முயல்களும் தவளைகளும் | Rabit and Frog Short Story | நீதி கதைகள்

முயல்களும் தவளைகளும் | Rabbits and Frog Short Story | நீதி கதைகள்

ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. 

அவர்களுக்கு அங்கு சுலபமாக சாப்பிட உணவு தினமும் கிடைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று கோடைகாலம் வந்தது, கோடை கால வெப்பம் அதிகமாக இருந்ததால் அங்கே பச்சை பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன. 

இந்த முயல்களுக்கு சாப்பிட உணவு எதுவும் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு கொண்டு இருந்தன. அங்கே வேட்டை நாய்கள் இந்த முயல்களை அங்கேயும் இங்கேயும் பதுங்கி வேட்டையாட காத்திருந்தன. 

அந்த வேட்டை நாய்களைக் கண்டு இந்த முயல்கள் பொந்துக்குள்ளே ஒளிந்து கொண்டு, வெளியே வரவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தன. உணவு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டன. 

“எவ்வளவு நாள் தான் இப்படியே பொந்துக்குள் ஒளிந்து இருப்பது நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, என்று எல்லாம் முயல்களும் கூடி பேசிக்கொண்டு இருந்தன. 

அப்போது ஒரு முயல் சொன்னது, “கடவுள் நம்மை பலவீனமாக படைத்து விட்டார். எல்லா விலங்குகளும் ஏதாவது பிரச்சனை வந்தால் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் அளவிற்கு பலம் உடையதாக இருக்கின்றன. 

ஆனால், நாம் என்ன ஒரு பிரச்சனை வந்தாலும் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாமல்  பலவீனமாக இருக்கிறோம். கடவுள் ஏன் நம்மை இப்படி படைத்து விட்டார்?” என்று குறை கூறிக்கொண்டே இருந்தது. 

அப்போது மற்றொரு முயல் சொன்னது, “என்னால் இதற்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பசியினாலும் இந்த வேட்டை நாய்களை பார்த்தும் பயந்து ஒதுங்கி வாழ்வதைவிட சாவதே மேல். 

நான் ஏதாவது ஒரு நதியில் சென்று விழுந்து விடுகிறேன்” என்று சொன்னது. அப்போது மற்றொரு  முயல் சொன்னது, “நாம் அனைவரும் எது செய்தாலும் ஒன்றாக செய்ய வேண்டும். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இல்லையா எல்லோரும் சேர்ந்து நதியில் விழுந்து விடுவோம்” என்று நதியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

அந்த முயல்கள் எல்லாம் ஒரு நதி கரையை சென்று அடைந்தனர். அங்கே சில தவளைகள் நதிக்கரையில் இருந்தது. இந்த தவளைகள் எல்லாம் முயல்களை பார்த்து பயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நதியில் குதித்தன. 

இதைப் பார்த்த முயல் கூட்டம் ஆச்சரியமாக நின்றது. “இந்தத் தவளைகள் நம்மை பார்த்த பயந்து நீருக்குள் குதிக்கின்றன. 

நாம் நாம்தான் இந்த உலகத்திலேயே பலவீனமானவர்கள் என்று எண்ணினோம். நாம்தான் அனைவரையும் பார்த்து அஞ்சுகிறோம் என்று பேசிக்கொண்டோம். 

ஆனால் நம்மையும் பார்த்து சிலர் அஞ்சுகின்றனர். இந்த தவளைகளுக்கு நம்மை பார்த்தால் பயமாக இருக்கிறது போல” என்று  தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர். 

அப்போது ஒரு முயல் சொன்னது, “நாம் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் நிச்சயமாக ஏதாவது ஒரு வழி இருக்கும். நாம் அந்த வழி என்ன என்று கண்டுபிடிப்போம். 

இந்த நதியில் விழுந்து நம் வாழ்வை முடித்துக் கொள்வதை விட என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்வதே மேல்” என்று கூறிக் கொண்டு உணவு தேடி வேறு இடத்திற்கு திரும்பின.

நீதி : வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் எந்த தவறான முடிவும் எடுக்க கூடாது.




Leave a Comment