ராயரின் அரண்மனை அன்று கூடியிருந்தது. அறிஞர் பெருமக்கள் மந்திரி பிரதாணிகள் கூடி இருந்தார்கள்.அப்போது பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன,
மனிதனின் மன இயல்பு பற்றியும் ஒரு பேச்சு வந்தது. மனித மனம் பற்றி பலரும் பல மாதிரி கூறினார்கள், அப்பாஜி எழுந்து “ஒரு மனிதனின் மனம் எப்படியோ, அப்படித்தான் உலகமும் என்று மக்கள் நினைப்பார்கள்” என்று கூறினார்.
“உலகில் ஒரு மனிதனுக்கு பிடித்த பொருள் மற்றொரு மனிதனுக்கு பிடிப்பதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக தோன்றும்” என்று அப்பாஜி ஆணித்தரமாக கூறினார்.
அப்பாஜியின் வாதத்தை அரசர் ஒப்புக் கொள்ளவில்லை. மற்றவர்களும் அரசரின் கருத்தைதான் ஆதரித்தனர். உடனே அப்பாஜி தான் கூறிய கருத்தை சில நாட்களில் நிருபித்துக் காட்டுவதாக கூறினார்.
நாட்கள் உருண்டோடின. மன்னரும் இந்த நிகழ்ச்சியை மறந்து விட்டார். ஆனால் அப்பாஜி அந்த சம்பவத்தை மறக்கவில்லை.
ஒருநாள் அரசரும் அப்பாஜியும் மாறுவேடத்தில் உலாவச் சென்றனர். வயல் வெளிக்குச் சென்றிருந்த அவர்கள் மூன்று பெண்கள் அங்கு நின்றிருப்பதை கண்டார்கள்.
அந்த வயலை பார்த்த ஒரு பெண், “இது முகத்துக்குதான் உதவும்” என்றாள்.உடனே மற்றொரு பெண் அதை மறுத்து இது “வாய்க்குதான் உதவும்” என்றாள். மூன்றாவது பெண் கூறினாள், “நீங்கள் சொல்வதெல்லாம் தவறு, இது பிள்ளைக்குத்தான் உதவும்” என்று உறுதியாகச் சொன்னாள்.
பின்பு மூன்று பெண்களும் தங்கள் வழியே சென்று விட்டார்கள். இப்பெண்களின் பேச்சை கேட்ட கிருஷ்ண தேவராயருக்கு அதன் பொருள் விளங்கவில்லை. எனவே, அதை விளக்குமாறு அப்பாஜியிடம் கேட்டார்.
உடனே அப்பாஜி “முகத்துக்கு உதவும் என்றால் மஞ்சள் பயிரிடலாம் என்று பொருள், வாய்க்கு உதவும் என்றால் நெல் பயிரிடலாம் என்று பொருள், பிள்ளைக்கு உதவும் என்றால் தென்னம் பிள்ளை பயிரிடலாம் என்பது பொருள்” என்றார் அப்பாஜி.
அரசர் ஆச்சர்யத்துடன் கேட்டார், அப்பாஜி மேலும் தொடர்ந்தார். “அரசே உள்ளம் எப்படியோ, அதுபோலவே உலகம் என்று நினைப்பது மனித மனம் என்று நான் அன்று சொன்னேனே” என்றார். மன்னர் மகிழ்ச்சியுடன் அதை ஆமோதித்தார்.