பாம்பும் தவளைகளும் | தமிழ் கதைகள் | Snakes And Frogs | New Story In Tamil
வெகுகாலத்திற்கு முன்பு மலை அடிவாரத்தில் பாம்பு ஒன்று வசித்து வந்தது. வயதானதால் அதற்கு இறை தேடி செல்ல மிகவும் கஷ்டமாக இருந்தது. கஷ்டப்படாமல் எப்படி தனக்கு இறை கிடைக்கும் என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தது.
அப்போது அதற்கு ஒரு எண்ணம் தோன்றியது. தவளைகள் நிறைந்து இருந்த ஒரு குளத்திற்கு அருகே சென்று முகத்தை கவலையாக வைத்துக்கொண்டு அமர்ந்தது. அப்போது ஒரு தவளை பாம்பிடம், “ஐயா உணவு தேடி செல்லாமல் ஏன் இப்படி கவலையாக அமர்ந்திருக்கிறீர்கள்” என்று கேட்டது.
நண்பா நான் நேற்று தெரியாமல் ஒரு பிராமணப் பையனை கடித்து விட்டேன். அதில் அவன் இறந்து விட்டான். அவனுடைய தந்தையோ, “நீ வாழ்நாள் முழுவதும் உன் இரைகளுக்கு சேவை செய்து அவை தரும் உணவை உண்டு வாழவேண்டும், என்று சபித்துவிட்டார். எனவே நான் உங்கள் இடத்திற்கு வந்து உங்களுக்கு சேவை செய்து வாழலாம் என்று வந்துள்ளேன்” என்று சொன்னது.
இந்த விஷயம் உடனே தவளை ராஜா காதில் சென்றது. இந்த விஷயம் உண்மைதானா என்பதை தெரிந்துகொள்ள தவளை ராஜா பாம்பை சந்திக்க வந்தது. பாம்பு தங்களுக்கு சேவை செய்ய வந்துள்ளது என்பதை அறிந்த தவளை ராஜா அந்தப் பாம்பின் முதுகில் ஏறி சவாரி செய்ய ஆரம்பித்தது. மற்ற தவளைகளும் ஒன்றன்பின் ஒன்றாக அந்தப் பாம்பின் முதுகில் ஏறின.
சில தூரம் சென்ற பிறகு அந்தப் பாம்பு மிகவும் மெதுவாக ஊர்ந்தது அப்போது தவளை ராஜா, “ஏன் நண்பா நீ சோர்ந்து விட்டாய்” என்று கேட்டது. அதற்கு பாம்பு “எனக்கு மிகவும் பசியாக உள்ளது நான் ஒன்றுமே சாப்பிடவில்லை” என்று சொன்னது. அதற்கு தவளை ராஜா, “சரி உன்னுடைய முதுகில் இருக்கும் கடைசி தவளையை நீ சாப்பிடலாம்” என்று சொன்னது.
இப்படியே தினமும் சவாரி செய்த பின் சோற்வுற்றது போல் அந்த பாம்பு நாடகமாடும். தவளை ராஜா ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு தவளையும் அந்த பாம்புக்கு உணவாக அளித்தது.
கடைசியாக தவளை ராஜா தான் பலியாக போவதை அறியாமல் அந்தப் பாம்பின் முதுகில் ஏறி சவாரி செய்தது. சிறிது தூரம் சென்ற பிறகு அந்தப் பாம்பு தவளை ராஜாவையும் விழுங்கியது. இப்படி எல்லாத் தவளைகளும் அந்தப் பாம்பிடம் ஏமாந்து தங்களுடைய வாழ்வை இழந்து விட்டன.
நீதி : சிந்திக்காமல் செய்யும் காரியங்கள் ஆபத்தில் முடியும்.