27. கறுப்பு நாயை வெள்ளை நாய் ஆக்குதல் | தமிழ் கதைகள் | Making a black dog a white dog | tenali Raman story
இராயர் ஒருநாள் சூரியோதயமாகி நான்கு மணி வரை உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வழக்கமாக வரும் சவரத் தொழிலாளி அரசருக்குத் தூங்கும் போதே நன்றாக முகசவரம் செய்துவிட்டுப்போய் விட்டான்.
அதையறிந்த இராயர் அவனை அழைத்துப் பாராட்டி அவனுக்கு வேண்டியது என்ன என்று கேட்டார். அதற்கு மாமிசம் உண்ணும் வழக்கமுடைய அவன், “அரசே! என்னை அறிஞனும் அந்தணனுமாக்கி சைவப் பெரியார்கள் அனைவரும் உண்ணும் அறச்சாலையில் நானும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்படிச் செய்யவேண்டும்!” என்று கோரினான்.
இராயரும் தம் அறிஞர், அந்தணர், சைவப் பெரியார்கள் அனைவரையும் அழைத்து அந்த சவரத் தொழிலாளியுடன் ஆறுமாத காலத்திற்குள் உணவருந்தாவிடில் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் மான்யங்களையெல்லாம் பறிமுதல் செய்து விடுவதாகப் பயமுறுத்தியனுப்பினார்.
அச்சைவப் பெரியார்கள் தெனாலிராமனின் உதவியை நாடிவந்து ஏதாவது ஓர் உபாயம் செய்யும்படி கூறிச் சென்றனர். ஆறுமாத காலத் தவணை முடிந்ததும் அறச்சாலையில் சைவப் பெரியார்களுடன் மாமிச உணவியான சவரத் தொழிலாளி ஒன்றாக உணவுண்பதைப் பார்ப்பதற்காக இராயர் பல்லக்கில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
அவ்வழியிலுள்ள குளக்கரையில் தெனாலிராமன் அப்போது நான்கு அந்தணர்களை ஓமம் வளர்க்கச் செய்து ஒரு கறுப்பு நாயைக் குளிப்பாட்டி ஓமகுண்டத்தைச் சுற்றி இழுத்து வந்தான்.
அதைக் கவனித்த இராயர் வியப்புடன் தெனாலிராமனின் செய்கையைப்பற்றி விசாரித்ததும் அவன் “அரசே! கறுப்பாகவுள்ள நாயை வெள்ளை நாயாக்கப் போகிறேன். மாமிச உணவுண்ணும் ஒரு சவரத் தொழிலாளி சைவப் பெரியாராக மாறும்போது. என் கறுப்பு நாய் வெள்ளை நாயாக மாற முடியாதா என்ன?” என்றான்.
உடனே இராயர் அவனுடைய உட்கருத்தைப் புரிந்து கொண்டு, ஒருவன் தானாக மாறினால் உண்டேதவிர, மற்றவர்களால் மாற்ற முடியாது என்று தீர்மானித்து, அறச்சாலைக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு நாவிதனை அழைத்துப் பொன்பொருள் கொடுத்து, “நீ சுய அறிவினால் உயர்வடைய முயற்சி செய்” என்று கூறியனுப்பினார்.