மனோதைரியமே ஆண்மைக்கு அழகு | பழமொழிக் கதைகள் | Tamil short story

 

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – அதை பார்த்து அறிந்திடாதவன் மனிதனில்லை… ஒண்ணும் தெரியாத ஆளாயிருந்தாலும் உயர்த்திப்பேசும் கூட்டம்…. பணமில்லாத ஏழையை… எந்த நாளும் மதிக்க மாட்டானே.. 

என்று பாடப்பட்ட படப்பாடல் குமரேசனுக்குப் பொருத்த மானது.

குமரேசன் நன்கு படித்தவன். நல்ல திறமைசாலி. ஆண்மைக்கு இலக்கணமாக விளங்கி வருபவன். அவ்வளவு திறமை மிக்கவனை பணமில்லாத ஒரே காரணத்துக்காக, தாய் மாமன் தன் பெண் இந்திராவை மணமுடித்து கொடுக்க மறுத்து பெரும் பணக்கார வீட்டுப் பையனுக்கு மண முடித்து கொடுக்க ஏற்பாடு செய்தார். 

திருமண நாளும் வந்தது. தாலிகட்டும் நேரம் நெருங்கிய போது, திருமணப் பந்தலிலே ஒரே பரபரப்பு. திருமணத்திற்கு வந்திருந்தோர் எல்லாம் அங்கு மிங்கும் ஓடினர். 

ஓரத்தில் நின்றிருந்த குமரேசன், என்ன ஏதுவென்று ஆராய்ந்து பார்த்தான். கோயிலுக்கு நேர்ந்து விட்டிருந்த கோயில் ‘காளைமாடு’ ஒன்று கூட்டத்திற்குள் புகுந்து வந்து கொண்டிருந்தது. கூட்டத்தினர் அங்குமிங்கும் ஓடினரே ஒழிய ஒருவர் கூட அக்காளை மாட்டை  மடக்க முன்வரவில்லை. 

மாடோ, மணமேடையிலிருந்த மணமக்களை நோக்கிப் பாய்ந்து வந்தது. மேடையிலிருந்த புரோகிதர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்தார். புரோகிதர் தந்த தாலியைக் கையில் பிடித்தவாறு ஆவேசமாக வந்த காளை மாட்டினைப் பார்த்த மாப்பிள்ளை தாலியும் வேண்டாம், தாலி கட்டப் போகும் பெண்ணும் வேண்டாம்’ என்று தாலியை வீசியெறிந்து விட்டு இரண்டு கால் பாய்ச்சலில் தப்பி தலை தெறிக்க ஓடினான். 

மணப்பெண் இந்திராவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. காளைமாடு நெருங்கிவிட்டது. இன்னும் சில நிமிடங்களில் காளை மாடு தன் கொம்புகளால் குத்தி உயிர்ப்பலி வாங்கப் போகிறது, என்ற நிலையில், மணவறையை நோக்கிப் பாய்ந்து வந்து மணப் பெண் இந்திராவை, அலக்காகத் தூக்கிக் கொண்டு குமரேசன் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான்.

இந்திராவைப் பாதுகாப்பான அறையில் இருக்கச் செய்து விட்டு, காளை மாட்டை எதிர் கொண்டு தன் உயிரையும் பொருட்படுத்தாது எதிர்த்து நின்று போராடி, தன் கையில் கிடைத்த தடிகொண்டு காளை மாட்டினை மாறி மாறி அடித்து மண்டபத்தைவிட்டு துரத்தினான். 

காளைமாடு வெளியே சென்று விட்டது, இனி எந்த வித ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்தவர்கள் மீண்டும் மணமேடையருகே வந்தனர். ஒளிந்திருந்த புரோகிதரும் வந்தார். கீழே கிடந்த தாலியைக் கையிலெடுத்துக் கொண்ட புரோகிதர், “மாப்பிள்ளையை சீக்கிரம் வரச் சொல்லுங்கள். முகூர்த்த நேரம் போவதற்குள் மாங்கல்ய தாரணம் நடந்து விடட்டும்” என்று குரல் கொடுத்தார்.

 நடுங்கிக் கொண்டே மாப்பிள்ளை வந்தார். மாப்பிள்ளையின் கையில் தாலியை கொடுத்தார் புரோகிதர். வாங்கிக் கொண்ட மாப்பிள்ளை… கெட்டி மேளம்.. கெட்டி மேளம்… என்று முழங்கும் நேரத்தில் இந்திராவின் கழுத்தில் தாலிகட்டப் போன மாப்பிள்ளையின் கையிலிருந்த தாலியினை இந்திரா பிடுங்கினாள்.

 திருமணத்திற்கு வந்திருந்தோரெல்லாம் இந்திராவின் செயலைக் கண்டு பிரமித்துப் போனார்கள்.

“இந்திரா! உனக்கு என்னம்மா நேர்ந்தது? சொல்லும்மா “என்று தந்தை கேட்டார். 

“அப்பா! தன் உயிரைப் பொருட்படுத்தாமல் என் உயிரைக் காப்பாற்றிய அத்தை மகன் குமரேசனையே நான் திருமணம் முடித்துக் கொள்கிறேன்” என்றாள்.

“நீ என்னம்மா சொல்றே?”

 “ஆபத்து நேரத்தில் என்னைப் பற்றிக் கவலைப் படாமல் தனது உயிரே பெரிதென எண்ணி ஓடிப் போன முருகன் எங்கே! என்னைக் காப்பாற்றிய குமரேசன் எங்கே! நான் மணமுடித்தால் குமரேசனைத்தான்… இல்லாவிட்டால், நான் சொல்ல மாட்டேன்..” என்று நிறுத்தினாள்.. 

மகளின் முடிவு விபரீதத்தை ஏற்படுத்தி விடுமோ என்று தந்தை அஞ்சிய வேளையில், பணத்தைவிட, பெரிய பதவியை விட, மனோதைரிய முடைய ஒரு ஆண்மையாளன் தான் பெண்ணுக்கு தகுதியானவன். அதனால் இந்திராவுக்கும் குமரேசனுக்கும் திருமணம் நடப்பதே பொருத்தமானது என்று திருமணத்திற்கு வந்திருந்தோரெல்லாம் ஏகோபித்து குரல் கொடுத்தனர். இந்திராவின் தந்தையும் சம்மதித்து தலை யாட்டினார். 

முகூர்த்த நேரம் முடிவதற்குள் குமரேசனுக்கும் இந்திராவிற்கும் இனிதே திருமணம் நடந்தேறியது.

Leave a Comment