சிறுவன் மற்றும் புலி | Tiger and young boy | small tamil stories with moral
ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் நிறைய ஆடுகள் இருந்தன அந்த ஆடுகளை அவர் மேய்ச்சலுக்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்வார், அந்திப்பொழுது ஆன பின்பு அந்த ஆடுகளை அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்ப கொண்டு வருவார்.
ஒரு நாள் அந்த விவசாயியின் மகன்,”அப்பா நானும் உங்களுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வருகிறேன்” என்றான். ஆனால் தந்தையோ, “இல்லை,வேண்டாம் அங்கு உனக்கு சலிப்பாக இருக்கும் எனவே நீ வீட்டில் இருந்துக்கொள் என்றார்”. ஆனால் அந்த மகனோ இல்லை நான் நிச்சயமாக வருவேன் என்று அடம் பிடித்தான்.
எனவே அவரும் மகனை கூட்டிக்கொண்டு ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு சென்றார். அந்த சிறுவனுக்கு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடம் மிகவும் பிடித்தது. அங்கே அவன் விளையாடிக் கொண்டு இருந்தான். சிறிது நேரம் ஆன பிறகு அவனுக்கு சலிப்பு உண்டாக ஆரம்பித்தது.
என்ன செய்வதென்று தெரியவில்லை, திடீரென்று அவன் “புலி காப்பாற்றுங்கள்! புலி காப்பாற்றுங்கள்!” என்று கத்த ஆரம்பித்தான். அவனுடைய குரலை கேட்டு அந்த விவசாயி மற்றும் வேறு சிலர் ஓடி வந்தனர், ஆனால் அங்கே வந்து பார்த்தபோது புலி எதுவும் இல்லை. அந்த சிறுவன் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான்.
மீண்டும் அந்த விவசாயிகள் திரும்ப தங்கள் வேலைக்கு சென்றனர். ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த சிறுவன், புலி காப்பாற்றுங்கள்! புலி காப்பாற்றுங்கள்! என்று கத்த ஆரம்பித்தான். திரும்பவும் அந்த விவசாயிகள் ஓடி வந்தார்கள். ஆனால் அங்கே புலி இல்லை, அப்போது அந்த சிறுவனின் தந்தை அவனிடம் சொன்னார், “இனி நீ இப்படி பொய் கூறினால் நிச்சயமாக உனக்கு தண்டனை உண்டு எனவே சத்தம் போடாமல் அமைதியாக விளையாடு” என்று கூறிக்கொண்டு அந்த விவசாயி மீண்டும் தன் வேலைக்கு சென்றார்.
அந்த சிறுவனும் தன் தந்தை கூறியதை எண்ணி பயந்து இனிமேல் சத்தம் போட மாட்டேன் என்று அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று உண்மையாகவே ஒரு புலி அங்கே வந்தது. புலியை பார்த்த அந்த சிறுவன் பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தான். அவன் கத்தினான்,”அப்பா புலி, என்னை காப்பாற்றுங்கள்” என்று கத்தினான்.
ஆனால் மற்ற விவசாயிகள் இந்த சிறுவன் மீண்டும் நம்மிடம் விளையாடிக் கொண்டிருக்கிறான், நாம் நமது வேலையை பார்ப்போம் என்று யாரும் அவன் கத்தும் குரலுக்கு செவி கொடுக்காமல் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டே இருந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் இந்த சிறுவன் அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறினான். அந்த புலி அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுகுட்டியை பிடித்து சாப்பிட்டது. அதை பார்த்து அவன் பயத்தில் அப்படியே அமர்ந்திருந்தான்.
அந்திப்பொழுது ஆன பிறகு அந்த விவசாயி தன்னுடைய ஆடுகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லலாம் என்று வந்தபோது, இந்த சிறுவனை காணவில்லை அப்போது அவன் மரத்தின் மேலிருந்து, “அப்பா நான் இங்கே இருக்கிறேன்” என்று கூறினான். அந்த விவசாயி அவனிடம், “மரத்தின் மேல் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், நான் இவ்வளவு சத்தமாக கத்தியும் நீங்கள் ஏன் வரவில்லை? உண்மையாகவே ஒரு புலி வந்தது. அங்கு பாருங்கள் ஒரு ஆட்டுக்குட்டியை கடித்து அது சாப்பிட்டு விட்டு மீதியை போட்டுக்கொண்டு சென்றது என்றான்.
அதைப் பார்த்தபோதுதான் அவருக்கு புரிந்தது நிஜமாகவே அங்கே ஒரு புலி வந்ததென்று. அப்போது அந்த விவசாயி சொன்னார், “நீ இரண்டு முறை புலி வந்ததாக பொய் சொல்லி தானே கத்தினாய் அதனால் தான் மூன்றாவது முறை நீ கத்தியும் நாங்கள் யாரும் வரவில்லை”. இனிமேல் இப்படி பொய் சொல்லாதே, மீறினால் நிச்சயமாக நீ உண்மையை சொல்லும்போது உன் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள் என்றார். அவனும் தன் தவறை புரிந்து கொண்டான்.