ஆணவம் வேண்டாம் | Don’t be arrogant | short stories in tamil
மாவீரர் அலெக்ஸாண்டர் உலகப் புகழ்பெற்றவர் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். அவருடைய வாழ்வில் நிகழ்ந்த ஓர் நிகழ்ச்சி ‘ஆணவம் வேண்டாம்’ என்பதை காட்டுகிறது.
அலெக்சாண்டர் கிரேக்க நாட்டை விட்டு புறப்பட்டபோது அவருடைய நண்பர்கள் அவரை பார்த்து, “நீங்கள் ஒருவேளை இந்தியாவுக்கு போனால் திரும்பி வரும்போது அங்கிருந்து ஒரு துறவியை கிரேக்கத்துக்கு கூட்டி வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்கள். இந்தியாவுக்கு வந்த அலெக்சாண்டரும் அதை நினைவில் வைத்துக் கொண்டு ஒரு நாள் துறவி ஒருவரை தேடிக்கொண்டு புறப்பட்டார்.
ஒரு கிராமத்தின் வழியாக அலெக்சாண்டர் செல்லும்போது நதிக்கரை ஓரமாக ஒரு துறவி இருப்பதாக அந்த கிராமத்து மக்கள் கூறினார்கள். “நீங்களே சென்று அந்த துறவியை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார் அலெக்சாண்டர். கிராமத்து மக்கள் அவரை பார்த்து சிரித்தார்கள்.
அலெக்சாண்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் கூறினார்கள், “கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் முற்றும் துறந்த துறவிகள் வரமாட்டார்கள்” இதை கேட்டு கோபமடைந்த அலெக்சாண்டர் தன் உடைவாளை உருவிக்கொண்டு துறவி தியானம் செய்து கொண்டிருக்கும் ஆற்றங்கரையை நோக்கி புறப்பட்டான்.
துறவி அலெக்சாண்டர் வந்திருப்பதை கவனிக்காமல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அலெக்சாண்டர் அந்த துறவியை பார்த்து, “நான் தான் உலகம் போற்றும் மாவீரன் அலெக்சாண்டர். என்னை கண்டு மரியாதை கொடுக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?” என்றான்.
துறவி மெதுவாக கண்களை திறந்து அலெக்சாண்டரை பார்த்து, “பெரிய மனிதர்கள் எவருமே தங்களுடைய பெரிய மனிதத் தன்மையை நிரூபித்துக் கொள்ள முயற்சி செய்வதில்லை. அப்படி அவர்கள் முயற்சி செய்தால் அவர்கள் சிறியவர்கள் என்பதற்கு தான் அடையாளம்” என்றார்.
அலெக்சாண்டர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டான். அவன் துறவியைப் பார்த்து என் பின்னால் வரும்படி உனக்கு ஆணையிடுகிறேன் என்றான். துறவி சிறிதும் கோபப்படாமல், “யாருக்கு நீ ஆணை இடுக்கிறாய்? எங்களைப் போன்ற துறவிகள் எவருடைய உத்தரவுக்கும் கட்டுப்படுவதில்லை. இறைவனுக்கு மட்டுமே நாங்கள் கட்டுப்படுவோம். இறைவனைத் தவிர வேறு யாருக்குமே, எங்களுக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை” என்றார்.
உடனே அலெக்சாண்டர் கோபத்துடன் துறவியை பார்த்து, “நீ என்னுடன் வர மறுத்தால் உன் தலையை வெட்டி சாய்பேன்” என்றான்.
உடனே துறவி, “முட்டாளே, நான் என்ற ஆணவத்துடன் நீ ஆடுகின்றாய். நீ ஏதோ என்னுடைய உடல் எனக்கு சொந்தமானது என்று எண்ணி என்னை மிரட்டுகிறாய், நான் என்னும் உன் ஆணவமே உன்னை அழிக்கும். எனவே அதை விட்டுவிடு என் போன்ற துறவிகள் எதற்குமே அஞ்ச மாட்டார்கள். அதனால் தான் பெரியோர், “ஆண்டிக்கு அரசனும் துரும்பு” என்றார்கள்.
அதனால் “நான்” என்று ஆணவத்தை விட்டு ஆகவேண்டிய நல்ல செயல்களைப் பார்”என்றார்.
உடனே அலெக்சாண்டர் ஆணவம் நீங்க பெற்றவனாய் தன் வாளை அந்த துறவியின் பாதங்களில் வைத்து வணங்கி விட்டு சென்றான்.
நீதி : மனிதனுக்கு நான் என்ற ஆணவம் கூடாது. அது அவனையே அழித்துவிடும். எனவே ஆணவத்தை விட்டு நல்ல வழியில் நடக்க வேண்டும்.