காகமும் அன்னப்பறவையும் | தமிழ் கதைகள் | The Crow And The Crane | Stories Tamil
ஒரு குளத்தின் அருகில் காகம் வசித்து வந்தது. அதற்கும் பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் அன்னப்பறவையும் வசித்து வந்தது. அந்த அன்னப்பறவை மணிக்கணக்கில் அந்தக் குளத்தில் நீந்திக் கொண்டே இருக்கும்.
காகத்திற்கு எப்போதுமே தன் நிறத்தை பார்த்து வருத்தமாக இருந்தது. அன்னப்பறவையின் நிறத்தை பார்க்கும் போது காக்கைக்கு பொறாமையாக இருந்தது. ஒருநாள் அந்த அன்னப்பறவையின் நிறத்தை பார்த்துக்கொண்டு காகம், “எனக்கும் இதுபோல் நிறம் வேண்டும்” என்று ஆசைப்பட்டது.
“இந்த அன்னப் பறவைக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகும் வெள்ளை நிறமும் உள்ளது” என்று காகம் யோசித்தது. “ஒருவேளை அந்தப் பறவை எப்போதும் தண்ணீரில் இருப்பதாலும், பல முறை குளிப்பதாலும் தான் வெள்ளையாக இருக்கிறதோ“என்று நினைத்தது.
காகமும், “இனிமேல் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை குளிக்க வேண்டும்” என்று தீர்மானித்தது. அப்படி செய்தால் தானும் அழகாகவும், வெள்ளையாகவும் மாறிவிடலாம் என்று ஆசைப்பட்டது. அந்த ஆசையில் அழகாக மாறும் தன்னுடைய பயிற்சியை காகம் ஆரம்பித்தது.
காகத்திற்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள அன்னப்பறவையும் மற்ற பறவைகளும் காத்திருந்தன. பலமுறை குளித்த பிறகும் காகத்தின் தோற்றத்தில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இருந்தும் காகம் தன் முயற்சியை கைவிட தயாராக இல்லை. ஒரு நாளில் காகம் பலமுறை குளித்தது.
கடைசியில் ஒரு நாள் காகம் காய்ச்சலில் விழுந்தது. அதிலிருந்து நலம் பெற்று வர மிகவும் கஷ்டப்பட்டது. அப்போதுதான் காகம் தன்னுடைய தவறை புரிந்துகொண்டது. தன் முயற்சியை கைவிட்டு, “நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே இருக்க பழகிக் கொள்ள வேண்டும்” என்று நினைத்தது. மனதில் அந்த மாற்றம் வந்தபின் காகம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் பறவையாக மாறியது.
நீதி : நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பதில் சந்தோஷப்பட வேண்டும்.
Beautiful Stories. Keep writing. Tq u