ஏமாற்றுபவன் ஏமாறுவான் | Deceiver will be deceived | one page tamil story
ஒரு ஊரில் செல்வர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்பொழுது சந்தைக்குப் போனாலும் ஏதாவது உணவுப் பொருள்களை வாங்கி வருவார். வீட்டுக்கு வந்து அமைதியாக உட்கார்ந்து அதனை ருசித்து சாப்பிடுவார்.
அவரிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான். அவன் செல்வர் எதைக் கொண்டு வந்தாலும் அதில் சிறிதளவாவது தன்னுடைய சாமர்த்தியத்தால் கேட்டு வாங்கி சாப்பிடுவான்.
வழக்கம் போல் ஒருநாள் சந்தைக்கு சென்று செல்வர் தான் உண்பதற்காக ஒரு டம்ளர் நிறைய கட்டித் தயிர் வாங்கி வந்தார். இம்முறை இந்த கட்டி தயிரில் சிறிது கூட வேலைக்காரனுக்கு கொடுக்கக் கூடாது முழுவதையுமே தானே சாப்பிட வேண்டும். அதற்கு ஒரே வழி அவனை ஏமாற்றுவதுதான் என்று எண்ணி அவர் வீட்டுக்குள் நுழைந்தார்.
அவரை வேலைக்காரன் பார்த்து விட்டான். அவன் செல்வரை நோக்கி, “ஐயா, டம்பளரில் என்ன இருக்கிறது?” என்று கேட்டான். உடனே செல்வர், “சுண்ணாம்பு வாங்கி வந்திருக்கிறேன். இதை சாப்பிட்டால் வயிறு எரிந்து, வயிற்றில் வலி வந்து உடனே உயிர் போய்விடும்.
எக்காரணம் கொண்டு இதைத் தொடாதே. போய் இன்று முழுவதும் தோட்டத்தை உழுதுவிட்டு வா” என்றார். வேலைக்காரனுக்கு செல்வர் தன்னை ஏமாற்றுகிறார் என்பது தெளிவாக புரிந்து விட்டது.
அவருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டான். அது மட்டுமல்ல அந்த டம்பளரில் இருப்பது கட்டித் தயிர் தான் என்பதை அதன் வாசனையை வைத்து தெரிந்து கொண்டான்.
அவன் உடனே அந்த செல்வரை பார்த்து, “ஐயா, வெற்றிலை பாக்கு போட அந்த டம்ளரில் இருக்கும் சுண்ணாம்பிலிருந்து சிறிது எடுத்துக் கொடுங்க என்றான்.” உடனே செல்வர் வேலைக்காரனை பார்த்து, “நான் உன்னிடம் சொன்ன வேலையை முடித்துவிட்டு வா, அதிலிருந்து கொஞ்சம் தருகிறேன்” என்றார்.
மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்ற வேலைக்காரன் சிறிது நேரத்திற்குள் வீட்டிற்கு வந்தான். உடனே செல்வர் அவனிடம், “நான் சொன்ன வேலைகளை முடித்து விட்டாயா?” என்று கேட்டான்.
உடனே வேலைக்காரன் செல்வரை பார்த்து, “ஐயா, எந்த வேலையும் என்னால் செய்ய முடியவில்லை, ஒரு மாட்டை கட்டினால் மற்றொரு மாடு அறுத்துக் கொண்டு ஓடுகிறது. இதில் நான் எப்படி தோட்டத்தை உழுவது”என்றான்.
உடனே கோபப்பட்ட அந்த செல்வர், “வேலையை செய்ய சொன்னால் விளையாட்டு காட்டுகிறாயா” என்று கூறி அவன் முதுகில் ஓங்கி அறைந்தார். அவ்வளவுதான் அவன் செல்வரை பார்த்து, “ஐயா, இது நாள் வரை யாருமே என்னை அடித்ததில்லை. நீங்கள் என்னை அடித்து விட்டீர்கள் இனி நான் உயிர் வாழ்ந்து எந்த பயனும் இல்லை.
அந்த சுண்ணாம்பை குடித்து என் உயிரை விட்டுவிடுகிறேன்” என கூறிவிட்டு சமையல் அறைக்குள் ஓடினான். “டேய்.. குடிக்காதே என்று அந்த செல்வர் அவன் பின்னாலே கத்திக் கொண்டு வந்தார். அதற்குள் அந்த டம்பளரில் இருந்த கட்டித் தயிர் முழுவதையும் அந்த வேலைக்காரன் குடித்து விட்டான்.
வேலைக்காரனை ஏமாற்ற நினைத்து தானே முடிவில் ஏமாந்து விட்டேனே” என்று செல்வர் மனதில் கூறிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.
நீதி: பிறரை ஏமாற்ற நினைப்பவன் முடிவில் தானே ஏமாந்து போவான். எனவே யாரையும் ஏமாற்ற கூடாது.