தந்திரமான நரியும் முட்டாள் நண்டுகளும் | Cunning fox and foolish crabs | Kids Story Tamil
ஒரு நதி கரையில் நரி ஒன்று உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தது. அந்த நரி அழும் சத்தத்தை கேட்டு நண்டுகள் அனைத்தும் நரியிடம் வந்து கேட்டன, “நீ ஏன் இப்படி தனியாக அழுது கொண்டிருக்கிறாய்?”, அதற்கு அந்த நரி சொன்னது, “என் கூட்டத்திலிருந்து என் நண்பர்கள் எல்லோரும் என்னை தனியாக விரட்டி விட்டார்கள் எனக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை அதனால் தான் நான் அழுது கொண்டு இருக்கிறேன்“என்றது.
அப்போது அந்த நண்டுகள், “ஏன் உன் நண்பர்கள் உன்னை விரட்டி அடித்தார்கள்?” என்று கேட்டன. அதற்கு நரி சொன்னது, “உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினேன் அதனால்தான்” என்றது. அதற்கு நண்டுகள் கேட்டன எங்களுக்கு உதவியா..! என்ன கூறுகிறாய்?.
அதற்கு நரி சொன்னது,”ஆமாம் என் நண்பர்கள் எல்லோரும் உங்கள் அனைவரையும் பிடித்து உணவாக்க வேண்டும் என்று எண்ணினார்கள் நான் அவர்களிடம், இல்லை வேண்டாம் நாம் யாருக்கும் தீங்கு இழைக்கக்கூடாது” என்று கூறினேன். அதனால் என் நண்பர்கள் எல்லோரும் கோபமடைந்து என்னை அங்கிருந்து விரட்டி விட்டார்கள் என்றது.
இந்த நரியின் தந்திரமான பேச்சை நம்பி நண்டுகள் அனைத்தும் கவலைப்படாதே நாங்கள் உனக்கு நண்பர்களாக இருக்கிறோம் என்று கூறின. இந்த நரி கூறும் அனைத்தையும் நண்டுகள் கேட்க ஆரம்பித்தன. ஒருநாள் நரி நண்டுகளிடம் நாம் அனைவரும் சேர்ந்து எங்கேயாவது செல்லலாம் என்று கூறியது.
இந்த நண்டுகளும் நரி தன்னுடைய நண்பர் தானே என்று எண்ணிக்கொண்டு அந்த நரியுடன் சேர்ந்து வெளியே சென்றன. நரி முன்பாகவும் இந்த நண்டுகள் அனைத்தும் நரியை பின் தொடர்ந்து சென்றன. சிறிது தூரம் சென்ற பிறகு இந்த நரி திடீரென்று ஊளை இட ஆரம்பித்தது. இந்த நண்டுகளுக்கு நரி ஏன் ஊளை இடுகிறது என்று புரியவில்லை.
ஆனால் சிறிது நேரத்தில் திடீரென்று நிறைய நரிகள் ஓடி வந்தன. இந்த நண்டுகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை எல்லாம் ஒவ்வொரு திசையாக ஓட ஆரம்பித்தது. ஆனால் அங்கு வந்த கூட்டமான நரிகள் இந்த நண்டுகள் பலவற்றை பிடித்து உண்டன. எப்படியோ ஒரு சில நண்டுகள் மட்டும் அங்கிருந்து தப்பித்து தங்களுடைய இடத்திற்கு சென்றது.
அப்போதுதான் அந்த நண்டுகளுக்கு புரிந்தது இந்த நரி பொய் கூறியுள்ளது என்று. நரியின் சூழ்ச்சியில் நாம் நண்பர்களை இழந்து விட்டோம் என்று அந்த நண்டுகள் வருந்தின.
நீதி: தீயவர்களிடம் நட்பு கொள்ளக்கூடாது