சமையற்காரனின் சாமர்த்தியம்! | தமிழ் கதைகள் | Chef dexterity | tamil kathaigal
ஒரு வீட்டில் மதியூகி என்ற ஒரு சமையற்காரன் இருந்தான். ஒருநாள் அந்த வீட்டு முதலாளி தன் சமையற்காரன் கையில் இரண்டு மாம்பழங்களை கொடுத்து, “இன்றைக்கு என் சிநேகிதரொருவர் நம் வீட்டிற்கு வருகிறார் .
அதனால் இந்த மாம்பழங்களின் தோலைச் சீவி துண்டங்களாக நறுக்கி வை. அவர் வந்ததும் எங்களிருவருக்கும் இப்பழங்களை கொண்டுவந்து கொடு!” என்று சொல்லி விட்டுத் தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றான்.
சமையற்காரனும் மாம்பழங்களின் தோலைச் சீவி நறுக்கினான். அப்போது பழம் எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக ஒரு துண்டத்தை எடுத்து ருசி பார்த்தான்.
ருசி கண்ட பூனைக்கு மதி கெட்டுவிடுவது போல், மாம்பழம் மிகவும் தித்திப்பாயிருக்கவே எல்லாவற்றையும் சமையற்காரனே தின்று விட்டான். அந்த நேரத்தில் முதலாளியின் நண்பரும் வீட்டிற்கு வந்தார்.
சிறிது நேரம் கழித்து அவ்வீட்டு முதலாளி சமையற்காரனிடம் வந்து “என்னப்பா! பழங்களை நறுக்கி விட்டாயா?” என்று கேட்டதும் சமையற்காரன், “தோல் கூட சிவ முடியாமல் நம் கத்தி மழுங்கியிருக்கிறது!” என்று கூறி ஒரு கத்தியை தன் முதலாளியிடம் காண்பித்தான்.
உடனே அந்த முதலாளி சமையற்காரனிடமிருந்த கத்தியை வாங்கிக் கொண்டு போய் ஒரு கல்லில் நன்றாகத் தீட்ட ஆரம்பித்தார். அப்போது சமையற்காரன் இதுதான் சமயம் என்று நினைத்து தன் முதலாளியின் நண்பரிடம் சென்று, “ஐயா! நீங்கள் யாரோ எனக்குத் தெரியவில்லை.
பார்த்தால் பாவமாக இருக்கிறீர்கள்! நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்? எனது முதலாளிக்கு உங்கள் மேல் ஏதோ கோபம் போல் தோன்றுகிறது.
உம்முடைய காதுகள் இரண்டையும் சீவியனுப்புவதற்காக உம்மை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்!” என்று சொல்லி அவரைக் கூட்டிக் கொண்டு போய்த் தன் முதலாளி கத்தி தீட்டிக் கொண்டிருப்பதை கதவின் இடுக்கு வழியே பார்க்கச் சென்னான்.
அந்தக் காட்சியைக் கண்ட நண்பன் சமையற்காரன் கூறியது உண்மையென நம்பி தப்பித்தோம் பிழைத்தோமென்று அலறியடித்துக் கொண்டு ஓடினான்.
உடனே சமையற்காரன் தன் முதலாளியிடம் சென்று “முதலாளி! உங்களுடைய நண்பர் இரண்டு மாம்பழங்களையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்!” என்று கூக்குரலிட்டான்.
கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்த முதலாளி அந்தக் கத்தியைக் கூடக் கீழே போடாமல் வாசலுக்கு வந்து, தன்னுடைய நன்பனைக் கூவியழைத்து, பழத்தைக் கொடுத்துவிட்டுப் போ என்ற சாடையில், “ஒன்றே ஒன்று தா!” என்று கத்திக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்து ஓடினான்.
அது கேட்ட அந்த நண்பன் தன் காதுகளில் ஒன்றை கேட்கிறானோ என்று நினைத்துக் கொண்டு முன்னின்றும் அதிக வேகத்துடன் பறந்தோடினான். அந்த முதலாளியும் முடிந்தவரை தன் நன்பனைத் துரத்திவிட்டு, அவனை பிடிக்க முடியாமல் வீடு வந்து சேர்ந்தான்.
சமையற்காரன் தன்னுடைய சமர்த்தை நினைத்து நினைத்து சந்தோஷமடைந்தான் .
Nice