வாணியனும் தர்க்க சாஸ்திரியும்! | Tamil story | Merchant and logician!

வாணியனும் தர்க்க சாஸ்திரியும்! | Tamil story | Merchant and logician!

ஒரு வாணியன் தன் செக்கில் எள்ளிட்டு செக்காட்டிக் கொண்டிருக்கும் போது தர்க்க சாஸ்திரத்தில் நிபுணனான ஒரு பண்டிதன் எண்ணை வாங்குவதற்காக வாணியனின் வீட்டுக்கு வந்தார்.

வாணியன் தன் வீட்டிற்குள் போய் தர்க்க சாஸ்திரிக்கு, வேண்டிய எண்ணையை அளந்து பாத்திரத்தில் ஊற்ற ஆரம்பித்தான். அப்பொழுது தர்க்க சாஸ்திரி சும்மாயிருக்க முடியாமல் வாணியனைப் பார்த்து, “தம்பி! இந்தச் செக்கில் கட்டியிருக்கும் எருதுகளுக்கு கழுத்தில் ஏன் ஒரு மணியைக் கட்டி வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த வாணியன், “ஐயா! எருதுக்கு கழுத்தில் மணியைக் கட்டியிருப்பதால் எனக்கும் பலவித சௌகரியங்கள் இருக்கின்றன. அதனால் நான் எப்பொழுதும் செக்கின் அருகிலேயே இருக்க வேண்டிய அவசியமில்லை. 

வீட்டுக்குள் அடிக்கடிச் சென்று என்னுடைய மற்ற வேலைகளையும் கவனித்துக் கொள்வேன். நான் வீட்டிற்குள் இருக்கும் போது எருதின் கழுத்திலுள்ள மணி சப்தம் கேட்டுக் கொண்டேயிருந்தால் எருது செக்கை இழுத்தபடி சுற்றிக் கொண்டேயிருக்கிறது என்பது அடையாளம். 

மணிசப்தம் ஓய்ந்து விட்டால் எருதும் நடக்காமல் ஓய்ந்து நின்று விட்டது என்பது அடையாளம். அப்போது நான் வீட்டிற்குள்ளிருந்தபடியே அதட்டிக் குரல் கொடுப்பேன். மீண்டும் மணி சப்தம் கேட்கும்.

அதனால் செக்கு சுற்றுகிறதென்பதை உணர்ந்து கொண்டு ஏனைய வேலைகளைக் கவனிப்பேன்!” என்று கூறினான். அப்போது தர்க்கசாஸ்திரி தன் புத்திசாலித்தனத்தை அடக்கி கொள்ள முடியாமல், “தம்பி! எருது நடக்காமல் நின்ற படியே தலையை ஆட்டிக் கொண்டிருந்தால் அப்போதும் ஓசை கேட்கத் தானே செய்யும்? அப்போது எருது நடப்பதையும் நிற்பதையும் நீ எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்!” என்று குறும்புத் தனமாகக் கேட்டார். 

அதற்கு “எங்கள் எருது அவ்வளவு தர்க்கம் படிக்கவில்லை, ஐயா!” என்று பதிலளித்தான் வாணியன். 

தர்க்கசாஸ்திரி தலையை தொங்க விட்டுக் கொண்டே வெட்கத்துடன் தன் எண்ணைப் பாத்திரத்தை வாங்கிக் கொண்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் தன் வீடு போய்ச் சேர்ந்தார்.



Leave a Comment