செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது சிறந்தது | It is best to apologise for the mistakes | moral values stories in tamil

செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது சிறந்தது | It is best to apologise for the mistakes | moral values stories in tamil

ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார்.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து மன்னரை காயப்படுத்தி, அவர் தூக்கத்தை கலைத்தது. சுற்றி இருந்த காவலர்கள் நாலா பக்கமும் சென்று, ஒரு நடுத்தர வயது பெண்ணை பிடித்து, அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள். 

மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “ஏனம்மா என் மீது கல்லை எறிந்தாய்? அது என் தூக்கத்தை கலைத்ததுடன் என்னையும் காயப்படுத்தி விட்டது” என்றார். 

அதற்கு அந்த பெண் அரசரை பார்த்து, “மன்னர் பெருமகனே, நான் காட்டில் விறகு வெட்டியும், அவைகளை பொறுக்கியும், நாட்டில் விலைக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கிறேன்.

வரும் வழியில் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்தேன். என் குழந்தைகளின் நினைவு வந்தது. பிள்ளைகளின் பசியை போக்குவது பெற்றவள் கடமை அல்லவா?. 

அந்த பழங்களை பறிப்பதற்காக ஒரு கல்லை எடுத்து மரத்தில் எறிந்தேன். தாங்கள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்தது தூரத்தில் இருந்து எனக்கு தெரியவில்லை.

நான்  எறிந்த அந்த கல்லானது உங்கள் மீது பட்டு உங்கள் தூக்கத்தை கலைத்ததுடன், உங்களையும் காயப்படுத்தி விட்டது. இந்த தவறுக்கு நான் தான் காரணம் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று வேண்டி நின்றாள்.

மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “பெண்ணே, நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றாய். அது உன் சிறந்த பண்பு. உன்னை மன்னித்து விட்டேன்”, என்று கூறியதோட அப்பெண்ணுக்கு இரண்டு பசுக்களையும், கை செலவுக்கு பணத்தையும் கொடுக்க ஆணையிட்டார்.

moral values stories in tamil (2)

சுற்றி இருந்த காவலர்கள் மன்னரை நோக்கி, “அரசே, தங்களை கல்லால் அடித்தவளை மன்னித்ததுடன் அவளுக்கு பரிசும் தருகிறீர்கள் இச்செயல் எங்களுக்கு வியப்பு அளிக்கிறது” என்றனர். 

காவலர்களை பார்த்து மன்னர், “காவலர்களே, அறிவற்ற மரம் கல்லால் அடித்தால் பழம் தருகிறது. அவ்வாறு இருக்க அறிவுள்ள நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?. மேலும் அவள் வேண்டுமென்று என்னை கல்லால் அடிக்கவில்லை.

பழங்களை உதிர்க்கவே கல்லால் அடித்தால் அது தவறுதலாக என் மீது பட்டு என்னை காயப்படுத்தியது. அவள் தான் செய்த தவறுக்கு வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டாள். 

அது மட்டுமல்ல அவள் தன் பிள்ளைகளின் பசியை போக்கவே மரத்தின் மீது கல் எறிந்தாள். அது தாயாகிய அவள் கடமை அல்லவா?. அவள் அவளுடைய பிள்ளைகளுக்காக அவ்வாறு செய்தாள். 

நான் என் குடிமக்களுக்காக அவளுக்கு பரிசு வழங்கினேன்” என்றார். காவலர்கள் மன்னரின் விளக்கம் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர். 

நீதி : செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பது சிறந்த குணமாகும். எனவே, நாம் தெரியாமல் தவறு செய்திருந்தால் உரியவரிடம் மன்னிப்பு கேட்டு பழக வேண்டும்.




2 thoughts on “செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது சிறந்தது | It is best to apologise for the mistakes | moral values stories in tamil”

Leave a Comment