கொடுப்பவர் மேலோர், கொடுக்காதவர் கீழோராவார். கீழோரின் வரிசையில் விளங்கி வந்தவர் தான் பண்ணையார் பரமசிவம்.
ஒரு நாள்… அவரின் பெரிய வீட்டின் முன்னே நின்ற பிச்சைக் காரன் ஒருவன்,
அய்யா… அம்மா… என்று குரல் கொடுத்தான்.
பிச்சைக் காரனின் குரல் கேட்டவுடன், லொள்…. லொள்… என்று குரைத்துக் கொண்டே நாய் முன்னே வர, பரமசிவம் பின்னே வந்தார். பிச்சைக்காரனின் அலங்கோலத்தைக் கண்டு எரிச்சல் கொண்டவர்,
“உனக்கு என்ன வேண்டும்? ” என்று கேட்டார்.
“அய்யா பசியாயிருக்குது; சோறிருந்தா போடுங்க,உங்களுக்கு தர்மம் ஆகட்டும்.”
“தர்மமாவது, கர்மமாவது! சோறெல்லாம் இல்லை” என்றார். “
அய்யா… அய்யா… அப்படியெல்லாம் சொல்லாதீங்க, ஏதாவது போடுங்கய்யா’ மீண்டும் கெஞ்சினான்…. பிச்சைக்காரனை மறுபடியும் பார்த்த பரமசிவம், அவன் கையிலிருந்யத தூக்குச் சட்டியைப் பார்த்தார்.
” தூக்குச் சட்டியிலே என்ன வச்சிருக்கே?
“சோறுய்யா”
“அதை சாப்பிட வேண்டியது தானே. “
“காலை வேளைக்குச் சாப்பிட்டுக் கிர்றேன்பயா..”
“அப்புறம் எதுக்கு சோறு கேட்கிறே?”
“மத்தியானத்திற்கு”
“ஏண்டா! நாட்டிலே அவனவன் ஒரு வேளை சோத்துக்கே தாளம் போட்டுக் கிட்டிருக்கும்போது, நீ கெட்ட கேட்டிற்கு உனக்கு ரெண்டு நேரம் சோறு வேணுமா? அப்படியின்னா, மத்தியானம் வந்து பிச்சை கேட்க வேண்டியது தானே! காலையிலே ஏண்டா பிச்சை கேட்டு வந்திருக்கே?”
“அய்யா! சிக்குன் குனியா காய்ச்சலினாலே கை காலெல்லாம் வீங்கி, மூட்டுக்கு மூட்டு வலிக்கிறதினாலே சரிவர நடக்க முடியலே. அதனால் தான் இரண்டு நேர சோத்தை ஒண்ணா வாங்கிட்டுப் போயி, சாப்பிடலாமின்னு தான் கேட்கிறேன்.”
“நீ கேட்கிற மாதிரி சோறெல்லாம் இல்லே.”
“சோறில்லாட்டி, இட்லி – தோசையிருந்தா போடுங்கய்யா.”
“அதுவுமில்லை.”
“சில்லறையிருந்தா கொடுங்க, டீயாவது கடையிலே வாங்கிக் குடிச்சிட்டுப் போறேன்.”
“சில்லறைக் காசுமில்லை.”
“குடிக்க தண்ணீயாவது கொடுங்க… ”
“தண்ணீர்ப் பஞ்சத்திலே அதுவுமில்லை.”
“மாசி மசமா இருக்கிறதினாலேகுளிரும் ஏதாவது பழைய போர்வை யிருந்தா கொடுங்கய்யா.”
” போர்வையுமில்லே.”
“அப்படி யென்றால் உங்ககிட்ட என்ன தான் இருக்குது? ”
“என்கிட்ட ஒண்ணுமேயில்லை.”
ச் … ச் … ச் … சோ …
“என்னடா இச் ‘ கொட்டுறே? ”
“வேறொன்றுமில்லைய்யா, ஒண்ணுமேயில்லாத உங்க நிலைமையை நினைச்சேன், ரொம்ப பரிதாபமாயிருக்கு.”
“என்னடா … எடக்கா பண்றே? ”
“எடக்கு பண்ணலேயா, பெரிய வீட்டிலேயிருக்கிற உங்ககிட்ட இல்லாத சோறு, சில்லறைக் காசு, ஏங்கிட்ட இருக்கு. இந்த சில்லரைக் காசு வாங்கிட்டு, டீக்கடையிலே டீயாவது குடிச்சிட்டு வாங்க!” என்று பிச்சைக்காரன் கூறியது தான்.
“ஏண்டா! பிச்சைக்கார நாயே! இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்ட கதைபோல, ஓங்கிட்ட பேசிக்கிட்டிருந்ததினாலே.. கேவலமா நினைச்சியா, பிச்சைக்காரப்பய நீ, எனக்கே பிச்சை போட வந்திட்டியா! உன்னை என்ன செய்றேன் பாரு?” என்று ஆவேசமாகக் கத்தியவாறே நாயை ஏவி விட்டார்.
சிக்குன் குனியா காய்ச்சலினால், கை – கால்கள் வீங்கியிருந்த பிச்சைக்காரனால் ஓட முடியாத நிலை. அதனைப் பயன்படுத்திய நாய், அவனைக் கடித்துக் குதறி வீங்கியிருந்த கால்களை ரண காயங்களாக்கி விட்டுச் சென்றது. பிச்சைக்காரன் ஈனக் குரலில் முனங்கிக் கொண்டே எழுந்து நடக்க முடியாமல் படுத்து விட்டான்.
எல்லாம் இருந்தும் எதுவும் பிறருக்கு கொடுக்காது இரக்கமின்றிருப்பவன், பிச்சைக் காரனை விடக் கேவலமானவன் தான்.