அறிவு உயிரைக் காப்பாற்றும் | Knowledge saves one’s life | tamil storys

அறிவு உயிரைக் காப்பாற்றும் | Knowledge saves one’s life | tamil storys

வீமபுரி என்ற நாட்டை வீரகேசரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதியும், நேர்மையும் தவறாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் நாட்டு மக்கள் பயமும் கவலையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

அந்த அரசன் தன்னாட்டு மக்களின் செயல்களை கண்காணிக்க மாறுவேடம் அணிந்து செல்வது வழக்கம். அவ்வாறு அவன் மாறுவேடம் அணிந்து செல்லும்போது வழியில் உழவன் ஒருவன் வயலில் உழுது கொண்டிருப்பதை பார்த்தான். அவனைக் கண்ட மாறு வேடத்தில் இருந்த அரசன், “எல்லாம் வல்ல இறைவன் உனக்கு நல்ல வலிமையையும், நீண்ட வாழ்நாளையும் வழங்குவானாக” என்று வாழ்த்தினான். 

அதற்கு அந்த உழவன் மாறுவேடத்தில் இருந்த அரசனைப் பார்த்து, “தாங்கள் என்மீது காட்டும் அன்பிர்க்கு மிக்க நன்றி” என்றான். “நிலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது?” என்று மாறுவேடத்தில் இருந்த அரசன் அந்த உழவனிடம் கேட்டான். 

அதற்கு உழவன், “மாதத்திற்கு நூறு வெள்ளி காசுகள் கிடைக்கின்றன” என்று பதில் அளித்தான். “அவ்வளவு தொகையை என்ன செய்கிறாய்?” என்று அரசன் கேட்டான். 

“ஐந்தில் ஒரு பங்கை அரசனுக்கு வரியாக செலுத்துகிறேன். இன்னொரு பங்கை நான் பட்ட கடனுக்கு அடைகிறேன். மற்றொரு பங்கை கடனாக தருகிறேன். நான்காவது பங்கை வீசி ஏறிகிறேன். இறுதிப் பங்கை எனக்காக செலவு செய்கிறேன்” என்று புதிராக பேசினான்.

இதை கேட்ட மாறுவேடத்தில் இருந்த அரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் மாறுவேடத்தை   கலைத்தான். இதுவரை தன்னிடம் பேசியவர் அரசர் தான் என்பதை அறிந்த உழவன் அவரை பணிவுடன் வணங்கினான்.

“நீ சொன்ன பதிலில் வரியாக தருவதும், உனக்காக செலவு செய்வதும்தான், எனக்கு புரிந்தது. மற்றவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டான் அரசன். 

அதற்கு உழவன் அரசே, “என் வருமானத்தில் ஒரு பங்கை என் தாய் தந்தையருக்கு செலவு செய்கிறேன். என்னை வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு செலவு செய்வதை கடனுக்கு அடைகிறேன் என்றேன்.

இன்னொரு பங்கை என் மகனுக்கு செலவு செய்கிறேன். பிற்காலத்தில் என்னை காப்பாற்ற போகிறவன் அவன். அதனால், அதை கடனாக தருகிறேன் என்றேன். 

நான்காவது பங்கை என் மகளுக்கு செலவு செய்கிறேன். எப்படி இருந்தாலும் திருமணம் ஆகி இன்னொருவன் வீட்டில் வாழ வேண்டியவள். அதனால் அந்த செலவை வீணாகத் தெருவில் எறிகிறேன் என்றேன். 

அந்த  உழவனின் பதிலை கேட்டு மகிழ்ந்த அரசன். உன் அறிவு கூர்மை மிகவும் நன்றாக உள்ளது. “இந்த விளக்கத்தை நான் இல்லாமல் நீ யாரிடமும் கூறக்கூடாது. அப்படி கூறினால் உன் உடலில் உயிர் இருக்காது” என்று சொல்லிவிட்டு சென்றான். 

அரசவைக்கு வந்த அரசன் தான் கேட்ட புதிரை அனைவரிடமும் சொல்லி அதற்கு விளக்கம் கேட்டான். ஒருவராலும் அதற்கு விளக்கம் கூற முடியவில்லை. இந்த புதிருக்கு யார் விளக்கம் கூறினாலும் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும், என்று அறிவித்தான் அரசன். 

அரசனுக்கு இந்த புதிரை கூறியவர் யார் என்பதை அறிந்து கொண்டான் அமைச்சர்களுள் ஒருவன். அந்த அமைச்சர் நேராக இந்த உழவனிடம் சென்றான். 

“அரசு நாணய சாலையில் புத்தம் புதிதாக அச்சடித்த இந்த ஐநூறு பொற்காசுகளை பெற்றுக்கொண்டு அரசரிடம் சொன்ன புதிருக்கான விளக்கத்தை என்னிடம் கூறு” என்றான் அமைச்சர். 

கண்ணை பறிக்கும் ஒளியுடன் கூடிய பொற்காசுகளை கண்ட உழவன் அரசரை எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்த புதருக்கான விளக்கத்தை கூறி பொற்காசுகளை பெற்றுக் கொண்டான்.

அரண்மனை திரும்பிய அமைச்சர் நேரடியாக அரசிடம் சென்று புதிருக்கான விளக்கத்தை கூறினான். உழவன் தான் பதில் கூறி இருக்கிறான் என்பதை அரசன் அறிந்து கொண்டு, அவனை இழுத்து வருமாறு தன்னுடைய காவலர்களுக்கு ஆணையிட்டான்.

tamil storys

அரசவைக்கு இழுத்து வரப்பட்ட உழவனை பார்த்து, “உனக்கு என்ன திமிரு? நான் இல்லாமல் யாரிடமும் அந்த புதிருக்கான விளக்கத்தை சொல்லக்கூடாது. சொன்னால் உன் உயிர் போய்விடும் என்று உனக்கு நான் கட்டளையிட்டிருந்தேன். என் கட்டளையை மீறி சொல்லி இருக்கிறாய், உன் உயிரை இப்பொழுது யார் காப்பாற்றப் போகிறார் என்று பார்ப்போம்” என்று கோபத்துடன் கேட்டான் அரசன். 

அதற்கு அந்த உழவன் அரசனைப் பார்த்து, “அரசே, நான் சொல்வதைக் கேளுங்கள். என் மீது எந்த தவறும் இல்லை என்று பணிவாக கூறினான்,” உழவன். 

அதற்கு அரசன், “நான் இல்லாமல் யாரிடமும் இந்த புதிருக்கான பதில் சொல்லக்கூடாது என்றேன் அல்லவா?” என்று கத்தினான். 

உடனே அமைச்சர் எடுத்து கொடுத்த பொற்காசுகளை அரசனிடம் காட்டிய உழவன், “இந்த பொற்காசுகளில் ஒரு பக்கத்தில் தங்கள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து தான் அமைச்சரிடம் பதில் கூறினேன். 

எனவே தங்களை வைத்துக் கொண்டுதான் நான் விளக்கம் கூறினேன். தங்கள் கட்டளையை நான் எந்த வகையிலும் மீறவில்லை” என்று கூறினான். 

உழவனின் அறிவு கூர்மையை  அறிந்த அரசன் அவனுக்கு பரிசுகள் பல தந்து அனுப்பி வைத்தான். உழவனின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றியது அவருடைய அறிவு கூர்மையே ஆகும். 

நீதி : ஒருவரிடம் இருக்கும் அறிவு மிக சிறந்த செல்வமாகும். அது தக்க சமயத்தில் அவனுக்கு உதவும். எனவே அனைவரும் அறிவை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.




Leave a Comment