கழுதையும் நாயும் | donkey and dog | Tamil stories for kids reading
ஒரு ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு கழுதையும், ஒரு நாயும் இருந்தது. அந்த கழுதை விவசாயின் மூட்டைகளை தூக்கிக்கொண்டு அவருக்கு உதவியாய் இருந்தது. அந்த நாயும் வீட்டிற்கு காவல் காத்துக்கொண்டு இருந்தது.
ஒரு நாள் இரவு அந்த விவசாயி தூங்கிய பின்பு திருடன் ஒருவன் மெதுவாக அந்த விவசாயின் வீட்டுக்குள்ளே நுழைந்தான். அதை பார்த்து இந்த நாய் எதுவும் செய்யாமல் அமைதியாகவே இருந்தது. கழுதை நாயிடம் கேட்டது,” நண்பா திருடன் உள்ளே செல்கிறான் நீ ஏன் அமைதியாக இருக்கிறாய் சத்தம் போடு” என்றது. ஆனால் அந்த நாய் குறைக்காமல் அமைதியாகவே இருந்தது.
கழுதை கேட்டது,” நீ ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய் ஏதாவது கூறு” என்றது. அதற்கு அந்த நாய் சொன்னது,” இந்த விவசாயி இப்போதெல்லாம் என்னை சரியாக கவனிப்பதில்லை, எனக்கு சரியாக உணவு கொடுப்பதும் கூட இல்லை,பின்பு ஏன் நான் மட்டும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் நான் குறைக்க போவதில்லை” என்று கோபத்தில் பதில் சொன்னது.
இதை கேட்ட கழுதை நாயிடம் சொன்னது, “நண்பனே நீ கூறுவது சரிதான் ஆனால் நாம் நம்முடைய முதலாளிக்கு கண்டிப்பாக விசுவாசமாக தான் இருக்க வேண்டும்” என்றது. ஆனால் அந்த நாய் அமைதியாக இருந்தது. அந்த கழுதையின் பேச்சுக்கும் அது செவி கொடுக்கவில்லை.
இந்த கழுதை முதலாளிக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணி தனது குரலில் பயங்கரமாக கத்த ஆரம்பித்தது. கழுதையின் குரலை கேட்ட திருடன் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டான். முதலாளியும் கழுதையின் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தார், ஆனால் அங்கே யாரும் இல்லை.
இந்த விவசாயி தனது கையில் ஒரு பெரிய கம்பை எடுத்துக் கொண்டு அந்த கழுதையிடம் “எதற்காக என் தூக்கத்தை கெடுத்தாய்?” என்று கேட்டு அந்த கழுதையை கடினமாக அடித்தார். இந்த கழுதையும் வலியால் துடித்துக் கொண்டு அப்படியே இருந்தது.
நீதி: நமது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பதே நல்லது.