இரண்டு கிளிகள் | தமிழ் கதைகள் | Two Parrots | Tamil Short Stories

இரண்டு கிளிகள் | தமிழ் கதைகள் | Two Parrots | Tamil Short Stories

முன்பு ஒரு காலத்தில் ஒரு மரத்தில் கிளி ஒன்று வசித்து வந்தது. அதற்கு ஒரே போல் இருக்கும் அழகான இரண்டு குஞ்சுகள் இருந்தது. ஒருநாள் தாய் கிளி தன் குஞ்சுகளுக்கு உணவு தேடி சென்ற போது, ஒரு வேடன் அங்கே வந்து அந்த மரத்தில் ஏறி அந்த இரண்டு குஞ்களையும் எடுத்து தன் பைக்குள் போட்டான்.

ஆனால் ஒரு குஞ்சு சாமர்த்தியமாக தப்பித்து விட்டது. அந்த வழியாக வந்த முனிவர் ஒருவர் வேடனிடம் இருந்து தப்பிய குஞ்சை பார்த்து அதை தன் ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்றார். இவ்வாறு அந்த இரண்டு கிளி குஞ்சுகளுள் ஒன்று  வேடனுடமும் மற்றொன்று முனிவரிடமும் வளர்ந்தது.

ஒரு நாள் அந்த நாட்டினுடைய மன்னர் தன்னுடைய குதிரையில் காட்டுக்கு வந்தார். அங்கே வேடனின் வீடு  இருந்தது. மன்னர் அவன் வீட்டின் அருகே குதிரையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று, “எஜமானே எவனோ ஒருவன் குதிரையில் வந்து கொண்டிருக்கிறான் சீக்கிரம் வில்லை எடுத்து எய்து அவனை கொல்லுங்கள்” என்று ஒரு கூண்டிற்குள் இருந்த கிளி சத்தம் போட்டது. அதைக் கண்ட மன்னர்  திரும்பிக்கூடப் பார்க்காமல் தன்னுடைய குதிரையை ஓட்டி சென்றார் வழியில் ஒரு ஆசிரமம் இருப்பதை பார்த்தார்.

அந்த ஆசிரமத்தில் இருந்து தண்ணீர் குடிக்க அவருடைய குதிரையை நிறுத்தினார். ஆசிரமத்திற்கு அருகில் சென்ற போது அங்கேயும் கூண்டுக்குள் ஒரு கிளி இருந்தது. அதை பார்த்ததும் “இங்கேயும் ஒரு முரட்டுத்தனமான கிளி உள்ளது” என்று அவர் எண்ணினார்.

ஆனால் அவர் ஆச்சரியப்படும் விதத்தில் அந்த கிளி பாட தொடங்கியது, “வருக வருக மன்னரே மிக்க மகிழ்ச்சியுடன் உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கின்றோம்” என்று பாடியது.

 உருவத்தில் அந்த வேடனின் வீட்டில் இருந்த கிளி போல இருந்தாலும். குணத்தில் சாந்தமும், நட்புடனும் இருக்கிறது என்று மன்னர் நினைத்தார்.  “உன்னைப்போல ஒரு நல்ல குணமுடைய கிளியை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். “கொஞ்சம் முன்பு தான் உன்னை போல தோற்றமுள்ள ஒரு முரட்டுத்தனமான கிளியை பார்த்தேன்”. “அந்தக் கிளி வேடனிடம் உள்ளதா..?” என்று ஆசிரமத்தில் இருந்த கிளி கேட்டது. “ஆமாம்! ஆனால் அது உனக்கு எப்படி தெரியும்” என்று அரசர் கேட்டார்.

அந்தக் கிளி சொன்னது, “மன்னரே அவன் என்னுடைய சகோதரன் தான். நாங்கள் இருவரும் ஒரு கூட்டில் தான் வசித்து வந்தோம். ஒருநாள் அந்த வேடன் வந்து என் சகோதரனை பிடித்து சென்றான். நான் எப்படியோ தப்பித்து விட்டேன். அந்த வேடனுடைய கெட்ட குணம் தான் என்னுடைய சகோதரனுக்கு வந்துள்ளது. ஆனால் என்னுடைய எஜமானரோ ரொம்பவே நல்லவர் அவருடைய நற்குணம் தான் எனக்கு கிடைத்துள்ளது” என்றது அந்த கிளி. அதைக் கேட்டு மன்னர் மிகவும் ஆச்சரியமுற்றார்.

நீதி: வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப குணங்கள் மாறுபடும்.



Leave a Comment