38. வாயுள்ள பிள்ளை | தென்னாலிராமன் கதைகள் | Talented child | tenali raman story
இராயரின் அரண்மனைப் பூந்தோட்டத்திற்குள் தெனாலிராமனின் சின்னஞ்சிறு மகன் திருட்டுத்தனமாக உட்புகுந்து தன் தாயாருக்காகச் சில ரோஜாப் புஷ்பங்களை பறித்துச் செல்வதைத் தன் வழக்கமாக மேற்கொண்டிருந்தான்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகட்பட்டுக் கொள்வான்
என்பது போல் ஒரு நாள் அவன் தோட்டத்துக்
காவலாளிகளிடம் அகப்பட்டுக் கொண்டான்! அவர்களில்
சில காவலர் தெனாலி ராமனை அழைத்துவந்து,
“உம்முடைய சிறு பையன் ரோஜாப் புஷ்பங்களைத் திருடித்
தன் இடுப்புத் துணியில் கட்டி வைத்திருக்கிறான்! அவனை
இந்தத் தோட்டத்திற்குள்ளே அடைத்து வைத்திருக்கிறோம்!
இன்னும் சிறிது நேரத்தில் அரசரால் விசாரிக்கப்பட்டு
தண்டிக்கப் படுவான்!” என்றனர்.
அப்போது தெனாலிராமன் தன் மகனின் காதில் விழும்படியாக உரத்த குரலில், “என் மகன் வாயுள்ள பிள்ளையாயிருந்தால் பிழைத்துக்கொள்வான். நீங்களெல்லாம் எண்ணுவது போல் இப்போது அவன் ரோஜாப்பூக்களைத் திருட வந்திருக்கமாட்டான்.
அவனுடைய தாய்க்காக சில மருந்து மூலிகைகளைத்தான் பறித்து இப்போது தன் மடியில் கட்டிக் கொண்டிருப்பான்!” என்றான்.
அதிலுள்ள குறிப்பை யூகித்துக் கொண்ட பிள்ளை சட்டென்று தன் மடியில் இருந்த ரோஜாப் பூக்களையெல்லாம் மென்று தின்றுவிட்டு கைக்கு அகப்பட்ட சில மூலிகைகளைப் பறித்து மடியில் கட்டிக்கொண்டு நின்று, திருட்டுக் குற்றத்திலிருந்து தப்பிவிட்டான்!