கண்டு ஒன்று சொல்லேல் |ஆத்திசூடி கதைகள் | Tell exactly what you saw | tamil kathaigal
நரியும், ஓநாயும் காட்டுப்பாதையின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தன. அவை பேசிச் சிரித்தபடியே சந்தோஷமாக நடந்து வந்தபோது, குரங்கு ஒன்று அந்தப் பக்கமாக வந்தது.
“நரியாரே! நலமாக இருக்கின்றீரா? உம்மோடு ஒநாயாரும் வருகின்றார்! அவர் எப்படி உங்களுக்கு நண்பரானார்?” என்று ஆச்சர்யத்துடன் நரியைப் பார்த்துக் கேட்டது குரங்கு.
“வாருங்கள் குரங்காரே! எங்கே வெகு நாட்களாக உம்மைக் காணவில்லையே! இந்தக் காட்டைவிட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டீரா? உம்மைப் பார்த்துப் பல நாட்கள் ஆகியதால் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டேன்.
அந்த நேரத்தில் தான் ஓநாயார் என்னோடு நட்புடன் பழக ஆரம்பித்தார். இனிமேல் இவர் உனக்கும் நண்பர்தான்” என்று நரி கூற ஓநாயும், குரங்கும் கை குலுக்கிக் கொண்டன. பின்னர் குரங்கை ஏறிட்ட நரி “குரங்காரே! என்னைப் பிரிந்து இவ்வளவு நாட்களாக நீர் எங்குதான் சென்றீர்? அதனை எனக்குத் தெரியப்Dபடுத்தும்” என்று கேட்டது.
உடனே குரங்கு “நரியாரே! எனது நண்பன் ஒருவனுக்குக் காலில் கல்விழுந்து பலமான காயம் ஏற்பட்டுவிட்டது. அவனின் காயத்தை குணப்படுத்த வேண்டி, சிறிது நாட்கள் அவனோடு தங்கி அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தேன்.
அவன் கால் காயம் ஆறிய பின்னரே, அவனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு வருகிறேன்” என்று கூறியது . அதனைக் கேட்ட நரியும் “சபாஷ் நண்பனே! நல்ல காரியம் தான் செய்து வந்திருக்கிறாய்! இனிமேலாவது நாம் நன்றாகக் காட்டைச் சுற்றிக்கொண்டு பேசிக் கொண்டு திரியலாம்” என்றது.
உடனே குரங்கு “நரியாரே! நீங்கள் இருவரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருங்கள். நான் சென்று என் நண்பனுக்குப் பழங்களைப் பறித்துக் கொடுத்துவிட்டு வருகிறேன். கால் காயம் ஆறியிருந்தாலும் கூட, அவனால் மரம் ஏறிப் பழங்களைப் பறிக்க சிரமமாகயிருக்கும்.
அதனால் அவனுக்கு என்னால் முடிந்த உதவியை செய்து விட்டு வருகிறேன்” என்று கூறியது. உடனே நரியும் “நண்பா! ம்… தாராளமாக சென்று வா! நீ வரும் வரை நாங்கள் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியது. குரங்கு அந்த இடத்தைவிட்டுச் சென்ற பின்னர் ஓநாய் நரியை நோக்கியது. “நரியாரே! இந்தக் குரங்கைப் போய் உமது நண்பராக ஏற்றுக் கொண்டிருக்கின்றீரே! ஏதோ அவர் தயவால்தான் அவர் நண்பனே உயிர் வாழ்கிறான் என்று கூறியபடி செல்கிறாரே!
இந்தக் குரங்குக்காக நாம் இங்கேயே காத்திருக்க வேண்டுமா… என்ன? நாம் வேறு எங்காவது சென்று உரையாடுவோம். குரங்கு நம்மோடு வந்தால் நமக்குள் சரியாகப் பேசிக் கொள்ள முடியாது” என்று குரங்கை மட்டம் தட்டிப் பேசியது ஓநாய்.
ஓநாயின் பேச்சுக்கு நரி எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை. அமைதியுடன் ஓநாயின் அழைப்பிற்கு இணங்கி அதோடு சென்றது. மறுநாள் ஓநாய் நரியின் வருகையை நோக்கி ஆவலோடு காத்துக் கொண்டிருந்தது.
ஆனால் அந்த நேரத்தில் நரி குரங்கை அழைத்துக் கொண்டு வேறு பாதை வழியாக நடந்து செல்லத் தொடங்கியது. உடனே குரங்கு “நரியாரே! எங்கே உமது புது நண்பர் ஒநாயாரைக் காணவில்லை இன்று உம்மை சந்திக்க அவர் வரவில்லையா?” என்று ஆவலோடு கேட்டது .
அதனைக் கேட்ட நரி “குரங்காரே! ஓநாயார் எனக்காக வேண்டி வழக்கமான இடத்தில் என்னை சந்திக்க காத்துக் கொண்டிருக்கிறார். எனக்கோ வஞ்சகத்துடன் பேசுகின்ற அவரோடு பழக விருப்ப மில்லை” என்று கூறியது.
நரியும், குரங்கும் அன்றிலிருந்து ஓநாயோடு பேசுவதை விட்டுவிட்டன. குரங்கை அநியாயமாக பழிச் சொல்லால் திட்டிய ஓநாய் நரியாரின் நட்பை இழந்து விட்டது.
நீதி:
ஒருவரைப் பார்த்த இடத்தில் ஒன்று பேசியபடி அவர் இல்லாத இடத்தில் வேறொன்று பேசக்கூடாது.