சாக விரும்பும் நிலை | தமிழ் கதைகள் | The state of wanting to die | tenali Raman story
பகை நாடான கோல்கொண்டா ராஜ்யத்தின் மன்னன் சூழ்ச்சியால் கிருஷ்ணதேவராயரைக் கொல்ல நினைத்து தன் வேவுகாரன் ஒருவனை விஜயநகரத்துக்கு அனுப்பினான்.
அந்த ஒற்றன் விஜயநகர மன்னரிடம் தெனாலிராமனுக்குள்ள செல்வாக்கை கண்டு நயவஞ்சகமாக இராமனின் வீட்டிற்கு வந்து, தான் வெகு தொலைவிலிருந்து வந்த தாய்வழி உறவினன் என்று கூறி, ராமனின் வீட்டிலேயே தங்கினான்.
ஒரு சமயம் தெனாலிராமனின் குடும்பத்தார் ஒருவரும் வீட்டில் இல்லாத சந்தர்ப்பமாகப் பார்த்து அந்த ஒற்றன். “உடனே என் வீட்டிற்குத் தனியாக வந்தால் ஒரு விநோதத்தைக் காணலாம்!” என்று தெனாலிராமன் எழுதியது போல் ஒரு கடிதத்தை கிருஷ்ணதேவராயருக்கு எழுதியனுப்பினான்.
அக்கடிதத்தைப் படித்த மன்னர்பிரானும், அதை மெய்யென்று நினைத்து, தெனாலிராமனின் வீட்டிற்குத் தனியே வந்தார். அந்தச் சமயத்தில் அந்த வஞ்சக ஒற்றன் தன்னிடமிருந்த ஒரு அரிவாளால் எதிர்பாராத விதமாக மன்னர் பிரானைக் குத்திக்கொல்ல முயன்றான்.
நல்லவேளையாக இராயர் உயிர்தப்பி அவ்வஞ்சக ஒற்றனின் கையைப் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். அச்சப்தத்தைக் கேட்டு அங்கு ஓடி வந்த மக்கள் அனைவரும் அந்த ஒற்றனைக்கட்டி உதைத்து அங்கேயே அவனைக் கொன்றுவிட்டனர்.
எதிரி நாட்டு ஒற்றனும், கொலைகாரனுமான ஒருவனுக்கு வீட்டில் தங்க இடம் கொடுத்து ஆதரித்த தெனாலிராமனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று ராஜகுரு வேண்டினார். தெனாலிராமன் நடந்ததைச் சொல்லி இராயரை மன்னிக்கும்படி இறைஞ்சினான்.
அதற்கு இராயர், “இராமா! பொதுவான சட்டத்திற்கெதிராக நான் உன்னை மன்னிக்க இயலாது. ஆனால் உன் மீதுள்ள அபிமானத்திற்காக நீ எப்படிச் சாகவிரும்புகிறாயோ அப்படிச் சாகலாம் என்று உத்திரவிடுகிறேன்!” என்றார்.
அதை வாக்குறுதியாகப் பெற்றுக்கொண்ட தெனாலிராமன், “அரசே ! எனக்கு வயது முதிர்ந்து இந்தத் தலை கழுத்தை விட்டுப்போக விரும்பும்தொண்டு கிழவனாயிருக்கும் நிலையில்தான் நான் சாக வேண்டும் என்று விரும்புகிறேன்!” என்று சிரித்தான்.
இராயரும் “நீ அவ்வாறே தொண்டு கிழவனாகும் போது சாகலாம்!” என்று சிரித்து அவனை விடுதலை செய்துவிட்டார்.