முட்டாள் குரங்கும் பறவையும் | Foolish Monkey and a Bird | Bedtime Stories for Kids Tamil
முன்பொரு காலத்தில் காட்டில் குரங்கு கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குரங்குகளுக்கு, பாலைவனத்திற்கு செல்ல வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால், இந்த குரங்குகளுக்கு பாலைவனம் எங்கு இருக்கும், எப்படி இருக்கும் என்று தெரியாது. ஒரு நாள் இந்த குரங்குகள் அனைத்தும் கூட்டமாக பாலைவனம் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு பயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.
நாள் முழுவதும் நடந்து மதியம் வேளையில் அந்த குரங்குகள் ஒரு வறண்ட நதியின் அருகே வந்து சேர்ந்தார்கள். அந்த நதி மூன்று மைல்கள் தூரம் வரை வறண்டு இருந்தது. அந்த வறண்ட நதியை பார்த்த குரங்கு கூட்டம், இதுதான் பாலைவனம் என்று எண்ணியது. இந்தப் பாலைவனம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கு அந்த குரங்குகள் மதியம் வேளையில் அங்கும் இங்கும் நடையாய் நடந்தன.
கோடை காலமாக இருந்ததால் அந்த குரங்குகளுக்கு மிகவும் களைப்பாக ஆரம்பித்தது. சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு பெரிய மரம் இருப்பதைக் கண்ட குரங்குகள் அந்த மரத்தின் மீது ஏறி எங்கேயாவது குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்று சுற்றி பார்த்தன. சிறிது தூரத்தில் அவர்களுக்கு தண்ணீர் தென்பட்டது.
குரங்குகள் சந்தோஷமாக இறங்கி தண்ணீர் குடிக்க சென்றபோது, அருகில் சென்றவுடன் அந்த தண்ணீர் மறைந்து விட்டது. ஏமாற்றமடைந்த குரங்குகள் மீண்டும் அந்த மரத்திற்கு திரும்பி வந்தன. அப்போது அந்த மரத்தில் குருவி ஒன்று இந்த குரங்குகள் தண்ணீருக்கு படும் பாடை கண்டு, தன் கூட்டில் இருந்து வெளியே வந்து குரங்குகளிடம் சொன்னது “நண்பர்களே உங்களுக்கு தண்ணீர் வேண்டுமா? என்னை பின்தொடர்ந்து வாருங்கள் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்” என்றது.
அந்த குரங்குகளும் இந்த பறவையை பின்தொடர்ந்து சென்றன. சிறிது தூரம் சென்ற பிறகு அந்த பறவை ஒரு குளத்தை, குரங்குகளுக்கு காட்டியது. அந்த குரங்குகளும், குளத்தில் இறங்கி நிறைய தண்ணீர் குடித்தன.
அந்த பறவை குரங்குகளிடம், “நண்பர்களே உங்களுடைய தாகம் தணிந்ததா?” என்று கேட்டது. அதற்கு ஒரு குரங்கு சொன்னது, “இவ்வளவு நேரம் நாங்கள் தண்ணீருக்காக படும் பாடைக்கண்டும், நீ காணாமல் இருந்து கொண்டு இப்போதுதான் எங்களுக்கு உதவி செய்கிறாயா?” என்று சொல்லி அந்த பறவையைப் பிடித்து அதன் கழுத்தை நசுக்கி கொன்றது. குரங்குகள் படும் பாடைக்கண்டு அவர்களுக்கு உதவி செய்ய சென்ற அந்த பறவை அப்படியே துடிதுடிக்க இறந்துவிட்டது.
நீதி : கெட்டவர்களுக்கு உதவி செய்வதால் எந்த பயனும் இல்லை.