பார்த்திபன் மீது பாதரட்சையை வீசுதல் | தமிழ் கதைகள் | Throwing shoes at Parthiban | tenali Raman story
ஒருநாள் இராயர், “தெனாலிராமா! நீ வாய் வார்த்தை ஜாலங்கள் செய்யத் தெரிந்த வெறும் விகடகவியே தவிர உன்னால் நடைமுறையில் எந்தப் பிரமாதமான காரியத்தையும் செய்ய முடியாது!” என்றார்.
அதற்கு இராமன், “அரசே! தங்களிடம் அதிகப் பக்தி சிரத்தையுள்ள ஒருவரை தம் பாதரட்சையைக் கழற்றித் தங்கள் மீது விட்டெறியும்படி என்னால் செய்ய முடியும்! இதை நான் மூன்று மாதத் தவணைக்குள் நிரூபித்துக் காட்டாவிடில் எனக்குத் தண்டனை அளியுங்கள்!” என்று சபதம் செய்தான்.
இரண்டு மாதங்கள் கழித்து மலை நாட்டுத் தலைவன் ஒருவனின் புத்திரியான சாரதாம்பாளை இராயர் திருமணம் செய்து கொள்ள நிச்சயித்தார். திருமணப் பெண்ணின் தகப்பனோ இராயரின் அரச குலச்சம் பிரதாயப்படி ஒரு சடங்கைக்கூட விடாமல் நடத்த வேண்டுமென விரும்பினான்.
அவனிடம் தெனாலிராமன் சென்று, “மலைநாடா! எங்கள் இராயரின் அரச பரம்பரை பாதுகா என்னும் பட்டாபிஷேகம் செய்த பரதாழ்வாரை வழிபடுவதால், பழைய சம்பிரதாயப் படி மணப்பெண் கிரகப்பிரவேசத்திற்கு முன்னால் தன்னுடைய பட்டு மிதியடியைக் கழற்றி மணமகன்மீது விட்டெறிய வேண்டும்! போர்த்துக்கீசியரின் திருமணங்களில் கூடச் செருப்பெறியும் சடங்கைப் பார்த்திருப்பாய்!” என்றெல்லாம் கூறி திருமணத்தின் போது மணப்பெண் தன் காலில் அணிந்திருந்த அழகிய வெல்வெட் செருப்பைக் கழற்றி மணமகனான இராயர் மீது விட்டெறியும்படிச் செய்துவிட்டான்.
அவன் சொன்னதை நிரூபித்துக் காட்டியதால் அவனை மன்னித்ததாக இராயர் கூறினாலும் உள்ளூரக் கோபம் கொண்டார்.