39. டில்லியில் புகழ்! | தென்னாலிராமன் கதைகள்| Fame in Delhi! | Tenali Raman kathaigal
தென்னாட்டின் தெனாலிராமன் தான் தலைசிறந்த தூஷகனென்று கேள்விப்பட்ட டில்லிச் சக்கரவர்த்தியான பாபர். அவனுடைய திறமையைச் சோதிப்பதற்கு அவனை ஒரு மாதகாலம் டில்லிக்கு அனுப்ப வேண்டுமென்று கிருஷ்ணதேவராயருக்கு விகிதம் அனுப்பினார்.
இராயர் அகமகிழ்ந்து, “தெனாலி ராமா! தென்னகத்தின் பெருமையும் திறமையும் ஓங்கும்படியாக நீ டில்லி மன்னரால் பாராட்டப்பெற்று அவரிடமிருந்து ஒரு சிறு பொன் முடிப்பாவது பரிசு பெற்று வந்தால் உனக்கு ஆயிரம் பொன் பரிசளிப்பேன்! இல்லையெனில் உன் தலையை மொட்டையடித்து என் நாட்டிலிருந்து விரட்டிவிடுவேன்!” என்று கூறியனுப்பினார்.
ராமன் டில்லிக்கு வரப்போவதை அறிந்த சக்கரவர்த்தி பாபர் தம்முடைய அரசவையிலுள்ள அனைவரிடமும், “நம்மிடம் வரப்போகும் தெனாலி ராமனின் விகடத்திறமையை நான் கடுமையாகச் சோதிக்க விரும்புகிறேன்! அதனால் அவன் அகடவிகடம் செய்தாலும் எவரும் சிரிக்கவோ அவனுடைய திறமையைப் பாராட்டவோ கூடாது! தவறுதலாக நகைப்பவர்கள் தங்களுடைய தலையையே இழக்க நேரிடும்.
அந்தத் தென்னகத்து விதூஷகனுக்கு இந்த மாபெரும் சபையில் நாம் சாமானியமாகப் பரிசளித்தலாகாது!” என்று எச்சரித்தார்.
அதனால் தெனாலிராமன் அவருடைய தர்பாருக்கு வந்து தன் விகடத்திறமை முழுவதையும் காட்டியும் கூட ஒருவரும் பாராட்டவில்லை. அவனுக்குப் பாபரிடமிருந்து ஒரு சிறு பொன் முடிப்பும் பரிசு கிடைக்கவில்லை.
அதனால் தந்திரமாகத்தான் பாராட்டும் பரிசும் பெறவேண்டுமென்று ஓர் உபாயம் எண்ணிக் கொண்டு சென்றான். ஒரு நாள் சக்கரவர்த்தி பாபர் தம் மெய்க்காப்பாளருடன் உலாவச் செல்லும் வழியில் தொண்டு கிழவரான ஒரு பக்கிரி ஒரு குழி தோண்டி புளியமரக் கன்று ஒன்றை நட்டுப் பயிராக்குவதில் முனைந்திருந்தார்.
அதைக் கண்ட பாபர், “கிழவரே! இந்தப் புளியங்கன்றை ஏன் இங்கு நடுகிறீர்? இது மரமாக வளர்ந்து காய்த்து அதன் பழங்களால் கிடைக்கும் இலாபத்தை நீர் அனுபவிப்பதற்குள் இறந்து விடுவீரே” என்றார்.
அதற்கு அக்கிழவர், “சக்கரவர்த்திகளே! இதுவரை என் முன்னோர்கள் நட்ட மரங்களிலிருந்து நான் பழங்கள் பறித்து வாழ்ந்து வந்தேன். அதுபோல் எனக்குப் பின்னால் வருபவர்கள் பழம் பறித்து வாழ்வதற்காக நான் மரம் நட்டு வைத்துவிட்டுப் போவது என் கடமையல்லவா?” என்றார்.
அதைக்கேட்டு அவரைப் பாராட்டிய பாபர் அவருக்கு ஒரு பொன் முடிப்பை பரிசளித்தார். அக்கிழவர் அகமகிழ்ந்து “ஐயா! மரம் நட்டவர்கள் அனைவரும் மரம் வளர்த்த பின்னர்தான் இலாபம் அடைவார்கள். ஆனால் நானோ இக்கன்றை நடும் பொழுதே உங்களிடமிருந்து பொன் முடிப்பை இலாபமாக அடைந்தேன்! மற்றவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்கிற எண்ணமே நமக்கு நன்மை செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!” என்றார்.
அந்த வாசகத்தையும், சாதுரியத்தையும் பாராட்டிய பாபர் மீண்டும் அவருக்கு ஒரு பொன் முடிப்பைப் பரிசளித்தார். கிழவர் அதையும் வாங்கிக்கொண்டு “ஐயா! இந்த மரங்களை நட்டவரெல்லாம் ஆண்டிற்கொருமுறைதான் பயனடைவார்கள். ஆனால் நானோ அல்லாவின் அருளினாலும் தங்களின் கருணையாலும் இதை நட்ட அன்றே இருமுறை பலனடைந்தேன்!” என்று கூறி, பாபரால் பாராட்டப்பெற்று மீண்டும் ஒரு பொன் முடிப்பைப் பரிசாகப் பெற்றுக்கொண்டார்.
அதற்கு மேல் அங்கு நின்றால் கிழவர் மேலும் ஏதாவது சொல்லி கையிலுள்ள பணமுடிப்புகளை எல்லாம் பரிசாகப் பெற்றுவிடுவார் என்று நினைத்துப் பாபர் கிளம்பினார்.
அப்போது “சற்றுப் பொறுங்கள்!” என்ற அந்தக் கிழவர் தம் வேஷத்தைக் கலைத்தார். அந்த வேஷத்தில் தெனாலிராமன் தான் வந்து சாதுர்யமாக பொன் முடிப்புகளைப் பரிசாகப் பெற்று விட்டான் என்பதைக் கண்டதும் பாபர் அவனை பெரிதும் பாராட்டித் தம் மெய்க்காப்பாளனிடமிருந்த பொன் முடிப்புகளையெல்லாம் அள்ளிக்கொடுத்து “ராமா! உன் வெற்றியை அரசரிடம் போய்ச் சொல்!” என்று வழியனுப்பினார்.
தென்னகத்தின் திறமையை டில்லியில் நிலைநாட்டி வந்த தெனாலிராமனுக்கு இராயர் தாம் வாக்களித்தபடி ஆயிரம் பொன் பரிசளித்தார்.