குருடன் கையில் விளக்கு! | tamil short story | Lamp in blind’s hand!
காரிருள் படர்ந்திருக்கும் இராத்திரி வேளையில் ஒரு குருடன் தன் கையில் விளக்கைப் பிடித்து கொண்டு போகவேண்டிய இடங்களுக்கெல்லாம் நடந்து போய்க் கொண்டிருந்தான்.
வழியில் அவனைப் பார்த்தவர்கள் எல்லாம் ஏளனமாய் தங்கள் கைகளை மடக்கித் தலையில் வைத்து நெட்டி முறித்துக்கொண்டே, “அடே குருட்டுக் கழுதை உன் அழகுக்கு லாந்தர் விளக்கு ஒன்றுதான் குறைவாக இருந்ததோ?” என்றார்கள்.
அதையெல்லாம் கேட்ட குருடன் அவர்களிடம், “அட மதிகெட்ட குருடர்களே! உங்களுக்கு கண்ணிருந்துதான் என்ன பயன்? கைவிளக்கினால் என்னுடைய கிடைக்கும் பயனை அறிந்து கொள்ளத் தக்க புத்திக் கண் இல்லாமல் போயிற்றே புறக்கண் பெற்று அகக் கண் இழந்து போன முட்டாள்களே! கேளுங்கள்.
இந்த விளக்கை நான் பிடித்துக் கொண்டு நடந்து போவது எனக்காக அல்ல! வெளிச்சம் இல்லாவிட்டால் இருட்டு வேளையில் உங்களுடைய கண் குருடு பட்டுப்போய் எதிரில் வரும் நீங்களெல்லோரும் என் மேல் விழுந்து என்னை மிதித்து துவைத்து விடுவீர்கள்.
இந்த விளக்கு வெளிச்சம் என் கையில் இருப்பதால் என் மேல் இடித்துக் கொள்ளாமல் நீங்களே ஒதுங்கிச் செல்வீர்கள்.
இந்தச் சிறய விஷயம் உங்கள் அறிவுக் கண்ணுக்கு தெரியாமல் போயிற்றே!” என்று கூறி பரிகாசம் செய்தபடியே தன் வழியில் சென்றான்.