காகங்களும் பாம்பும் | கதை தமிழில் | Crows And Snakes | Siruvar Kathaigal
முன்னொரு காலத்தில் ஓர் ஆல மரத்தில் இரண்டு காகங்கள் வசித்து வந்தன. ஒரு பெரிய பாம்பு தங்க இடம் தேடி வந்து, அந்த மரத்தின் கீழ் உள்ள பொந்தில் நுழைந்தது. தங்கள் இருப்பிடத்தின் அருகில் ஒரு பாம்பு வந்து வசிப்பது அந்த காகங்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது.
பாம்பு காக்கை குஞ்சுகளைத் தின்றுவிடும் ஆகையால் கவனமாக இருங்கள், என்று மற்ற நண்பர்கள் காகங்களை எச்சரித்தனர். “இந்தப் பாம்பு குஞ்சுகளைத் தின்றுவிடும் என்றால் நான் எப்படி தான் இங்கே முட்டை இடுவது” என்று பெண்காகம் அழுதது, “நாம் பாதுகாப்பான இடத்திற்கு செல்லலாம்” என்றது. அதற்கு ஆண் காக்கை, “இல்லை, நாம் நம் வீட்டை விட்டு எங்கேயும் செல்ல வேண்டாம் அதற்கு பதில் இந்த பாம்பை விரட்டும் வழியை பார்க்கலாம்” என்றது.
சில நாட்களுக்குப் பின் பெண் காக்கை முட்டை இட்டது, அதிலிருந்து மூன்று குஞ்சுகள் வெளியே வந்தது. காக்கை குஞ்சுகளின் கீச் கீச் என்ற சத்தம் கேட்டு, பாம்பு மரப் பொந்தில் இருந்து வெளியே வந்து மிகவும் மகிழ்ந்தது.
ஒரு நாள் காக்கைகள் இல்லாத நேரம் பார்த்து, பேராசை பிடித்த பாம்பு மரத்தின்மேல் ஏறி மூன்று குஞ்சுகளையும் தின்றது. காக்கைகள் திரும்பிவந்து பார்த்தபோது காலியாக இருந்த கூட்டை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
தாய் காக்கை வேதனையால் அழுதது. அப்போது ஆண் காக்கை, “நீ வருந்தாதே அவனுக்கு நான் ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்கிறேன்” என்றது. ஆண் காக்கை ஒரு குள்ள நரியின் யோசனையைக் கேட்க சென்றது. ஆண் காக்கையின் கதையை கேட்ட நரி ஒரு உபாயம் சொல்லிக் கொடுத்தது.
“நதிக்கரைக்கு சென்று, இந்த நாட்டின் ராணி குளிக்க வரும் போது அவருடைய வைர மாலையை எடுத்து வந்து பாம்பின் பொந்துக்குள் போட்டு விடு” என்று நரி சொன்னது. குள்ளநரி சொன்னபடியே ஆண் காக்கை நதிக்கரைக்கு சென்று வைர மாலையை எடுத்துக்கொண்டு பறந்தது. ராணியின் வைர மாலையை காக்கை எடுத்துக்கொண்டு பறப்பதை கண்ட சேவகர்கள் பின்னாடியே ஓடி சென்றனர்.
அந்த ஆண் காகம் வைர மாலையை பாம்பின் பொந்துக்குள் போட்டது. அதை பார்த்த சேவகர்கள் ஒரு குச்சியை பொந்துக்குள் விட்டு அந்த மாலையை எடுக்க முயற்சி செய்தனர்.
குழப்பமடைந்த பாம்பு சீறி கொண்டே பொந்துக்குள் இருந்து வெளியே வந்தது. கையில் ஆயுதங்களுடன் இருந்த வீரர்களை பார்த்த பாம்பு பயத்தில், “இனி இந்த பக்கம் வரவே கூடாது” என்று அந்த இடத்தை விட்டு ஒடி சென்றது.
தங்கள் எதிரி விரட்டி அடிக்கப்பட்டதை கண்ட காக்கைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீதி : கூர்மையான புத்தியும், தந்திரமான திட்டம் இடுதலும் ஆபத்து காலத்தில் உதவி செய்யும்.