முட்டாள் குருவியும் குரங்கும் | தமிழ் கதைகள் | Stupid Bird And Monkey | Tamil Neethi Kathaigal
ஒரு பெரிய மரத்தில் ஒரு ஜோடி சிட்டுக்குருவிகள் வசித்து வந்தன. அவை இரண்டும் முன்யோசனையும் நன்கு வேலை செய்யும் குணமும் கொண்டவை. குளிர்காலம் வரும் முன் அவை இரண்டும் ஒரு அழகிய, உறுதியான கூட்டை கட்டின. அதனால் அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
மிகவும் மழை பெய்து கொண்டு இருந்த ஒருநாள் இந்த குருவிகள் வசித்துக் கொண்டிருந்த மரத்தில் ஒரு குரங்கு வந்து ஒதுங்கியது. மழையில் மிகவும் நனைந்து அந்த குரங்கு நடுங்கிக்கொண்டிருந்தது. அதை பார்த்த பெண் குருவி, “ஐயா ஏன் நீங்கள் இப்படி மழையில் நனைந்து கொண்டு இருக்கிறீர்கள், ஏன் உங்கள் வீட்டுக்கு போகவில்லை” என்று கேட்டது.
அதற்கு குரங்கு சொன்னது “எனக்கு தனியாக வீடு ஒன்றும் இல்லை எல்லா மரங்களிலும் நான் மாறி மாறி தங்குவேன்” என்றது. இதைக்கேட்ட பெண்குருவி “எதிர்காலத்திற்கு சேகரிக்காத புத்தியில்லாத குரங்கு ஒரு சோம்பேறி” என்று விமர்சித்தது. குரங்கு மிகவும் கோபப்பட்டு அந்த குருவிடம் அமைதியாக இருக்கச் சொன்னது.
ஆனால் அந்தக் குருவி சொன்னது, “என்னுடைய சிறிய அலகை வைத்து நான் இவ்வளவு பெரிய கூட்டை கட்டி உள்ளேன், ஆனால் உன்னிடம் இரண்டு கைகள் இருந்தும் உன்னால் ஒரு வீடு கட்ட இயலவில்லை” என்று விமர்சித்துக் கொண்டே இருந்தது. குரங்கிற்கு மிகவும் கோபம் வந்தது.
அந்தக் குரங்கு கோபத்தில் அந்தக் குருவியின் கூட்டை தன் கைகளால் கிழித்து போட்டது. அந்தக் குருவிக்கு மிகவும் கோபம் வந்தது ஆனால் அதால் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தது. அந்த இரண்டு குருவிகளும் மழையில் நனைய ஆரம்பித்தன. தேவையில்லாத இடத்தில் தான் செய்த உபதேசம் தான் இதற்கு காரணம் என்று அந்தப் பெண் குருவி மிகவும் வருந்தியது.
நீதி : கேட்பவர்களுக்கு மட்டும் அறிவுரை கொடுப்பது நல்லது.