில் பிள்ளைகளிடமும் ஆசிரியர்களிடமும் திருடிக் கொண்டு வந்து உன்னிடத்தில் கொடுத்தபோது என்னைத் தட்டி கேட்டு தவறினை திருத்தாம, சொகுசாக வாழ நினைத்த நீ என்னை இந்த அளவிற்கு கொள்ளைக் காரனாக கொண்டுவந்து நிறுத்தி விட்டாய். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? வழியை  விடும்மா நான்வர்றேன் என்று சிறைக்குச் சென்றான்.

 பிள்ளைகள் நல்லவழியில் செல்ல அறிவுரை கூறுவது பெற்றோரது கடமை.

Leave a Comment