அன்னப்பறவையும் புறாவும் | Swan and Pigeon | Moral stories for kids in tamil

அன்னப்பறவையும் புறாவும் | Swan and Pigeon | moral stories for kids in tamil

ஒரு நதிக்கரையில் அன்னப்பறவை ஒன்று வாழ்ந்து வந்தது, அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மற்ற பறவைகள் எல்லாம் அன்னப்பறவையை பார்த்து அதன் அழகை ரசிக்கும் அந்த அளவுக்கு அது அழகான பறவையாக இருந்தது. அந்த அன்னப்பறவை எல்லோரிடமும் நட்பாகவும் மற்றவருக்கு உதவி செய்யும் குணம் உடையதாகவும் இருந்தது.

அந்த அன்னப்பறவைக்கு ஒரு புறா நண்பன் இருந்தான். அன்னப்பறவை எப்போதுமே மற்ற பறவைகளிடம் நாம் மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்கும். ஒரு நாள் வேட்டைக்காரன் ஒருவன் காட்டில் வேட்டையாட வந்திருந்தான், அவனுக்கு வேட்டையாட எந்த ஒரு பறவையும் விலங்கும் கிடைக்கவில்லை.

அவன் கோபத்தில் அங்கேயும் இங்கேயும் சுற்றிக் கொண்டே இருந்தான். வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்தது, கடும் வெயிலினால் அந்த வேட்டைக்காரனும் களைப்படைந்து ஒரு மரத்தடியில் போய் ஓய்வெடுக்க அமர்ந்தான். வேட்டைக்காரன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அதே மரத்தின் கிளையின் மேலே அன்னபறவை உட்கார்ந்து இருந்தது.

moral stories for kids in tamil

அன்னப்பறவை வேட்டைக்காரன் கீழே களைப்பாக இருப்பதை பார்த்து மேலே கிளையிலிருந்து கொண்டு அதன் சிறகினால் அவனுக்கு காற்று வீசி கொடுத்து கொண்டு இருந்தது. அந்தக் காற்றின் குளிர்ச்சியால் அந்த வேட்டைக்காரன் அப்படியே தூங்கி விட்டான். அப்போது புறா அங்கே வந்து அன்னப்பறவையிடம் கேட்டது, “நண்பா உனக்கு இவ்வளவு பெரிய மனசா…இந்த வேட்டைக்காரன் மற்ற பறவைகளை எல்லாம் வேட்டையாடுபவன். நமக்குத் தீங்கிழைப்பவனுக்கு நீ உதவி செய்கிறாயே” என்று கேட்டது.

அதற்கு அந்த அன்னப்பறவை சொன்னது, “நண்பா வேட்டையாடுவது அவனுடைய தொழில், அதனால் அவனை நாம் தவறு சொல்ல முடியாது. இப்போது அவன் மிகவும் களைப்பாக இருக்கிறான் அதனால் தான் நான் என் சிறகினால் அவனுக்கு காற்று வீசி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றது.

புறாவும் அப்படியா சரி சரி என்று சிரித்துக் கொண்டே அந்த வேட்டைக்காரன் மூஞ்சியில் எச்சம் போட்டுவிட்டு அங்கிருந்து பறந்தது. முகத்தில் எச்சை விழுந்தவுடனே வேட்டைக்காரன் கண் விழித்துப் பார்த்தான். கண் விழித்துப் பார்த்தபோது மேலே கிளையில் அன்னப்பறவை உட்கார்ந்து இருந்தது.

அந்த வேட்டைக்காரன் அன்னப்பறவை தான் தன் முகத்தில் எச்சமிட்டது என்று கோபத்தில் தன் அம்பை எடுத்து அந்த அன்னப்பறவை மீது எய்தான். அந்த அன்னப்பறவையும் துடிதுடித்து கீழே விழுந்து இறந்தது. பின்னர் வேட்டைக்காரன் அந்த அன்னபறவையை தூக்கிக்கொண்டு தன் வீடு திரும்பினான். தன்னுடைய நண்பன் புறாவினாலே அந்த அன்னப்பறவையின் உயிர் பிரிந்து விட்டது.

 நீதி: நாம் சில பிரச்சினைகளை நம் நண்பர்களாலே சந்திக்க நேரிடுகிறது.




Leave a Comment