இறைவன் மேல் முழு நம்பிக்கை வேண்டும் | Have full faith in God | baby story in tamil
ஓர் ஆற்றங்கரை அருகே சிறுகுடிசை ஒன்றை கட்டிக்கொண்டு அதில் பால்காரி ஒருத்தி வசித்து வந்தாள். அவளிடம் சில பசுக்கள் இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கும் பாலை அடுத்த ஊரில் விற்று, அதனால் கிடைக்கும் சின்ன வருவாயில் அவள் வாழ்ந்து வந்தாள்.
அந்த ஆற்றின் மறு கரையில் ஒரு கோயில் இருந்தது. அந்த கோயில் குருக்கள் சுவாமி அபிஷேகத்திற்காக நாள் தோறும் பால் கொண்டு வந்து கொடுக்குமாறு அந்த பால்காரியிடம் கூறியிருந்தார்.
பால்காரியும் ஒரு படகின் மூலம் மறு கரைக்கு வந்து குருக்களிடம் பால் கொடுத்து வந்தாள். அந்த பால்காரி இறைவனின் திருப்பெயரை எப்பொழுதும் உச்சரித்த படியும், அவரிடம் முழு நம்பிக்கை வைத்திருந்தாள்.
தன்னை எந்த நிலையிலும் இறைவன் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை அவளை சுறுசுறுப்பாக இயங்க வைத்தது. கோயில் குருக்களுக்கு இறைவனிடம் பரிபூரண பக்தி கிடையாது. ஏதோ கடமைக்காக இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வந்தார்.
ஆனால் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதில் வல்லவராக இருந்தார். ஒரு முறை படகு காரன் தாமதம் செய்ததனால் அவள் குறிப்பிட்ட நேரத்திற்கு பால் கொண்டு வந்து கோவில் குருக்களிடம் கொடுக்க முடியவில்லை.
குறித்த நேரத்திற்கு அவள் பால் கொண்டு வந்து கொடுக்காததால் கோயில் குருக்கள் அவள் மேல் கோபப்பட்டு, “ஏன் தாமதம்?” என்று கேட்டார். அதற்கு அந்த பால்காரி, “படகுக்காரன் தாமதமாக வந்து படகை எடுத்ததால் தான் தாமதம் ஆயிட்டு” என்றாள்.
அதற்கு அந்த கோவில் குருக்கள், “பெண்ணே, இறைவனின் மேல் முழு நம்பிக்கை வைத்து அவருடைய திருப்பெயரை கூறினால் பிறவி என்னும் பெருங்கடலையே தாண்டி விடலாம். அப்படி இருக்கும்போது உன்னால் இந்த சிறிய ஆற்றை கூடவா கடக்க முடியவில்லை” என்று கேலியாக பேசினார்.
மறுநாள் முதல் சுவாமி அபிஷேகத்திற்கு குறித்த நேரத்தில் பால் கிடைத்து வந்தது. ஆற்றில் பெருவெள்ளம் வந்தாலும் கூட பால்காரி மட்டும் குறித்த நேரத்திற்கு வந்து பால் கொடுத்து வந்தாள்.
இது கோவில் குருக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர் பால்காரியை பார்த்து “பெண்ணை, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் கூட அபிஷேக பாலை குறித்த நேரத்தில் கொண்டு வந்து கொடுத்து விடுகிறாயே இது எப்படி?” என்று கேட்டார்.
அதற்கு அந்த பால்காரி, “சுவாமியே, நீங்கள் கூறிய படியே இறைவன் மேல் முழு நம்பிக்கை வைத்து அவருடைய திருப்பெயரை சொல்லிக் கொண்டே ஆற்றை கடந்து வருகிறேன்” என்றாள்.
தான் விளையாட்டாக சொன்னதை பால்காரி கடைபிடிக்கிறாள் என்று எண்ணிய அவர், இறை நம்பிக்கையாவது அவளை காப்பாற்றுவதாவது என்று சந்தேகப்பட்டு அந்த பால்காரியை பின் தொடர்ந்து வந்தார்.
“நீ எவ்வாறு ஆற்றை கடந்து வருகிறாய்? என்பதை எனக்கு காட்டுவாயா” என்றார். பால்காரி அவரை அழைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு சென்றாள். இறைவன் மேல் முழுநம்பிக்கை வைத்து இறைவனுடைய திருப்பெயரை சொல்லிக் கொண்டே ஆற்றின் மேல் நடந்து சென்றாள்.
கோயில் குருக்கள் தாமும் அப்படியே செய்ய எண்ணி இறைவனின் முழு நம்பிக்கை இல்லாமல் வெறுமனே வாயால் இறைவனுடைய திருப்பெயரை சொல்லிக்கொண்டே ஆற்றில் இறங்கினார்.
அவ்வளவுதான் அவர் நீருக்குள் மூழ்கினார். உடனே பால்காரி வந்து அவரை காப்பாற்றி கரை சேர்த்தாள் அவள் கோயில் குருக்களை பார்த்து, “சுவாமி இறைவன் மேல் முழு நம்பிக்கை இல்லாமல் வெறுமனே வாயால் அவர் திருப்பெயரை உச்சரிப்பதால் பயணம் இல்லை” என்றாள். கோயில் குருக்கள் தலை குனிந்தார்.
நீதி : இறைவன் மேல் முழு நம்பிக்கை வைத்து அவருடைய திருப்பெயரை நாம் உச்சரித்தால் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இறைவன் நம்மை காப்பாற்றுவார். எனவே, நாம் இறைவன் மேல் நம் முழு நம்பிக்கையை வைப்போம்.
God is great