முட்டி முட்டி ஏற்றினாலும் முட்டாள் மூளையிலே ஒன்றும் ஏறாது | பழமொழிக் கதைகள் | tamil story

 

முட்டாளுக்கு ஆயிரம் அறிவுரை சொன்னாலும் அத்தனையும் வீண் என்பது போன்று நடந்து கொள்வார்கள் . அவர்களில் ஒருவன் நம்பியப்பன்.

பெயர் தான் நம்பியப்பன்.

ஆனால் ஒன்றுகூட அவனை நம்பி செய்ய முடியாது . இருந்தாலும் அவனுடைய அண்ணன் அங்கப்பன், நம்பியப்பனை எப்படியாவது திருத்திவிட வேண்டும் என்று பெரு முயற்சி எடுத்து வந்தார்.

ஒரு சமயம்.. தட்டு முட்டு சாமான்களை ஏற்றிக் கொண்டு வெளியூரில் விற்க நினைத்த அங்கப்பன், மாட்டு வண்டியில் சாமான்களை ஏற்றி முடித்தவுடன் தனது தம்பி நம்பியப்பனிடம், ” நான் முன்னால் வண்டியிலே உட்கார்ந்து ஓட்டிச் செல்கிறேன். நீ பின்னால் ஏதாவது சாமான்கள் விழுகிறதா ? என்று பார்த்துக் கொண்டே நடந்து வா ” என்று சொல்லியிருந்தார்.

 ” சரிங்கண்ணே …. நீங்க சொன்னபடியே செய்கிறேன் ‘ ‘ என்று சம்மதம் கொடுத்தான் நம்பியப்பன். 

 வண்டியில் ஏற்றப்பட்ட சின்ன சின்ன சாமான்கள் மேடு பள்ளத்தில் வண்டி செல்லும் போது விழுந்து வந்தன . அவற்றையெல்லாம் எடுத்துப் போடாமல் வந்தான் அவன். 

 சந்தேகம் கொண்ட அங்கப்பன், ” டேய் தம்பி !” என்று அழைத்தார். 

 ” என்ன அண்ணே ? ” 

 ” ஏதாவது சாமான் விழுந்ததா ? ” 

 ” விழுந்தது அண்ணே” 

 ” எடுத்துப் போட்டியா ? ” 

 ” இல்லே அண்ணே . ” 

 ” ஏன் எடுத்துப் போடலே … ” 

 ” நீங்க விழுகிற சாமானைப் பார்த்திட்டுத் தான் வரச் சொன்னீங்க …. எடுத்துப் போடச் சொல்ல லேயே ! ” 

 ” அட முட்டாள் தம்பியே ! இனிமேல் எது கீழே விழுந்தாலும் பத்திரமாக எடுத்துக் கொண்டு வா ” என்றார். 

 ” அப்படியே செய்கிறேன் அண்ணா ! ” என்று கூறினான் நம்பியப்பன்.

 சிறிது தூரம் வண்டியை ஓட்டிய அங்கப்பன் , ” தம்பி ! ” என்று அழைத்தார்.

 கையில் ஒரு பொட்டலத்துடன் வண்டிக்கு முன்னே ஓடியவன், அண்ணா என்றான். 

 ” ஏதாவது விழுந்ததா ! “

 ” விழுந்தது அண்ணே … “

 ” என்ன செய்தே ? ” 

 “பத்திரமாக எடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறேன் ” என்றான் நம்பியப்பன்.

 “ என்ன பொருள் ” 

 ” இதோ , நீங்களே பார்த்துக் கோங்க … ” என்று துணி மூட்டையை விரித்துக் காட்டினான்… அதில் மாடு போட்ட சாணம் இருந்தது.

 ” அடமுட்டாள் தம்பி ! என்னடா இது ? சாணியை எடுத்து வந்திருக்கே ? ” என்று கோபத்துடன் கேட்டார்.

  ” அண்ணே ! நீங்க எது விழுந்தாலும் எடுத்து பத்திரமாக கொண்டு வரச் சொன்னீங்க. நானும் கவனமாகத்தான் பாத்துகிட்டு வந்தேன். வண்டி மாடு போட்ட சாணந்தான் கீழே விழுந்தது. அதனால் நீங்கள் சொன்ன மாதிரி கீழே விழுந்ததைப் பத்திரமாக எடுத்து வைத்தேன் ” என்றான் நம்பியப்பன். 

  ” முட்டாப்பயலே ! உன்னை இந்த ஜென் மத்திலே திருத்த முடியாதுடா. உன்னைத் திருத்த நினைத்த நான்தாண்டா முட்டாள் ” என்று அங்கப்பன் தனது தலையிலே அடித்துக் கொண்டான்.

Leave a Comment