சிக்கனம் பிடி செலவும் அழி | பழமொழிக் கதைகள் | Tamil short story

 

லோபிக்கு இரு செலவு என்பார்கள். அது விதவைப் மூக்கம்மாள் என்னும் பெண்ணுக்கு மிகவும் பொருந்தும். மூக்கம்மாள் செம்மறியாடு ஒன்றினை வளர்த்து வந்தாள். செம்மறியாடு நன்கு கொளுத்திருந்தது. அதன் உடலில் அடர்த்தியாக உரோமம் வளர்ந்திருந்தது. ஆட்டின் உரோமத்தை அடிக்கடி வெட்டிவிட வேண்டும். 

ஆடு அப்பொழுது தான் நன்றாக வளரும். அது தவிர ஆட்டு உரோமத்தைக் கம்பளி நெய்வதற்காகச் சிலர் வாங்குவார்கள். நல்ல பணம் கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் சிலர் ஆலோசனை கூறினார்கள். 

ஆட்டு உரோமத்தைக் கத்தரிப்பதற்கென சில ஆட்கள் உண்டு. அவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். 

கூலி ஒன்றும் அதிகம் என்று கூற முடியாது. ஆனால் அந்தச் சிறு தொகையையும் செலவழிக்க விதவை மூக்கம்மாவுக்கு மனம் வரவில்லை.

ஆட்டு உரோமத்தைக் கத்தரிப்பது என்ன பெரிய மந்திர தந்திர வேலையா? ஒரு கத்தரிக்கோலைக் கையில் எடுத்துக் கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டின் உரோமத்தைக் கத்தரித்து எடுத்து விடலாம்.

இப்படிச் செய்தால் இரண்டு மூன்று ரூபாய் சிக்கனப் படுத்தினாது போல இருக்குமே என்று மூக்கம்மாள் நினைத்தாள். உடனே ஒரு கத்தரிக்கோலை எடுத்து ஆட்டின் உரோமத்தை வெட்டத் தொடங்கினாள். 

இதற்கு முன்னர் ஆட்டின் உரோமத்தை வெட்டி அவளுக்குச் சற்றும் பழக்கமில்லாததால் உரோ மத்தை வெட்டும் போது கத்தரிமுனை ஆட்டின் சதைப்பகுதியையும் வெட்டி ரணமாக்கியது.

ஆடு வேதனையைப் பொறுக்க முடியாமல் துடிதுடியாய்த் துடித்து அலறியது. அவள் பயந்து போய் நிறுத்தி விட்டாள். அதை மாட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றால் பணம் செலவாகுமே என்று சும்மா இருந்து விட்டாள். ரணம்பட்ட இடம் சீழ் கோர்த்து ஆடு ஒரே வாரத்தில் இறந்து விட்டது. 

செலவினை சிக்கனப்படுத்த நினைத்த விதவை மூக்கம்மாளுக்கு ‘முதலுக்கே மோசமானது’ ஆட்டினை இழந்து அவதிப்பட்டாள்.

Leave a Comment